February 5, 2023

லால் சிங் சத்தா- விமர்சனம்!

1994ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் ‘பாரஸ்ட் கம்ப்’. டாம் ஹான்க்ஸ் நடிப்பில் ராபர்ட் செமெக்கிஸ் இயக்கத்தில் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த விஷுல் எபெக்ட்ஸ், சிறந்த தழுவலுக்கான திரைக்கதை, சிறந்த படத் தொகுப்பு என இப்படம் அந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. கால்நூற்றாண்டு கழிந்த நிலையில் கொஞ்சம் மாற்றம் செய்து ஹிந்தியில் லால் சிங் தத்தா என்ற பெயரில் வழங்கி இருக்கிறார்கள். தமிழிலும் வந்திருக்கும் இந்த ஒற்றை சினிமாவில் காதல், வாழ்வியல், ஆசை, மன்னிப்பு, பாசம் என அனைத்தும் நிறைந்துள்ளது. இந்த கதை நடக்கும் காலக்கட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற பல முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் போன்றவற்றையும் திரைக்கதையுடன் இணைத்துள்ளனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் இந்திராகாந்தி கொலை, அத்வானி பிரச்சாரம், பாபர் மசூதி இடிப்பு போன்றவை இடம்பிடித்துள்ளது. மேலும் மதத்தின் பெயரால் நடைபெறும் கலவரத்தை மலேரியா என்று விமர்சனம் செய்துள்ளனர். அதற்கான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

கதை என்னவென்றால் நாயகன் லால் சிங் சத்தா (அமீர்கான் ) ஒரு ரயில் பயணத்தின் போது சக பயணிகளிடம் தன் கதையை சொல்கிரார் அதில் லால் சிங் சத்தாவிற்கு சிறுவயதில் காலில் பிரச்னை இருந்ததால் அவரால் சரியாக நடக்க முடியாது மற்றும் சில விஷயங்கள் அவருக்கு தாமதமாக தான் புரியும், இதனால் எல்லோரும் இவரை முட்டாள், லூசு, மெண்டல் என்று அசிங்கப்படுத்துவார்கள் ஆனால் இவரின் அம்மா இவருக்கு தைரியத்தை கூறி வளர்க்கிறார் இவரின் பள்ளி வாழ்க்கையின் போது தோழியாக இருக்கிறார் ரூபா (கரீனா), ரூபாவும் இருக்கு சில சமயங்களில் ஹீரோவுக்கு அறிவுரை கூறுகிறார், பிறகு இருவரும் சேர்ந்தே கல்லூரியில் படிக்கின்றனர் அடிக்கடி லால் ரூபாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்வாயா என கேட்பார் ஆனால் அதற்கு ரூபா பதில் சொல்லாமலே இருப்பார். ஆனால் கல்லுரி முடிந்ததும் லால் இராணுவத்திற்கு சென்று விடுவார். ரூபா நடிகையாகி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதனை நோக்கி நகர்கிறார், இராணுவத்தில் பாலு (நாக சைதன்யா) லால் சிங் சத்தாவிற்கு நண்பனாக கிடைக்கிறார், லால் சிங் சத்தாவிற்கு எப்பொழுதுமே ரூபாவின் நினைப்புதான் அந்த நினைப்போடு வருடங்கள் நகர்கின்றன கடைசியில் லால் ரூபாவை சந்தித்தாரா ? மற்றும் அவரை திருமணம் செய்தாரா ? இல்லையா ? என்பதுதான் லால்சிங் சத்தா கதை…!

நாயகன் ஆமீர்கான் இந்த படத்தின் உயிரே தான்தான் என்பதை உணர்ந்து தன் பங்களிப்பை பர்ஃபெக்டாக வழங்கி அசத்தி இருக்கிறார்..அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என ‘லால் சிங் சத்தா’ கேரக்டரை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் . குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்ட வைக்கிறது.

ரூபாவாக கரீனா கபூர் நடித்துள்ளார். சிறுவயதிலேயே அப்பாவின் தொல்லை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறும் அவர், நாடோடியாக செல்வதும், அதிக ஆண் நண்பர்களுடன் பழகுவதும், லால் சிங் சத்தாவின் காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் குழம்புவதும் என தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக கூடுதல் உழைப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.ஷாருக்கானின் கெஸ்ட் ரோல் அப்ளாஸ் அள்ளுகிறது. லெஃப்டினட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

கேமராமேன் சத்யஜித் பான்டே இந்தியாவின் பல பகுதிகளை தன் கேமராவில் மிக அழகாக பதிவு செய்துள்ளார். ப்ரீதம் இசையில் தமிழ்ப் பாடல்களும், பின்னணி இசையும் ரிசிக்க வைக்கின்றன.

இப்படத்தின் ஒரிஜினலான் தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் அமெரிக்கவின் அரசியல் கதையோடு ஒருங்கே நகரும், அடிக்கடி அமெரிக்க அரசியலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம், குடியரசுத் தலைவர்களுடன் அதிபர் உரையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதிலும் அதே போல இந்திய அரசியல் குறித்த காட்சிகளையும் ராணுவத்தில் லால் சிங் சத்தா பணியாற்றிய சம்பவங்கள், கார்கில் போர் உள்ளிட்டவற்றை இந்திய ரசிகர்களுக்காக மாற்றி எழுதியதிலேயே அதுல் குல்கர்னி ஸ்கோர் செய்து விட்டார். அதை படமாக்கிய விதத்தில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் அசத்தி உள்ளார்.

இதை எல்லாம் தாண்டி நம்பகத்தனமை இல்லாத காட்சிகளும் அதிகம் சேர்ந்து பொறுமையை சோதித்து விடுவதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்

மொத்தத்தில் லால் சிங் சத்தா -ஒரு க்ளாஸிக் சினிமா

மார்க் 3.5/5