September 25, 2022

கிரிஷ்ணம் – திரை விமர்சனம்!

ஊமைப்பட உலகிலிருந்து பேசும் சினிமாவாக வளர்ச்சி அடைந்த நம் திரையுலகில் அதிகமாக வந்த படங்கள் பட்டியலில் பக்திப் படங்களே அதிகம் இடம் பெறும், அதன் அடிப்படைச் சாராம்சம் மனித சக்திக்கும் அப்பால் ஒரு இயக்கம் அல்லது செயல் இருக்கிறது என்பதை நம்ப வைக்கும் முயற்சியே பிரதானமாக இருக்கும். அந்த வகையில் பி. என். பலராமன் என்பவர் தனது வாழ்க்கை யில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் ‘கிரிஷ்ணம்’ என்ற பெயரில் கதையை எழுதி, தயாரித்தும் இருக்கிறார். அதிலும் படத்தின் ஹீரோவாக அவரது மகனே நடித்துள்ளார். இவர் தான் இக்கதையில் வருவது போலவே நிஜமாகவே அரிய வகை நோயில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர் என்பதுதான் ஹைலைட் . ஆக சொந்த வாழ்க்கை கதையை கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு சினிமாவாக எடுத்து இருப்பதற்கும் அதை சகல தரப்பும் ரசிக்கும் வண்ணம் வழங்கி இருப்பதற்கும் முதலில் அவருக்கு சல்யூட்.

நாயகன் அக்‌ஷ்ய் அப்பா சாய்குமார்ன் ரொம்ப ப்ரண்ட்லி கேர்க்டர். அதே சமயம் அம்மா சாந்தி கிருஷ்ணா கண்டிப்பும் , பாசமும் நிறைந்த தாய் என ஹேப்பியான பணக்காரக் குடும்பம். அதே சமயம் எந்த பந்தாவும் இல்லாமல் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் எதாச்சும் கஷ்டம் என்றால் உடனடியாக உதவி செய்வதால் காலேஜ் முழுக்க அன்பை சம்பாதித்தவர். இதனிடையே அதே கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா உல்லாஸ் மீது அக்ஷய்க்கு காதல் மலர்கிறது. ஆரம்பத்தில் அக்காதலை ஏற்காத ஐஸ்வர்யா, பின்னர் (வழக்கம் போல்) அக்ஷய் மீது காதல் கொள்கிறார்.இதன் பின்னர் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், காலேஜில் ஒரு போட்டி நடக்கிறது. அப்போது அக்‌‌ஷய் கிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

இதனால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன அக்‌‌ஷய் கிருஷ்ணனுக்கு நடந்த மெடிக்கல் டெஸ்டில் கொடிய நோய் பாதித்து இருப்பதாகவும், உடனடியாக ஆபரே‌ஷன் செய்தே ஆக வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள். கூடவே அப்படி ஆபரேசன் செய்தாலும் அவர் உயிர் பிழைக்க சிறிதளவே (அதிலும் ஒரு பர்சண்ட் மட்டுமே) வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். இவர்கள் சொல்லுவதை நினைத்து வருந்தும் சாய் குமார், தன்னுடைய தெய்வமான குருவாயூரப்பனிடம் வேண்டுகிறார். அந்த லீலை புரியும் ‘கிரிஷ்ணன்’ குருவாயூரப்பனின் அருளால் அக்‌‌ஷய் கிருஷ்ணன் உயிர் பிழைத்தாரா? இல்லையா? என்பதே படம்

தன் வாழ்க்கையில் நடந்த நிஜக் கதை தான் என்றாலும், சினிமாவுக்கே உரித்தான குடும்பப் பாசம், சென்டிமெண்ட், நட்பு, காதல், மெடிக்கல் மிராகிள், கடவுள் சிந்தனை என அனைத்தையும் சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் தினேஷ் பாபு. ஆனாலும் இது பக்தி படம் என்பதை வலியுறுத்த, மெனகெடாமல் சாதாரண ஜனங்களும் ரசிக்கக் தக்க வகையில் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

அதேசமயம் அப்பா கேரக்டர் முதல் டாக்டர்கள் ரோல்கள் வரை சகல்ரும் தங்கள் பங்குனர்ந்து நடித்திருப்பதால் படம் பார்க்கும் போது சலிப்பே ஏற்படவில்லை. அத்துடன் இது கேரளா கதை என்றாலும் தமிழ் வசனங்கள் மூலம் அக்குறையை போக்கி விட்டார்கள்.

மொத்தத்தில் இது சாமி படமில்லை.. சகல தரப்பினரும் குடும்பத்தினரும் போய் பார்த்து ரசிக்கத் தக்கப் படம் என்பதே உண்மை!

மார்க் 3 / 5