September 25, 2021

லிங்காயத் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து ; கர்நாடக அரசு அனுமதி!ப்

கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து சமுதாயத்தினரை தனி மதமாக அங்கீகரித்து சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. லிங்காயத்து சமுதாயத்தினரை தனி மதமாக அங்கீகரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகதிற்கும் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், லிங்காயத் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்கீழ், லிங்காயத்தை சிறுபான்மை மதத்தினராக அங்கீகரிக்கலாம் என நாகமோகன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஏற்று, அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல ஆண்டு காலமாக கர்நாடகாவில் உள்ள லிங்காயத்து மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் விளைவே இந்த புதிய அறிவிப்பு என்றும், இந்து மதத்தில் இருந்து பல விதங்களில் வேறுபடும் லிங்காயத்து வழிபாடு, தனி மதம் என்பது ஆராய்ச்சி வாயிலாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்கிறார்கள் மதங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தும் ஆராய்ச்சியாளர்கள்.

”லிங்காயத்திசம்- ஒரு தனி மதம்”(Lingayatism, An independent religion) என்ற புத்தகத்தை எழுதியவரும் 29 ஆண்டுகள் தத்துவத்துறையின் பேராசிரியராக பணிபுரிந்த எம்.என். மகாதேவப்பா, மூடநம்பிக்கைகளைப் பெரிதும் எதிர்க்கும் மதமாக 12ம் நூற்றாண்டில் பசவண்ணா லிங்காயத்து மதத்தை உருவாகினார் என்கிறார்.அதாவது வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை. 12-ஆம் நூற்றாண்டில் பசவண்ணா எழுதிய கருத்துகள், பின்னர் வந்த அக்கம்மா தேவி போன்றோர் வகுத்த நெறிகளைக் கொண்டதாக இந்த வழிபாடு உள்ளது என்பதால், தற்போது இந்து மதம் என்ற அறியப்படும் வழிபாட்டு முறையில் இருந்து லிங்காயத்து சமூகம் முற்றிலும் வேறுபடுகிறது” என்கிறார் மகாதேவப்பா.

லிங்காயத்து வழிபாடு தொடர்பாக 18 புத்தகங்களை எழுதியுள்ள மகாதேவப்பா, ”தற்போது இந்து மதத்தின் கீழ் ஒரு சாதி பிரிவாக லிங்காயத்து வழிபாடு கருதப்படுகிறது. சாதி பாகுப்பாட்டை எதிர்த்தவர் பசவண்ணா. லிங்காயத்து மக்கள் அணிந்துள்ள லிங்கம், சைவ கோயில்களில் உள்ள லிங்க வடிவம் அல்ல. பீடம் இல்லாமல், ஆதிகால லிங்க வடிவத்தை கொண்ட அமைப்பு அது,” என்றார் அவர்.

இதையடுத்து இந்த லிங்காயத்து வழிபாடு முறை எவ்வாறு இந்து மதத்தில் இணைக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள சென்னை பல்கலைக் கழகத்தின் சைவசித்தாந்த துறையின் தலைவர் சரவணனை சந்தித்து விசாரித்த போது, ”லிங்காயத்து மக்கள் அணியும் லிங்கத்தை சைவ மதத்தோடு இணைத்துப் பார்ப்பதால் வரும் குழப்பம் தான் இது. வரலாற்று ரீதியாக பார்த்தால், இந்து என்ற ஒரு மதம் கிடையாது. ஆறுவகையான மதங்களை தொகுத்து தற்போது பழக்கத்தில் இருப்பது இந்துமதம். சிவன், திருமால், முருகன், கணபதி, சக்தி, சூரியன் என ஒவ்வொரு கடவுளும் தனித்தனி மதங்களாக வழிபடப்பட்ட தெய்வங்கள். அரசியல் காரணங்களுக்காகவும், திருக்கோயில்களை நிர்வாகம் செய்யவும், பூர்வ ஆச்சாரியர்கள் இந்த மதங்களை இணைத்தனர்,” என்றார். அவர் தொடர்ந்து, ”வேதம், தொல்காப்பியம், சங்கநூல்கள் போன்ற எதிலும் இந்து என்ற வார்த்தையே கிடையாது என்பது வெளிப்படை. ஆறு மதங்கள் இணைக்கப்பட்டு இந்துமதம் என்று கருதப்பட்டது போல, முன்னர் ஒரு பிரிவாக கருதப்பட்ட லிங்காயத்து வழிபாடு, அரசியல் காரணங்களுக்காக தனி மதம் என்ற வாதம் தற்போது வலுத்து நிற்கிறது,” என்று கூறினார்.

இந்நிலையில்தான், லிங்காயத் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்கீழ், லிங்காயத்தை சிறுபான்மை மதத்தினராக அங்கீகரிக்கலாம் என நாகமோகன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஏற்று, அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பரிந்துரை இறுதி ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. வாக்கு வங்கியை குறைப்பதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.