August 3, 2021

பாஜக- வில் குஷ்பு – சில விளக்கங்கள்!

2010 மே மாதம் தி.முக.கவில் சேர்ந்தபோது:

“மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளில் தி.மு.க., தான் சிறப்பாகச் செயல்படுகிறது. அதன் கொள்கை பிடித்திருந்ததால் சேர்ந்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும், அவர்களின் கருத்தை எடுத்துச் சொல்ல முழு சுதந்திரம் கொடுக்கும் கட்சி தி.மு.க., தான்.”

2014 ஜூன் மாதம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில்:

“என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே தி.மு.க.விலிருந்தும், அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்.”

அக்டோபர் 12, 2020 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில்:

“களத்திலிருக்கும் மக்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத, மக்கள் அங்கீகாரம் இல்லாத சிலர் கட்சியின் உயர் பதவியில் அமர்ந்துகொண்டு கட்டளை பிறப்பிக்கிறார்கள். கட்சியின் நலனுக்காக உண்மையில் உழைக்கும் என்னைப் போன்றவர்களை அவர்கள் புறந்தள்ளுவ தோடு, ஒடுக்கவும் செய்கிறார்கள். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கட்சியிலிருந்து விலகுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்.”

அக்டோபர் 12, 2020 பா.ஜ.க.வில் இணைந்த பின்:

“பிரமதர் நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவர் தேவை என்பதை நான் புரிந்து கொண்டு உள்ளேன். இந்தியாவில் பல கோடிப் பேர் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். பாஜகவில் உள்ள தொண்டர்களை போலவே நானும் கட்சிக்காக பாடுபடுவேன்.  “மாற்றம் என்பது நிலையானது, இப்போது எனது புரிதல் மாறியுள்ளது” என்று காங்கிரசில் இருந்து பாஜகவில் சேர்ந்தது குறித்து குஷ்பூ தெரிவித்துள்ளார்.

குஷ்பூ, அவர் நோக்கில் தெளிவாக இருக்கிறார்.

கொள்கைக் குன்றுகள், மலைகள் மற்றும் கொள்கைக் குகைகள், பள்ளத்தாக்குகள் பார்த்து வளர்ந்தவர்கள் நாம். செரிமானப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.

நடிகர், நடிகையாக இருந்தவர்கள் ஆட்சி செய்த மாநிலம் இது. எண்ணற்ற நடிகர்கள் தமிழக அரசியலில் இருந்தார்கள். இருக்கிறார்கள். கட்சி நடத்துகிறார்கள். தேர்தலுக்கு நெருக்கமாக, புதிதாகத் தொடங்கப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு திராவிடக் கட்சிகளும் இரண்டு தேசியக் கட்சிகளும் நடிகர், நடிகைகளை பரப்புரைக்குப் பயன்படுத்துகின்றன.

குஷ்பூ பத்தாண்டுகளாக அரசியலில் இருந்திருக்கிறார். ஒரு திராவிடக் கட்சியிலும் ஒரு தேசியக் கட்சியிலும் அனுபவம் பெற்றவர். இப்போது, இன்னொரு கட்சிக்கு மாறியிருப்பதை, ஒரு நடிகை என்பதாலேயே குறை நோக்குடன் பார்க்கத் தேவையில்லை. பா.ஜ.க. சார்பில் அவர் பேசும் கருத்தால் எதிர்கொள்வதே சரி.

இந்தியாவுக்கே முன்னோடியாக, தென்மாநிலங்களில் முதன்மையாக –திரையும் அரசியலும் இழை தெரியாமல் கலந்து முட்டி, மோதிக் கொண்டாடியவர்கள் நாம். இந்தப் பின்னணியில், குஷ்பூ கட்சி மாறியது தமிழகம் முன்-பார்த்திராத ஒன்று போலப் பேசினால், நம்மை நாமே பகடி செய்தது போலாகும்.

இளையபெருமாள்