லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு : மத்திய அமைச்சர் மகன் ஜாமின் ரத்து!

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு : மத்திய அமைச்சர் மகன் ஜாமின் ரத்து!

க்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் ஒரு வாரத்திற்குள் சரணடையவும் உத்தரவிட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பா.ஜ.க.வினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளது என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக உத்தரப் பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட் வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த பிப்.10-ல் ஜாமின் வழங்கியது. ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து விவசாயிகள், வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 4-ம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் மீண்டும் புதிதாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கருத்தை அறிந்த பிறகே ஆசிஷ் மிஸ்ரா ஜாமின் குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

லக்கிம்பூர் கலவர வழக்கில் ஆசிஷ் மிஸ்ரா ஜாமின் ரத்தானதால் அவரது தந்தை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லக்கிம்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியை அஜய் மிஸ்ரா விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!