சீனியர் கும்கி யானை கலீம்-முக்கு ராஜமரியாதையுடன் ஓய்வு!- வீடியோ

சீனியர் கும்கி யானை கலீம்-முக்கு ராஜமரியாதையுடன் ஓய்வு!- வீடியோ

மிழக காடுகளில் அதகளம் செய்யும் காட்டு யானைகளை அடக்கி, வழிக்கு கொண்டு வருவதில் அசத்திய திறமை கொண்ட கும்கி யானையான கலீம், இப்போது ஓய்வு பெற்ற நிலையில் அதற்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனப்பணியாளர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த யானைகள் வளரும் முகாமில் 26 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள யானைகளுக்கு பாகன்கள் நியமிக்கப்பட்டு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிக்கவும், கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள கலீம் என்ற கும்கி யானை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் காட்டு யானைகளை பிடிக்கும் ஆபரேஷன்களில் பங்கெடுத்து வெற்றிகளை பெற்றுள்ளது.

குறிப்பாக பொள்ளாச்சியை மிரட்டிய அரிசி ராஜா மற்றும் சின்னத்தம்பி, விநாயகா உள்ளிட்ட யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்ததில் கும்கி கலீமின் பங்கு மிக முக்கியமானது. மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் வனத்துறைக்கு போக்கு காட்டிய பாகுபலி யானைக்கு கால ரெய்டை பொருத்தும் பணியில் கும்கி கலீம் ஈடுபடுத்தப்பட்டது. 1972ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வரும் கலீம் 50 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறைக்கு சேவையாற்றியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டவும், அவற்றை பிடிக்கவும் கும்கி யானை கலீம் வனத்துறைக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது. பல்வேறு பகுதிகளுக்கு சென்று விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுதல், அவற்றை பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆப்ரேஷன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது கலீம் யானை.

1972 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் வனத்தில் தனது 7 வயதிலேயே தாதாவாக வலம் வந்தவன் கலீம். எங்க ஏரியா உள்ள வராதே என்ற வசனத்துக்கு ஏற்றவாறு சத்யமங்கலம் வனத்துக்குள் யானையின் வலசை பாதையில் அமைக்கப்பட்ட சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கலீமால் பதம் பார்க்க பட்டிருக்கின்றன. கலீம் கண்களில் பட்டு விடக்கூடாது கடவுளே என்ற வேண்டுதல் இல்லாத வாகன ஓட்டிகளே அன்றைய காலகட்டத்திலே இல்லை. அந்த அளவுக்கு அடாவடியாக வலம் வந்த கலீமை கடும் போராட்டத்துக்குப் பின் 7 வயதில் வனத்துறை வசம் வந்தவன், இன்று அரை நூற்றாண்டைக் கடந்து வீறு நடை போடுகின்றான் .

சத்தியமங்கலத்தில் பிடிபட்டு டாப்ஸ்லிப் கொண்டு வரப்பட்ட கலீம் பின்னர் பழனியப்பா என்ற யானை பாகனால் வெறும் 45 நாளில் பயிற்சி கொடுக்கப்பட்டு, கும்கியாக மாற்றியிருக்கின்றனர். பழனியப்பாவுக்கு பின் கடந்த கால் நூற்றாண்டுகளாக கலீமுக்கு பாகனாக செயல்பட்டு வருபவர் மணி.வனத்துறையின் கீழ் எத்தனையோ வளர்ப்பு கும்கி யானைகள் இருந்தாலும் கலீமின் தனித்துவமானது.

கலீமின் நுண்ணறிவு, மோப்பம் பிடித்து தேடுவதில் அதி புத்திசாலித்தனம், திட்டமிட்ட களப் பணிகளை செவ்வனே செய்து முடிக்கும் கெட்டிக்காரன், யானை ஆபரேசன்களில் எடுத்த முடிவிலிருந்து எந்நிலையிலும் பின் வாங்காத அசாத்திய தைரியசாலி, எத்தனை யானைகள் காட்டு விலங்கினங்கள் எதிர்த்து வந்தாலும் நம்பி உடன் வருவோர் நூறுபேராயினும் அவர்களை பாதுகாக்கும் பாதுகாப்பு அரண் என கள செயல்பாடுகளால் அதிரவைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றான் கலீம் கும்கி யானை. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா ஆந்திரா கர்நாடகா என கலீமின் கால் தடம் பதியாத தென்னிந்திய காடுகளே இல்லை.

ஊருக்குள் நுழைந்த யானைகளை விரட்ட, யானைகளை இடம் மாற்ற, யானைகளுக்கு சிகிச்சை தர வனத்துறை முதலில் அழைப்பது என்னவோ கலீமை தான். கலீம் வந்தால் கவலை இல்லை என்று சொல்லும் அளவுக்கு கலீம் செய்த சம்பவங்கள் ஏராளம். கோவையின் புகழ்பெற்ற சின்னத்தம்பி , விநாயகன் உள்ளிட்ட யானைகளை இடம் மாற்றியது, பொள்ளாச்சியில் 7 பேரை கொன்ற அரிசி ராஜா யானையை அடக்கியது , ஆந்திரா கர்நாடகா கேரளா என வனத்திலிருந்து வெளியேறிய ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை கொன்ற யானைகளை விரட்ட, பிடிக்க வனத்துறையினரின் அபரேசன்களில் பெரிதும் உதவியிருக்கின்றான் கலீம் கும்கி யானை.

எதிர் வருகின்ற யானைகளை அசாத்தமுடன் எதிர்கொள்வதனை கடந்து தன்னுடன் இருப்போரை எதிர் விலங்கிடமிருந்து பாதுகாத்திருக்கின்றான் கலீம் கும்கி யானை. ஒருமுறை வனத்தில் யானை ஆபரேஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் அடர் வனத்தில் மறைந்திருந்த காட்டு யானை பழனிச்சாமி என்பவரை தும்பிக்கையால் தூக்கி வீச வந்த நிலையில் அதனை முன்பே கணித்த கலீம் காட்டு யானை பழனிச்சாமியை தூக்கும் முன் கலீம் பாதுகாப்பாக தூக்கி நகர்த்தியிருக்கின்றான். காட்டு யானையையும் வெகு தூரம் ஓடவிட்டிருக்கின்றான். இப்படி களத்தில் கரடு முரடாக இருந்தாலும் பழகுவோரிடம் பச்சிளம் குழந்தையாக மாறி பாச மழை பொழியும் கலீம் கும்கி யானை பாகனின் கண் அசைவுக்கு கட்டுப்படுவான்.

இந்தநிலையில், 60 வயதை எட்டிய கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரிவு உபசார விழா செவ்வாய்க்கிழமை கோழிகமுத்தி முகாமில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனப்பணியாளர்கள், ஓய்வு பெற்ற கலீம் கும்கி யானைக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். அப்போது கலீம் யானை தும்பிக்கையை தூக்கி பிளிறியது. அப்போது முகாமில் உள்ள மற்ற யானைகள் துதிக்கையை தூக்கி கும்கி யானை கலீமுக்கு பிரியாவிடை அளித்தன.மேலும் கலீமின் சேவையை பாராட்டும் வகையில் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

error: Content is protected !!