குடிமகன் – திரை விமர்சனம்!

தற்போது தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கம் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. முன்னதாக தடுக்கி விழுந்தால் இருந்த மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, நேரம் மாற்றியமைக்கப்பட்ட பிறகும் கூட மதுக்கடைகளின் மூலம் வரும் வருவாய் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது.நாள் ஒன்றுக்கு ரூ85 முதல் ரூ90 கோடி வரையில் வருவாய் கிடைக்கிறது.இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ26 ஆயிரத்து 700 கோடி வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் மதுவினால் விளையும் தீமையை அனைவரும் உணரும்படி ஒரு தமிழ் படத்தை கிட்டத்தட்ட 50. 60 லட்சம் ரூபாய் செலவு செய்து ‘குடிமகன்’ என்றொரு சினிமா எடுத்திருக்கிறார் என்றால் அவருக்கு முதலில் ஒரு ராயல் சல்யூட்..!

ஒரே ஒரு கிராமத்துலே நாயகன் தன் அழகான மனைவி, அன்பான் பிள்ளை சகிதம் ஹேப்பியா வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்., அதே சமயம் அந்த ஊரில் ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக போய் சீர் செய்யும் குணமுடையர். அநாவசியமா கூல்ட்ரிங் குடிக்கக் கூட தயங்கும் ஹீரோவின் ஒரே லட்சியம் தனது மகனை நன்றாக படிக்க வைத்து உருப்படியான ஆளாக்க வேண்டும் என்பது தான்.

இதற்கிடையே, அந்த ஊரில் அரசு மதுபானக் கடையான டாஸ்மாக் ஒன்று ஓப்பன் பண்ண, அதனைக் கடுமையாக எதிர்த்து நாயகன் ஜெயகுமார் உள்ளிட்ட ஊர் மக்கள் எல்லோரும் ஆக்ரோஷமாக போராடுகிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகள் தங்களுக்கே உரிய ராஜ தந்திரத் தோடு, ஒரு மாதம் கழித்து இதே கடையை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாக கூறி அப்போதைய நிலைமையை சமாளிக்கிறார்கள். அதை நம்பி மக்களும் போராட்டத்தை கைவிட்ட, ஊரில் உள்ள அநேக ஆண்மகன்கள்,அதே டாஸ்மாக் குடிக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதில் நாயகன் ஜெய்குமாரும் ஒரு ரெகுலர் குடிமகனாகி விடுகிறார்.

நிலைமை படு மோசமாவதை அடுத்து ஊர் பெண்கள், ஊர் பெரியவர் தலைமையில் மீண்டும் மது பானக் கடைக்கு எதிராக போராட முடிவு செய்ய, அதே சமயம் ஆண்கள் அனைவரும் மதுபானக் கடைக்கு ஆதரவாக நின்றுவிடுகிறார்கள். இதனால், கடையை காலி செய்ய முடியாமல் போகிறது. இப்படி குடிக்கு அடிமையாகி பலர் பல இன்னல்களை அனுபவிக்க, ஹீரோ ஜெய்குமாரின் மனைவி ஜெனிபரும் தனது கணவனின் மது பழக்கத்தினால் பெரும் துன்பத்தை எதிர்கொள்கிறார்.  கணவனின்  குடி பழக்கத்தை நிறுத்த அவர் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் நாயகன் ஒய்ஃப் தாலியை திருடிக் கொண்டுப் போய் குடிக்கிறான். இதனால் வெகுண்டெழுந்து ஒரு கட்டத்தில், ஊரே அதிர்ந்து போகும் அளவுக்கு நாயகி ஜெனிபர் ஒரு முடிவு எடுக்கிறார், அது என்ன என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரைக் கூட குடிகாரக் கணவர்கள் தான் கொடூரமானவர்களாக இருந்தனர். ஆனால் இன்று கணவன் – மனைவி சேர்ந்து குடிக்கின்றனர். அருகிலிருக்கும் குழந்தை மதுக்கோப்பைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை டிக் டாக் ஆப்பில் ஷேர் செய்கிறார் கள்! சமீப காலமாக துக்கம் என்றாலும் குடி, கொண்டாட்டம் என்றாலும் குடி, தூக்கம் வர வில்லையா குடி, தெரிந்தவனா உடனே அவனை அழைத்துக்கொண்டு போய் குடி, தெரியாதவனா கை குலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டு உடனே குடி, ஒருவரைப் மனதார பாராட்ட வேண்டுமா குடி, அசிங்கசிங்கமாகத் திட்ட வேண்டுமா குடி, ப்ளான் பண்ண வேண்டுமா குடி, ரிலாக்ஸ் பண்ண வேண்டுமா குடி, பேருந்தில் ஏறித் தூங்குவதாக இருந்தாலும் குடி, கார் ஓட்ட வேண்டுமானாலும் குடி, தியேட்டருக்கு படம் பார்க்கப் போக வேண்டுமானாலும் குடி, நண்பனிடம் / பெற்றோரிடம் / மனைவியிடம் / மகனிடம் மனதில் இருப்பதைச் சொல்ல வேண்டுமா குடி, வேலை கிடைத்து விட்டதா குடி, வேலை போய்விட்டதா குடி, ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டாயா குடி, அவள் சிரித்துவிட்டாளா குடி, உடன் படுத்து விட்டாளா குடி, செருப்பால் அடித்துவிட்டாளா குடி, அடுத்த பிகரைப் பிடித்துவிட்டாயா கட்டாயம் குடி, பிறந்த நாளா குடி, வீட்டில் எழவு விழுந்து விட்டதா குடி, அக்காவிற்கு கல்யாணமா குடி, உனக்குக் கல்யாணமா குடி, அலுவலக பார்ட்டியா குடி, நண்பர் களுடன் அவுட்டிங்கா குடி, வெயிலடிக்கிறதா குடி, மழையா குடி, குளிரா குடி, போர் அடிக்கிறதா குடி … குடி குடி குடி என்று நாடே நாசமாகிப் போய்க்கொண்டிருக்கிறது.

இப்படியான சூழலில் இந்த ‘குடிமகன்’ படத்தை பார்த்தால், நிச்சயம் ஒரு ஷோ-வுக்கு ரெண்டு பேராவது குடியிலிருந்து விடுபடவே  ஆசைப்படுவார்கள்.ஹீரோவாக நடித்திருக்கும் ஜெய்குமார் புதுமுகம் கூடவே ஜெனிபர் முன்பு சில படங்களில் நடித்த அனுபவத்தோடு தேவை யான அளவு நடித்திருக்கிறார். கவுன்சிலராக நடித்திருக்கும் கிரண், ஊர் தலைவராக நடித்திருக்கும் பாவா செல்லதுரை, வீரசமர், பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி என அனைத்து நடிகர்களும் கதா பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

எடுத்து கொண்ட கதை இம்புட்டுத்தான் என்பதால் ஒரு டாஸ்மாக் கடை, ஆல்டர் நேட்டிவாக ஒரு டீக் கடை, அப்புறம் பீடு என்று சிம்பிளான மூன்றே செட்டில் படத்தை முடித்து விட்டார்கள். ஆனாலும் தான் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதியும் விதத்தில் இயக்குநர் சதீஷ்வரன் ஜெயித்து விட்டார் என்றே சொல்லலாம். உண்மையில் இந்த குடிமகன் ஒவ்வொரு குடிகாரனும் காண வேண்டியவன்.

மார்க் 3 / 5