October 21, 2021

””ஆண்மை” தானே இந்த ஊரில் “ஹீரோயிஸம்”?” – லீனா மணிமேகலை ரியாக்‌ஷன்

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து பிரபலமான நடிகை பாவனா கடந்த வாரம் ஓர் நாள் இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பிவந்துகொண்டிருந்தார். எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அங்காமலி அருகே உள்ள அதானிப் பகுதியில் அவர் கார் வந்துகொண்டிருந்தபோது மர்மக் கும்பல் ஒன்று காரை வழிமறித்தது. வேனில் வந்த அந்தக் கும்பல் பாவனாவின் காரை மோதியது. அந்தச் சூழலைப் பயன்படுத்தி பாவனாவின் காருக்குள் புகுந்தது மர்மக் கும்பல் டிரைவர் மார்டினைத் தாக்கி வெளியேற்றி, எதிர்பாராதவிதமாக பாவனாவை அதே காரில் வைத்து கடத்தியது. ஒன்றை மணி நேரம் காரில் பாவனாவுக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்தது. பலரிவட்டோம் என்கிற இடம் வருகிறவரை இந்தத் தொல்லை நீடித்துள்ளது. கூடுதலாக பாவனாவைப் புகைப்படம் எடுத்தும் வீடியோவில் பதிவு செய்தும் அத்துமீறல் நிகழ்த்தப்பட்டது. பிறகு காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.இதையடுத்து காகாநாடில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று உதவி கோரியுள்ளார் பாவானா.

leena feb 22

பிறகு இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. பாவனாவின் முன்னாள் கார் டிரைவர்  சுனில் குமார் அந்தக் கும்பலில் இருந்து காருக்குள் நுழைந்ததாக பாவனா கூறியுள்ளார். மேலும் தற்போது தனக்கு ஓட்டுநராக உள்ள மார்டினுக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறேன் என்றார். அதே சமயம் நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. திலீப் தனது முதல் மனைவியான பிரபல நடிகை மஞ்சு வாரியரை பிரிவதற்கு நடிகை பாவனா தான் காரணமாக இருந்தார் என மலையாளப் பட உலகில் செய்திகள் கசிகின்றன. இதனால் இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப் பட்ட நிலையில் திலீப் அதை மறுத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை பாவனா கடத்தப் பட்ட விவகாரத்தில் மலையாளப் பட உலகோடு தமிழ் திரையுலகினரும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த ஒரு இளம் நடிகைக்கே இத்தனை பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது எனில் பிற இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து எந்த விதத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்? இந்தியா முழுவதுமே மூன்று வயதுக்குழந்தை முதல் பிரபல நடிகை வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் பெண் இனத்தின் பாதுகாப்பு குறித்து தற்போது பரவலான அச்சமும், கடும் கண்டனமும்  பலதரப்பிலிருந்தும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு டி வி சேனல் நிர்வாகி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற ட்விட்டரில் எக்ஸ்போஸ் செய்த தகவல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழலில் இன்று பிரபல கவிஞர் லீனா மணிமேகலை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு இதோ::

2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன். ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்து தான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்று கொண்டிருந்தபோது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது.”வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்” என்று சொன்ன “இயக்குநரை” நம்பி காரில் ஏறினேன். ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது. திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்தக் காரின் சென்டரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது. என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்துப் போனேன்.

சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன். அலறினேன். இருபது நிமிடத்தில் விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது. என் பையில் ஒரு குறுங்கத்தி வைத்திருப்பேன். பொறியியல் கல்லூரி காலத்தில் இருந்து எனக்கு அது வழக்கம். அன்று அதற்கு வேலை வந்தது. ஒரு குறுங்கத்தி அந்த இயக்குநர் பொறுக்கியை என்னை என் வீட்டின் அருகில் இறக்கிவிட வைத்தது. என் மொபைலை திருப்பித் தர வைத்தது. இன்று இவ்வளவு ரைட்ஸ் பேசும் எனக்கு அன்று நடந்ததை நெருக்கமானவர்களிடம் சொல்வதற்கு கூட தைரியமில்லை. ஊடக வேலை வேண்டாம் என்று கண்டித்துக் கொண்டிருந்த குடும்பம் இந்த நிகழ்வை காரணம் காட்டி வேலையில் இருந்து நின்றுவிட சொல்வார்கள் என்று அச்சம். “நோ” சொல்லிவிட்டதால் திரைத்துறை வட்டாரத்தில் செல்வாக்குள்ள அந்த “இயக்குநர்” என் பெயரைக் களங்கப் படுத்துவான் என்ற சிறுபிள்ளைத்தனமான பதட்டம் வேறு. எனக்குள்ளே புதைத்த பல கசப்புகளில் இந்நிகழ்வும் ஒன்று. பல வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்த்தால் இன்னும் நடுக்கமாகத்தான் இருக்கிறது.

இன்று நடிகர் பாவனாவுக்கு நிகழ்ந்த அநியாயத்திற்காக திரைத்துறை “ஹீரோக்களும்””இயக்குநர்களும்” “குரல்” கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லது. அப்படியே தங்களையும் தங்கள் படைப்புகளில் இருக்கும் பெண் வெறுப்பையும் பரிசீலனை செய்ய வேண்டும். சுட்டு விரலை உள்பக்கமாக இவர்கள் திருப்ப வேண்டும். “ஆண்மை” தானே இந்த ஊரில் “ஹீரோயிஸம்”? தன் மேல் விழ நேரிடும் நூறாயிரம் கேள்விகளுக்கும், பார்வைகளுக்கும் அஞ்சாமல், நடந்ததை வெளியில் சொல்லி சட்டத்தை நாடியிருக்கும் பாவனாவின் தோளோடு தோள் நிற்கிறேன்” என்று கூறியுள்ளார்.