கூகுள் குட்டப்பா – விமர்சனம்!

கொடிது, கொடிது வறுமை கொடிது. அதிலும், கொடிது முதுமையில் தனிமை. அந்த முதுமையை வெல்ல ஒரு துணை அவசியம் என்றும் முதியவர்கள் தோழமைக்காக, இரண்டாவது முறை திருமணம் செய்யலாம் என்ற கருத்தெல்லாம் பரவலாக வலியுறுத்தப்படும் சூழலில் பெற்ற.பிள்ளைகளால் தனித்து விடப்படும் பெற்றோரின் பாதுகாப்பற்ற தனிமையை, நவீன டெக்னாலஜி உதவியுடன் படு சுமாராகச் சொல்லி இருக்கும் கதைதான் ‘கூகுள் குட்டப்பா’.

மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பா. கதை என்னவென்றால் கே.எஸ்.ரவிக்குமார் தன் ஒரே மகன் தர்ஷனுடன் கோவை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் . மகன் தர்ஷன் ரோபோட்டிக் இஞ்சினியரிங் டிகிரி முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். ஆனால், அப்பா கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷனின் ஆசையை நிராகரித்துக் கொண்டே போகிறார். ஒருவழியாக அப்பாவை சமாதானப்படுத்தி விட்டு ஜெர்மன் கிளம்பி விடுகிறார் தர்ஷன்.

அதே சமயம், தனிமையில் இருக்கும் அப்பாவை கவனித்துக் கொள்ள தனது நிறுவனத்தில் இருந்து ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார். ஆரம்பத்தில் அந்த ரோபோவை கண்டாலே கடுப்பாகும் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு கட்டத்தில், ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அந்த ரோபோவை நிறுவன முதலாளி திரும்ப கேட்க, கே.எஸ்.ரவிக்குமார் திருப்பி அனுப்ப மறுக்கிறார். இதனால், ரோபோவை எடுத்து செல்ல இந்தியா திரும்புகிறார் தர்ஷன். இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் ரோபோவை திருப்பி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் போக்கு.

மெயின் ரோலான அப்பா கேரக்டரில் வரும் கேஎஸ் ரவிக்குமார், முழு கதையும் தன் தோளில் தாங்கி நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் குறை சொல்லாத அளவிற்கு தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார். மகனாக நடித்திருக்கும் தர்ஷன் தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் நடிப்பு என்றால் என்ன என்றே தெரியாதவர் அவர் என்பதை புரிய வைத்து விடுகிறார் நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி பெரியதாக எடுபடவில்லை

மலையாளத்தில் ஏற்படுத்திய பாதிப்பை தமிழ் பதிப்பு ஏற்படுத்தவில்லை. கதைக்குள் நேராக வராமல், கதாபாத்திரங்களை அறிய வைக்க எடுத்துக் கொண்ட நேரமும், கலகலப்பை குறைத்து, செண்டிமெண்ட் ஏற்றுவதாக நினைத்து, பொறுமையை சோதித்ததும் தான் படத்தின் மிகப்பெரிய குறை. ஒரு வித்யாசமான ஹிட் ஆன கதையினை கையில் வைத்துக் கொண்டு எத்தனை சுவையான காட்சிகளை கொடுக்க முடியும் ஆனால் அதற்கான மெனெக்கெடல் எதுவுமே இல்லை. பெரும்பாலும் நாடகம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது

படத்திற்கு ஆறுதலான இரு விஷயங்களில் ஒன்று முன்ன்ரே சொன்ன கே எஸ் ரவிகுமார் நடிப்பு. தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுக்க, தனது முழு பங்கையும் அளித்துள்ளார். மற்றொன்று இசை, படத்தில் இரு பாடல்கள் கேட்கும் படி உள்ளது. மற்றபடி பிண்ணனி இசையெல்லாம் ஓகே ரகம் தான்.

ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய லிஸ்டில் சேராமல் போய் விட்டது – இந்த கூகுள் குட்டப்பா

மார்க் 2.25/5

error: Content is protected !!