August 13, 2022

ஒரு டீ = ஏழு சுவை! – அசத்தும் கோவை டீ மாஸ்டர்!

காலையிலே எழுந்திரிச்சவுடன் சுடச்சுட டீ அருந்துவது பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமானது. இப்படி தேயிலை கொண்டு தயாரிக்கப்படுவதை மட்டுமே டீ என அழைப்பதில்லை. சில பல பசுந் தழைகள் கொண்டு கொதிக்க வைத்து தரப்படும் சுவையான சுடுநீர் கூட டீ என்றுதான் அழைக்கப் படுகிறது. உலகெங்கும் விதவிதமாக டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. தேயிலையிலேயே மாறுபட்ட சில வகைகளை கொண்டும் தேநீர் உருவாக்கி தரப்படுகிறது. அவற்றிற்கு என தனி மதிப்பும், சிறப்பு குணங்களும் உள்ளன. அந்த வகையில் சில பொருட்கள் கொண்டும் தேநீர் தயாரிக்கப்பட்டு தரப் படுகிறது. இப்பொருட்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தருவதை நம் முன்னோர் குடிநீர் என்றும், கசாயம் என்றும் அழைத்து வந்தனர். மாடர்ன் உலகில் எந்த மூலிகையும், பசுந்தழையும் போட்டு கொதிக்க வைத்து பரிமாறினால் அது தேநீர் வகையில் இணைக்கப்படுகிறது.

ஆனாலும் டீக்கடைக்குப் போனால்தான் எத்தனை வகை டீ. லெமன் டீ, இஞ்சி டீ, மசாலா டீ, க்ரீன் டீ, பிளாக் டீ எனப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

ஆனால், லேயர் டீ என்று ஒன்றுண்டு தெரியுமா? ஆனா ஒரு விஷயம் அதை நீங்கள் டேஸ்ட் பண்ண விரும்பினா கோவை வரைக்கும் போகணும்

கோவை-கேரளா எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் ஆனைகட்டிக்குச் செல்லும் வழியில், கணுவாய் மலைக்குச் சென்றால் மொபட்டில் டீ விற்கும் பி.மாணிக்கம் என்பவரைப் பார்க்கலாம்.

இவர்கிட்டே பேசிக்க்ட்டு இருக்கும் போதே 4 தேநீர் கோப்பைகள் அவற்றில் விதவிதமாக அடுக்கடுக்காக டீயை அடுக்கி வித்தை காட்டுகிறார். ஃபைனல் டச்சுக்காக செம்புக் கம்பியை இதயம், தாமரை வடிவங்களில் செதுக்கி வைத்திருக்கிறார். அதில் அடர்த்தியான டிக்காஷனை ஊற்றி அழகுபடுத்துகிறார். காஃபி டே இந்த டெக்னிக்கை பயன்படுத்தி கல்லா கட்டறான்.

இப்படியான டீ மட்டுமில்லாமல், ஒரு கப்பில் ஏழு லேயர்களில் டீ, காபி, ஹார்லிக்ஸ், பூஸ்ட் என அடுக்கி புதுமை செய்கிறார். அதாவது நன்றாக கொதிக்கும் நீரை ஒரு டம்பளரில் 4-ல் ஒரு பாகம் நிரப்பினார். அதன் மீது பாலை ஊற்ற பால் தண்ணீருடன் கரையாமல் கனவு போல் மிதக்கிறது. அதன் மீது அடர்த்தியான் டிகாஷன். அற்புதம், மூன்றடுக்கு டீ ரெடியாகிவிட்டது. அடுத்து ஹார்லிக்ஸ், பூஸ்ட் என இவர் ஏழு லேயர்களை உருவாக்கும்போது, புது யுக்தியைக் கையாள்வது மட்டுமல்லாமல், அடுக்கிவைத்த லேயர்கள் ஒன்றோடு ஒன்று கலந்துவிடுவதில்லை!

மேலே உள்ள டீ-க்குப் பிறகு பால், பிறகு காபி, பிறகு பூஸ்ட் என தனித்தனி சுவையைப் பருகமுடிகிறது என்பதுதான் ஹைலைட்

இந்த மாணிக்கம் கோவையில் பல டீக்கடைகளில் வேலை பார்த்திருக்கிறார். ஆனால், சொந்தமாக கடை தொடங்க அவருக்குப் பணம் கிடைக்கலை.

அதுனாலே ஒரு மொபட்டில் டீ கொண்டு போட்டு கொண்டு போய் சுமார் 500 கப் டீ தினமும் விநியோகிக்கிறார். என்னிடம் அடுக்கு டீ வேண்டும் என்று கேட்பவர்களுக்குத்தான் அதை போட்டுத் தருகிறேன். மற்ற எல்லோருக்கும் சாதாரண டீ தான் அப்படீங்கறார்