November 29, 2021

ஐஸ்வர்யா ராயிடமிருந்து விவாகரத்து கோரி மனு!

பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், திருமணமான 6 மாதங்களுக்குள் தன் மனைவி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யக் கோரி குடும்ப நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீஹார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார்.

பாட்னாவில் உள்ள நோட்ரி டேம் அகாடெமியில் பள்ளிப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா ராய் டெல்லி யில் எம்.பி.ஏ பயின்றவர். இவர்கள் திருமணம் கடந்த மே 12-ம் தேதி பாட்னாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு கட்சிதலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்றனர். திருமணம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், பிரிந்து வாழ விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தேஜ் பிரதாப் யாதவின் வழக்கறிஞர் யஷ்வந்த் குமார் சர்மா கூறுகையில் ‘‘தேஜ் பிரதாப் மற்றும் அவரது மனைவியும் மணம் ஒத்து வாழவில்லை. அவர்கள் விவாகரத்து பெற விரும்புகின்றனர். இதுபற்றி விரிவாக கருத்து சொல்ல விரும்பவில்லை’’ எனக் கூறினார்.

இந்த நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தேஜ் பிரதாப் யாதவ் இதனை உறுதிபடுத்தியுள்ளார். ‘‘விவாகரத்து கோரி நான் மனுத்தாக்கல் செய்துள்ளது உண்மை தான். துயரத்துடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை’’ எனக் கூறியுள்ளார்.