லல்லு பிரசாத் முடக்கு வாத பாதிப்பால் நடக்க முடியாத நிலை

ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத்தால் முடக்கு வாதம் காரணமாக நடக்க இயலாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கால்நடைத் தீவன வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், உடல் நலக்குறைவு காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென முடக்கு வாதம் ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் டி.கே. ஜா கூறுகையில், லல்லு பிரசாத் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். சுற்றிச் செல்ல போதுமான இடம் இல்லை என்றாலும், அவரை நடக்க வைக்க நாங்கள் ஊக்குவிக்கிறோம். அவருக்கு பிடித்த உணவையே எடுத்துக் கொள்கிறார். அவரிடமிருந்து எந்த சிறப்பு கோரிக்கை எதுவும் இல்லை என்று டாக்டர் ஜா கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று, லல்லு பிரசாத்தின் உறவினர் விமல் யாதவ் மற்றும் இரண்டு பேர் அவரை சந்தித்தனர். அவரது உடல்நிலை சரியில்லை. எங்களை சந்தித்த பின் சந்தோஷமடை கிறார். அவர் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர். இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் தினமான 15-ம் தேதி அவர் தனிமையில் இருந்தார் என்று விமல் யாதவ் வருத்தம் தெரிவித்தார்.