August 12, 2022

சிரிப்பு என்னும் நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்குத்தான் என்றில்லை. எப்போதும் நாமே தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து விடுபடவும், கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் போக்கவும்  துணைபுரியும். நாம் யாரும் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக இருக்க வேண்டியதில்லை. நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள சில நபர்களையும் சந்தோஷப்படுத்தினாலே போதும். வாழ்க்கை என்றும் இனிக்கும். அப்படியான நகைச்சுவையை புரிந்து திரைத்துறையில் ஜெயித்தவர்கள் பட்டியல் நீளம். அதிலும் நம் சினிமா ரிப்போர்ட்டர் சொன்னது போல், ‘100 ஆண்டுகள் பழமையான தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கடைசி வரை நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர்கள் ஒரு சிலர் இருந்த போதிலும் இவர்களில் பெரும்பாலானோர் கதாநாயகன் அந்தஸ்தை அடைய முயற்சி செய்தவர்கள்தான். தற்போதைய இளையதலைமுறை ரசிகர்களுக்கு விவேக், சந்தானம், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகன்களாக மாறியது மட்டுமே தெரியும். ஆனால் 50 வருடங்களுக்கு முன் நடித்த நகைச்சுவை நடிகர்களும் கதாநாயகன் வேடத்தில் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்களாக்கும்’ என்று சொல்லி முடிக்கும் முன்னர் அந்த சக்சஸ் பட்டியலில் இணையும் நோக்கில் யோகிபாபு என்பவர் மெயின் ரோலில் நடித்த ‘கூர்கா’ இன்று ரிலீசாகி இருக்கிறது. அந்த படத்தின் டைட்டில் கார்டிலேயே இந்த படத்தில் லாஜிக் பார்ப்போர், அல்லது கழுவி ஊற்றுவோருக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து விடுவதுதான் ஹைலைட்!

கதையின் மெயின் கேரக்டரே யோகிபாபு-வை மனதில் கொண்டு பின்னப்பட்டதை டைட்டில் போடும் போதே விவரித்து விடுகிறார்கள் அதாவது கூர்கா அப்பாவுக்கும், நம்ம சென்னையை சேர்ந்த லேடிக்கும் பிறந்த வாரிசுதான் யோகி பாபு. நடிப்புக்காகக் கூட தலைமுடியை வெட்ட தயாராக இல்லாத இவர் தமிழ்நாடு போலீசில் சேர்ந்து சாதிக்க ஆசைப்படுகிறார். ஆனால், அது வழக்கம் போல் நிறைவேறாததால். பிரைவேட் செக்யூரிட்டியாகி தன் குலத் தொழிலை தொடர் கிறார். அதையொட்டி வாட்ச்மேனாக இருக்கும் யோகியார் தான் காவல் காக்கும் வீட்டில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரியான எலிசாவை லவ்வுகிறார்.

இதனிடையே நகரில் ஒரு மாலில் செக்யூரிட்டியாக பணிக்கு அமர்த்தப்படுகிறார் இவர். ஒரு மிகப் பெரிய தீவிரவாத கும்பல், அந்த மாலில் உள்ள யோகி லவ்வும் யுஎஸ் ஆபீசர் லேடி உள்ளிட்ட பொதுமக்கள் சிலரை பிணையக் கைதிகளாக பிடித்துக் கொண்டு கோடிக் கணக்கில் பணம் டிமாண்ட் செய்கிறார்கள். அந்த ஹைடெக் தீவிரவாதி களிடம் இருந்து தன் லவ்வர் உள்ளிட்ட யோகிபாபு எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை(யாம்).

யோகி பாபு-க்கு காமெடி என்றால் என்னவென்று தெரியும் என புது இயக்குநர் ரொம்ப அதிகமாக நம்பி விட்டார். ஆனாலும் அவர் எதிர்ப்பார்த்த அளவு சமாளித்திருந்தாலும், ஏகப்பட்ட இடங்களில் தடுமாறவும் செய்கிறார். பக்கத்து சீட் ரிப்போர்ட்டர் சொன்னது போல், ‘எப்பப் பார்த்தாலும் இவரே பேசிகொண்டே இருக்கார், ஆனா காமெடிக்கு தேவையான டைமிங்கை மிஸ் செஞ்சிடுறார், அவ்வப் போது வசனத்திலும் கவனம் செலுத்தாமல், தன்னிஷ்டப்படி பேசி தடம் மாறுகிறார். ஆனால் காமெடிக்காக கோலிவுட்டின் ரியல் ரியல் சூப்பர் ஹீரோக்களான விஜய், அஜித், விஷால், சிம்பு என்று ஹீரோக்களை சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கும் டயலாக்கில் உள்ள நிறைவு யோகிபாபுவின் பர்ஃபார்மன்சில் மிஸ்ஸிங்.

நாயகி(?) ஓகே ரகம். சார்லி போக போக தன் அனுபவத்தைக் காட்டி பாஸ் மார்க் வாங்குகிறார். படத்தில் ரவி மரியா, நரேன், தேவதர்ஷினி, நமோ நாராயணன் என்று பல நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், யோகி பாபு தான் பேசுகிறார், பேசுகிறார்.. தெனாவ்வட்டாக பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் பழைய நோக்கியா மொபைலை வைத்துக் கொண்டு அடித்த காமெடி ஓகே. கூடவே வந்து போகும் Undertaker என்ற பெயர் கொண்ட நாய் குழந்தைகளை கவரக் கூடும். ராஜ் ஆரியனின் இசையில் பின்னனி இசை அளவுக்கு பாடல் சோபிக்கவில்லை. ரூபன் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவுதான் படத்தை ஒரு ஸ்டார் அதிகரித்து உள்ளது.

மொத்தத்தில் இந்த கூர்கா-வை பார்ப்பதால் நஷ்டமில்லை

மார்க் 3/5