January 26, 2022

பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்வு – மத்திய அமைச்சரவை முடிவு!

ந்தியாவில் 18 முதல் 21 வயதுக்குள் திருமணம் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டின் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி, குறைந்தபட்ச வயதுக்கு கீழ் உள்ள ஆண் அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆனாலும் உலகில் நடைபெறும் மூன்று திருமணங்களில் ஒன்று இந்தியாவில் அரங்கேறி வருகிறது. உலகளவில் இந்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு 33 சதவிகிதம். தேசிய அளவில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களாக உள்ளன. பாரம்பரியம், பாலின சமத்துவமின்மை, வறுமை மாதிரியானவை இந்தியாவில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெற காரணமாக பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடி 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்தை அறிவித்தார். இந்த நிலையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக இந்த திருமண வயது உயர்வு தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க நிதி ஆயோக் சிறப்புக் குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அக்குழுவில் அரசுத்துறை நிபுணர் வி.கே.பால், சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள், மகளிர் மற்றும் சிறார் வளர்ச்சித் துறை அதிகாரிகள், சட்டத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர். இந்தக் குழு தனது பரிந்துரைகளை கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கியது. அதில் 21 வயதில் திருமணம் நடந்தால்தான் பெண்களால் ஆரோக்கியமான முறையில் கர்ப்பம் தரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று தற்போது 21 வயதாக திருமண வயதை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் படியாக அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறார் திருமண சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.