தமிழக பாஜக தலைவராக – யாருமே எதிர்பார்க்காத ‘எல்.முருகன்’ நியமனம்!
தமிழக பாஜக கட்சியை உயிர்ப்புடன் வைத்து தலைவராகச் செயலாற்றி கொண்டிருந்த, தமிழிசை சௌந்தரராஜனைக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அவருக்குப் பிறகு யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்று கடந்த 4 மாதத்திற்கு மேலாகக் குழப்பம் நிலவி வந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் அக்கட்சியின் நிர்வாகிகளிடம் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கருத்துக் கேட்கும் கூட்டம் நடந்தது.
அதன் முடிவில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், A.P. முருகானந்தம் உள்ளிட்ட நபர்களுள் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமிக்கபட்டுள்ளார் என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். எல். முருகன் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக உள்ளார்.
45 வயதுடைய எல்.முருகனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் ஆகும். இவர் 1977 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி பிறந்தார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவராக பதவி வகித்துவருகிறார். பிரதமர் நரேந்திரமோடிக்கு மிகவும் நெருக்கமான முருகன், சட்டப்படிப்பில், ph.D வரை படித்துள்ளார். அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரம், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் எல்.முருகன்தான் விசாரணையை முன்னெடுத்து வந்தார்.
தன் நியமனம் குறித்து … என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்துள்ளனர். அதற்கேற்றவாறு நான் செயல்படுவேன். தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.