December 7, 2022

ஜெ.வைப் பின்பற்றி எடப்பாடியும் பன்னீரும் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடட்டுமே!.

ட்சியிலும் ஆட்சியிலும் ஒருவரே அதிகாரம் செலுத்த வேண்டும். இரட்டைத் தலைமை சரிப்பட்டு வராது’’ – இப்படி சொன்னது யார் தெரியுமா? அ.தி.மு.க-வை உருவாக்கிய எம்.ஜி.ஆர்-தான். எம்.ஜி.ஆரின் இந்தப் பொன்மொழிக்கு 2019-ல்தான் பொன்விழா ஆண்டு. பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அ.தி.மு.க-வுக்கு வரலாறுகள் உண்டு. வரலாறுகள் திரும்ப படிப்பதற்கு மட்டுமல்ல, திருந்துவதற்கும்தான்!

வரலாறு 1

’’தம்பி வா… தலைமையேற்க வா !’’ என அண்ணா சொன்னது நாவலர் நெடுஞ்செழியனைத்தான். கட்சியிலும் ஆட்சியிலும் நம்பர் 2-வாக இருந்த நெடுஞ்செழியன், அண்ணா மறைந்த பிறகு, தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டார். நெடுஞ்செழியன்தான் அடுத்த முதல்வர் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தி.மு.க முன்னோடிகள் கலைஞர் முதல்வர் ஆவதை விரும்பினார்கள். அதைக் கலைஞரிடம் வலியுறுத்தினார்கள். ’’அண்ணாவின் இடத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலும் திறமையும் படைத்தவர் கலைஞர்தான்’’ என்றார் பெரியார்.

தி.மு.க எம்.எல்.ஏ-க்களை அழைத்து அவர்களின் கருத்தைக் கேட்டார் எம்.ஜி.ஆர். அவர்கள் கலைஞருக்கு ஆதரவாக இருப்பதை அறிந்தார். ’’பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் விருப்பத்தை உதாசீனப்படுத்தக் கூடாது’’ என எம்.ஜி.ஆர் வற்புறுத்த… கலைஞரும் ஏற்றுக் கொண்டார்.

அடுத்து, நெடுஞ்செழியனைச் சமாதானப்படுத்தும் படலம். ’’முதலமைச்சராகத்தான் இருப்பேன். வேறு எந்த அமைச்சர் பொறுப்பையும் ஏற்க மாட்டேன்’’ என்று கறாராகச் சொல்லிவிட்டார் நெடுஞ்செழியன். ’’துணை முதல்வராக இருங்கள். சட்டமன்றத்தில்கூட உங்களுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்து கொள்கிறேன்’’ எனக் கலைஞர் சொன்ன போதுகூட, நெடுஞ்செழியன் மசியவில்லை.

முதல்வரைத் தேர்வு செய்வதற்காக 1969 பிப்ரவரி 9-ம் தேதி தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூடினார்கள். கலைஞரின் பெயரை அமைச்சர் கே.ஏ.மதியழகன் முன்மொழிய, அமைச்சர் சத்தியவாணி முத்து வழிமொழிந்தார். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் ஏ.கோவிந்தசாமி, ’’வேறு யாராவது போட்டியிடுகிறீர்களா?’’ எனக் கேட்டார். நெடுஞ்செழியன் பெயரை எஸ்.ஜே.ராமசாமி முன்மொழிந்தார், வி.டி.அண்ணாமலை வழி மொழிந்தார். உடனே நெடுஞ்செழியன் எழுந்து, ’’சட்டமன்ற கட்சித் தலைவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் நான் போட்டியிட விரும்பவில்லை’’ என அறிவித்தார். கலைஞர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த நாள் கலைஞர் அமைச்சரவை பதவியேற்றது.

“அமைச்சரவையில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தை இதுவரை வகித்து வந்த நான், இப்போது முதலமைச்சராக தேர்வு செய்யப் படவில்லை. சாதாரண சட்டமன்ற உறுப்பினராக இருப்பேன். கட்சிப்பணியில் முழுமையாக ஈடுபடுவேன்’’ எனப் பத்திரிகையாளர்களிடம் சொன்னார் நெடுஞ்செழியன். இதற்கு அர்த்தம், ஆட்சி அதிகாரம் பறிபோய்விட்டது. கட்சியின் அதிகாரம் தன்வசம் இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், நெடுஞ்செழியனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. 1969 ஜூலை 26-ம் தேதி, தி.மு.க பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்காகப் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. அப்போது நெடுஞ்செழியன், “பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன்’’ என்றார்.

முதல்வராகக் கலைஞரும் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் இருந்தால், பிரச்னை ஏற்படும். இரட்டைத் தலைமை சரிப்படாது என்கிற வாதம் வலுவாக எழுந்தது. கலைஞரை முதல்வராக்கக் காய் நகர்த்திய அதே எம்.ஜி.ஆர்-தான், கட்சியிலும் கலைஞர்தான் தலைமை தாங்க வேண்டும் என முயற்சிகளை முன்னெடுத்தார். கலைஞர் அமைச்சரவைக்கு 1969 ஏப்ரலில் சென்னை ஆயிரம் விளக்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய எம்.ஜி.ஆர், “முதல் அமைச்சராக இருப்பவரே தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும் இருக்க வேண்டும்’’ என்றார். அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த எம்.ஜி.ஆர், “கட்சியின் தலைமை ஒருவரிடமும் ஆட்சியின் தலைமை இன்னொருவரிடமும் இருந்ததால்தான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் சீர்குலைந்தது. அந்த நிலை தி.மு.க-வுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இரண்டு பதவிகளையும் ஒருவரே வகிக்க வேண்டும்’’ என்றார்.

கடைசியில் போட்டியைச் சமாளிக்கச் சமரசத் திட்டம் தயாரானது. தி.மு.க உருவானபோது தலைவர் பதவி ஏற்படுத்தப்படவில்லை. அவைத் தலைவர் பதவியும் பொதுச்செயலாளர் பதவியும்தான் இருந்தன. இதில் திருத்தம் கொண்டு வர முடிவானது. அவைத் தலைவர் பதவி, தலைவர் என மாற்றப்பட்டது. பொதுச் செயலாளர் நிறைவேற்ற வேண்டிய பணிகளைத் தலைவருடன் கலந்துபேசி இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் எனத் திருத்தப்பட்டது. இதனால் தலைவராகக் கலைஞரும் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் தேர்வானார்கள். மோதல் முடிவுக்கு வந்தது.

வரலாறு 2

எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலும் நெடுஞ்செழியன்தான் நம்பர் 2. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதல்வராக நியமிக்கப் பட்டிருந்த நெடுஞ்செழியன், முதல்வர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். உடனே எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், ’’கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு இணங்க முதல்வர் பதவியேற்கச் சம்மதிக்கிறேன். நாவலர் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் ஜானகி ஆட்சி கவிழ்ந்தது. சட்டசபை கலைக்கப்பட்டது. ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

1989 தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோதும், ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் ஜானகி அணி ஒரு இடத்திலும் வென்றது. அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்குத்தான் செல்வாக்கு என்பதைத் தேர்தல் முடிவு சொல்லியது. ஜானகி ஒதுங்கிக் கொண்டார். இரண்டு அணிகளும் ஒன்றாகி இரட்டை இலைச் சின்னத்தை மீட்டன.

இன்றைய அ.தி.மு.க-வில் எழுந்திருக்கும் ‘ஒற்றைத் தலைமை’ கோரிக்கைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே வரலாறு விடை எழுதி விட்டது. இப்போது ஏற்பட்டிருக்கும் ‘ஒற்றைத் தலைமை’ புகைச்சலுக்கு அந்தக் கட்சியைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆரே தீர்க்கதரிசனமாகத் தீர்வு எழுதிவிட்டார்.

இரட்டைத் தலைமைக்கு எதிராக எம்.ஜி.ஆர் கருத்து தெரிவித்து 53 ஆண்டுகள் ஆகிவிட்டன. எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்கும் எடப்பாடியும் பன்னீரும் ஒற்றைத் தலைமையை ஏற்காதது அவருக்கே செய்யும் துரோகம். எம்.ஜி.ஆரை மட்டுமல்ல… ஜெயலலிதாவையும் கூட இவர்கள் மதிக்கவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை எதிர்த்துக் களமாடி கட்சியில் தனக்குத்தான் செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தேர்தலில் நிரூபித்து காட்டினார் ஜெயலலிதா. அப்படி நிரூபித்துக்காட்டுவதற்குப் பன்னீரும் எடப்பாடியும் தைரியசாலிகள் இல்லை.

அ.தி.மு.க-வில் மட்டும்தான் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்கான வாக்குரிமை, கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து தலைமை தேர்வு செய்யப்படுவது சரியாக இருக்காது என நினைத்த எம்.ஜி.ஆர், இந்த விதியைக் கட்சியின் சட்டதிட்டத்தில் கொண்டு வந்தார். கட்சியின் எந்த விதியையும் உருவாக்கவோ, திருத்தம் செய்யவோ, நீக்கவோ பொதுக்குழுவுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இந்த விதியை மாற்றவோ திருத்தவோ முடியாது.

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த இந்த விதியை ஜெயலலிதா மாற்றவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் மதிப்பதாக மார்தட்டிக் கொள்ளும் எடப்பாடியும் பன்னீரும் மாற்றிவிட்டார்கள். பொதுச் செயலாளர் பதவியை ஒழித்து விட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்படுத்தி உட்கார்ந்து கொண்டார்கள். எம்.ஜி.ஆர் மாளிகை எனப் பெயர் வைத்தால் போதுமா? அங்கே உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதியை மிதித்தால் சரியாகுமா? .

ஜெயலலிதாவைப் பின்பற்றி எடப்பாடியும் பன்னீரும் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடட்டும். கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து யாருக்குச் செல்வாக்கு உண்டு என நிரூபிக்கட்டும். இரட்டைத் தலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் உதறல் கண்டவர்கள் சட்டமன்றத் தேர்தலில் சரிந்தவர்கள் உட்கட்சித் தேர்தலைச் சந்தித்து, தலைமைக்கான தகுதியை நிரூபிப்பார்களா?

– ✍️எஸ்.ஏ.எம். பரக்கத் அலி