October 16, 2021

கின்னஸ் சாதனை படைத்து நிறைவடைந்தது கும்பமேளா!

கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற கும்பமேளா, சிவராத்திரியான இன்றுடன் கோலாகல மாக  நிறைவு பெற்றது. சிவராத்திரியையொட்டி, நேற்று மாலை முதலே ஏராளமான பக்தர்களும், சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் கூட தொடங்கினர். இன்று மட்டும் 1 கோடி பக்தர்களுக்கும் மேல் புனித நீராடியதாகவும், கும்பமேளா தொடங்கி இதுவரை சுமார் 25 கோடிக்கும் மேல் பக்தர்கள் புனித நீராடி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பமேளா இன்றுடன் நிறைவு பெற்றாலும் முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை (செவ்வாய்க்கிழமை)தான் முறைப்படி அதை அறிவிக்க உள்ளார்.

மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், கும்பமேளா 6 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறும். அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கும்பமேளா ஜனவரி 15-ந் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுகள் புனித நீராடினர். இதுவரை சுமார் 25 கோடிக்கும் மேல் பக்தர்கள் புனித நீராடி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் புனித நீராடினர்.

கும்பமேளாவையொட்டி ஆற்றின் 8 கிலோ மீட்டர் தூரத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாநில அரசு சுமார் ரூ.4 ஆயிரத்து 200 கோடி செலவிட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து, மருத்துவம், உணவு, தங்குமிடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாநில அரசு செய்து கொடுத்தது.

கும்பமேளாவில் உத்தரபிரதேசம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து புனித நீராடினர். வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததை அடுத்து பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர், போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டனர்.

அடிசினல் ரிப்போர்ட்:

இன்ரைய மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரில் சிவலிங்கங்களுக்கு ‘ருத்ராபிஷேகம்’ உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், 2019-ம் ஆண்டு கும்பமேளா கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. அதிகமான போக்குவரத்து மற்றும் பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த திட்டம் தீட்டியது, ‘என் நகரை ஓவியம் தீட்டுங்கள்’ நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்தியது, சுகாதார வசதிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை பிரம்மாண்டமாக செய்தது ஆகிய விஷயங்களில் கும்பமேளா நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பெறுள்ளது. கின்னஸ் உலக சாதனை நிர்வாகத்தைச் சேர்ந்த 3 பேர் பிரயாக்ராஜ் பகுதிக்கு வந்து 3 நாட்கள் ஆய்வு செய்து அங்கீகாரம் கொடுத்தனர்.