November 29, 2022

இசைக்குயில் லதா மங்கேஷ்கர் காலமானார்!

ந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட நம் திரை உலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92.

இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார். இவர் 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். தந்தை பண்டிட் தீனாந்த் மங்கேஷ்கர் மராத்தி இசைக்கலைஞர், அம்மா குஜராத்தி.. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி லதா மங்கேஷ்கர் (92). இவரது சகோதரி ஆஷா போஸ்லேவும் புகழ்பெற்ற பின்னணி பாடகர்.

பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற லதா மங்கேஷ்கர் கடந்த மாதம் 11ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலையில் உடனடியாக முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலமானார்.

1942 ஆம் ஆண்டு சினிமாவில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் வறுமையில் வாடியது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது லதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தமிழில் அறிமுகம்

1955-ம் ஆண்டு திலீப் குமாரின் நடிப்பில் ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படம் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 9 பாடல்களையும், லதா மங்கேஷ்கரும், முகமது ரஃபியும் பாடியிருந்தார்கள். பின்னர் இந்தப் படம் ‘வான ரதம்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இதில் ’எந்தன் கண்ணாளன்’ பாடலை கம்பதாசன் வரிகளில் பாடினார் லதா. பாடலுக்கு இசை நவ்ஷத்.

ஆனால் 1952-ல் இந்தியில் வெளியான ஆண் திரைப்படம் ‘ஆண் முரட்டு அடியாள்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. அந்தப் படத்தில் ‘இழந்தேன் உன்னை அன்பே’, ‘நகரு நகரு’, ‘பாடு சிங்கார பாடலை’, ‘இன்று எந்தன் நெஞ்சில்’ ஆகியப் பாடல்களையும் லதா மங்கேஷ்கரே பாடியிருந்தார். ஆக, ஆண் படத்தின் மூலம் 1953-ம் ஆண்டே அவர் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார். இந்தப் படத்திற்கும் இசை நவ்ஷத், பாடல்கள் கம்பதாசன்.

லதா மங்கேஷ்கரை மீட்டு வந்த இளையராஜா

1956-ம் ஆண்டிற்குப் பிறகு வேறெந்த தமிழ் படங்களிலும் பாடாமல் இருந்தார் லதா மங்கேஷ்கர். அவரை 1987-ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடினார் லதா. ஆக, இது தான் அவர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல்!

அதன் பிறகு 1988-ல், இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை’ பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார். இன்றளவும் இந்தப் பாடல் பலரின் ஃபேவரிட் லிஸ்டில் உள்ளது.

பின்பு அதே 1988-ல் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை, பாடகர் மனோவுடன் இணைந்து டூயட்டாகவும், சோலோவாகவும் பாடிருந்தார். இந்தப் படத்திற்கும் இளையராஜா தான் இசை. அதன்பிறகு அவர் தமிழில் வேறெந்த பாடல்களையும் பாடவில்லை. ஆனால் இன்னொரு தமிழ் இசையமைப்பாளருடன் பணிபுரிந்திருக்கிறார் லதா மங்கேஷ்கர்.

ஆம்! 2006-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ரங் தே பசந்தி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘லூகா சூப்பி’ என்ற பாடலை ரஹ்மானுடன் இணைந்து பாடிருக்கிறார் லதா மங்கேஷ்கர். ஆக, நேரடி தமிழ் படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் மட்டும் தான் அவர் பணிபுரிந்திருக்கிறார். ஆனால், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், உதித் நாராயணன் ஆகியோருடன் இணைந்து இந்தியில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மஞ்கேஷ்கரை, “இசைக் குயில்” என அன்போடு அழைக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். நான்கு வயதிலேயெ படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக கோலோச்சியிருக்கிறார்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் பிரார்த்தனைகள்