March 22, 2023

மிழ் சினிமாக்களில் போலீஸ் சப்ஜெக்டுக்கு அடுத்தபடியாக அதிகம் அட்டாக் செய்யப்படும் சமாச்சாரம்தான் இந்த லாபம். அதாவது விவசாய நிலங்களை கபளீகரம் செய்ய நினைக்கும் தொழிலதிபர் ஒரு பக்கமும் மற்றோரு பக்கம் இந்த மண்தான் நம் உயிர் என்று விவசாயிகளிடமே நிரூபிக்கப் போராடும் நாயகனுக்குமான கதைதான் ..!ஆனால் தான் எடுத்தக் கதையை ஆகச் சிறந்த படைப்பாக வழங்கி தனிக் கவனம் பெற்று வந்த டைரக்டர் ஜனநாதன் இப்படத்தை முழுமையாக முடிப்பதற்குள் காலமாகி விட்டதாலோ என்னவோ பெரு லாபமாகி இருக்க வேண்டிய படம் ஜஸ்ட் மிஸ்ட் ஆகி விட்டது!

கதை என்னவென்றால் பெருவயல் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பக்கிரி என்கிற பக்கிரிசாமி (விஜய் சேதுபதி) சில ஆண்டுகள்,காணாமல் போன நிலையில் மீண்டும் ஊருக்குள் வருகிறார். அச்சமயம் ஊர் மக்கள் தங்களுக்கு வாழ்வாதராமாக இருந்த. விவசாயம் கை விட்டு விட்டதாக வருந்தி ஊரை விட்டே வேறெங்காவது போய் பிழைப்புப் பார்க்கலாம் என்று ஆயத்தமாகிக் கொண்டிருகிறார்கள். அச்சூழலில் பக்கிரியைப் பார்த்ததும் ஹேப்பியாகி பக்கிரியை வரவேற்று கொண்டாடுகிறார்கள். இதையடுத்து பக்கிரி கிராம ஊர் மக்களிடம் இதே மண்ணில் பொன் விளையும் பூமி என்று நம்பிக்கை அளிப்பதை அடுத்து ஊர் மக்கள் பக்கிரியை விவசாய சங்கத் தலைவராகவும் ஆக்கி விடுறார்கள். அதையடுத்து கூட்டுப் பண்ணை விவசாயம் தொடங்கி கிராம மக்கள் ஆதரவை பெறுகிறார். ஆனால் இதில் கடுப்பான பிசினெஸ்மேன் வணங்காமுடி (ஜெகபதி பாபு) பக்கிரி மீது திருட்டுப் பழி சுமத்த வைத்து. ஊர் மக்களே அவரை அடித்து விரட்ட ஏற்பாடு செய்கிறார். இதை எல்லாம் சகித்துக் கொண்டு மறுபடியும் பக்கிரி ஆகிய விஜய்சேதுபதி பிசினெஸ்மேனின் முகத்திரையை எப்படிக் கிழிக்கிறார் என்பதுதான் லாபம் பட ஸ்கீரின் பிளே.

விஜய் சேதுபதி வழக்கம் போல் தனக்கு கொடுத்த ரோலில் வந்து தன்னுடைய வழக்கமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.. ஆனால் எப்போது, யாரைப் பார்த்தாலும் தத்துவமாக பேசிக் கொண்டிருப்பது சில இடங்களில் எரிச்சல் வருவதை தவிர்க்க இயலவில்லை.நாயகி ஸ்ருதிஹாசனுக்கு இதில் ஸ்பெஷல் கேரக்டர் ஒன்றுமில்லை. சாய் தன்ஷிகாவும் வருகிறார்.. போனார். ஜெகபதிபாபு தனக்குக் கொடுக்கப்பட்ட வில்லன் ரோலுக்கு என்ன தேவையோ அதை கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி நண்பர்களாக கலையரசன், ரமேஷ் திலக் தனக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சரியான முறையில் செய்துள்ளார்கள். சண்முகராஜா, ஓஏகே சுந்தர், அழகன் தமிழ்மணி போன்றோர் கவனிக்க வைக்கிறார்கள்.

கேமராமேன் ராம்ஜியும், மியூசிக் டைரக்டர் இமானும் லாபத்துக்கு தேவையான துணையை செய்துள்ளனர்..

ஆரம்ப பேராவில் சொன்னது போல் இயக்குநர் ஜனநாதன் தன் படங்களில் கமர்ஷியல் விஷயங்களுக்கு பதில் சமூக அரசியல் விஷயங்கள் அதிக அளவில் இருப்பதை பார்த்துக் கொள்ளும் வழக்குடையவர். இது குறித்து ஜனநாதனிடம் ஒரு முறை பேட்டி கண்டபோது, ‘சினிமா என்பதை கொச்சையாக சொல்லவேண்டும் என்றால் இங்கு எதை வேண்டுமென்றாலும் வெற்றியடைய செய்யமுடியும். மூட நம்பிக்கையைக் கூட மாபெரும் வெற்றிப் படைப்பாக்க முடியும். மூட நம்பிக்கையையே வெற்றிப் படமாக்க முடியும் போது நம்பிக்கையை அதைவிட இன்னும் வெற்றிப்படமாக ஆக்க முடியும். அப்படி வெற்றிப் படமாக்க முடியவில்லை என்றால் அது ஆக்கம் செய்கிறவனின் குறைதான்’ என்று சொல்லி இருந்தார். அப்படி எண்ணத்திலும், வாழ்க்கையிலும் உறுதி பட வாழ்ந்தவர். அந்த ஜனநாதன் இந்தப் படத்தையும் தனக்கேயுரிய சிந்தனையுடன் நாட்டில் நிலவும் விவசாய நில ஆகிரமிப்பு, வணிக மய குழப்பம் தொடங்கி கார்ப்பரேட் கல்ச்சர் மற்றும் அடித்தட்டு மக்களின் பாதிப்பு போன்றவற்றை தன் பாணியில் ஷூட் பண்ணிக் கொண்டு போன நிலையில் அகால மரணம் அடைந்தார்.அப்படி இயக்குநர் ஜனநாதன் திடீரென மறைந்து போன நிலையிலும் அவர் புகழுக்கு பங்கம் வராமல் அவர் பாணியிலேயே மிச்ச சீன்களை யோசித்து பேட்ஜ் ஒர்க் செய்திருக்கும் புரொட்யூசர் விஜய்சேதுபதி & டீம்-க்கு தனி சல்யூட்.

மொத்தத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர் என்று தன்னை பெருமைப்படச் சொல்லிக் கொள்ளும் இயக்குநர் ஜனநாதன் சொல்லி வந்த சமூகச் சாடல் படமிது. ஒரு முறையாவது பார்த்து விடுவது கோலிவுட்டுக்கு நல்லது.

மார்க் 3/5