September 23, 2021

கொஞ்சம் கொஞ்சம் – திரை விமர்சனம்!

சில சினிமாக்கள் பிரமாண்டத்தால் பிடிக்கும். சில படங்கள் சிலர் நடிப்பதால் பிடிக்கும், சில படங்கள் கதை ஓட்டத்தால் கவரும். அந்த வரிசை எதுவும் இல்லாமல் தனக்கு பிடித்தமான படமாக இயக்குநர் உருவாக்கி அதையும் பெருமையுடன் திரைக்கு கொண்டு வந்திருப்பதுதான் கொஞ்சம் கொஞ்சம். எக்கச்சக்கமான படங்களில் நாம் பார்த்திருக்கும் அதே சப்ஜெக்ட்-டை , தற்போது பலரும் மறந்து விட்ட அக்கா தங்கை பாசத்தை மையமாக வைத்து இன்றைய இளைஞர்களுக்கு பாடம் சொல்லும் விதத்தில் வழக்கமான காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று சகல ஃபார்முலாவையும் சேர்த்து ஒரு படமாக கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

படத்தின் கதை என்னவென்று கேட்டால் கேரளாவில் தமிழன் (அப்புக் குட்டி) நடத்தும் இரும்புக் கடை ஒன்றில் பணிபுரிகிறார் நாயகன் கோகுல் கிருஷ்ணா, கூடவே கதசிக்கு தேவை என்பதால் அருகே வசிக்கும் தமிழ் பெண்ணான ஹீரோயின் நீனுவை காதலிக்கிறார். இதனிடையே விடுமுறை கிடக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள தனது அம்மாவையும், அக்காவையும் பார்த்துவிட்டு வருபவர் வாங்கிக் கொடுக்கும் சீஃப்ஃபான செல்போன் வெடித்து ஏற்படுத்தும் விபத்து ஒன்றால் காது கேட்கும் திறனை இழக்கும் ஹீரோவின் அக்காவான ப்ரியா மோகனின் திருமணம் நின்றுபோய் விடுகிறது.

அத்துடன் ஹீரோவின் அம்மாவும் திடீரென்று வழுக்கி விழுந்து மாண்டு போன நிலையில், தன் அக்காவையும் கேரளாவுக்கே அழைத்து வரும் ஹீரோவுக்கு பல்வேறு ரூபத்தில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்த வண்ணம் இருந்தாலும் அனைத்து பிரச்சினைகளையும் அவர் எப்படி சமாளித்து வாழ்க்கையில் சாதிக்கிறார் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

நாயகன் கோகுல் கிருஷ்ணன், ஹீரோயின் நீனு, புதியவர்கள் தான் என்றாலும் தன் அசத்தல் நடிப்புத் திறமையைக் காண்பித்து இருக்கிறார்கள். அதிலும் ஹீரோவின் அக்காவாக நடித்துள்ள ப்ரியா மோகன் தனது அம்மாஞ்சித்தனமான ஆக்டிங் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அதிலும் காது கேளாமல் போன பின்பு தலையை ஒரு மாதிரி சாய்த்து அவர் காட்டும் நடிப்பும்.. கடைசிவரையிலும் பாவப்பட்ட பெண்ணாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அவரது நடிப்பும் அபாரம் என்று சமபந்தப்பட்டவர்களே பாராட்டு விதத்தில் இருந்தது சிறப்பு. நாயகி நாயகி நீனு நச் என்று நடித்திருக்கிறார். அழகான முகபாவனை. அழகு மலரான அவர் நாயகனுடன் வரும் காதல் காட்சியில் சகலரையும் கவர்கிறார். அதே சமயம் காயலான் கடையில் வளரும் நாயகனுக்குள் இருக்கும் அந்த விஞ்ஞானியை உப்புச் சப்பாணியாக்கி எங்கெங்கோ பயணம் செய்யும் கதை பார்ப்போருக்கு களைப்பைத்தான் தருகிறது.

ஆக முன்னரே சொன்னது போல நூறாண்டு தாண்டி வந்து விட்ட தமிழ் சினிமா போகும் பாதை எது? என்பதை பற்றி அறியாமல் அல்லது அறிந்தும் சட்டை செய்யாமல் எடுத்து கொண்ட கதை, திரைக்கதையில் கொஞ்சம் கூட மெனக்கெடாமல் முழு படத்தை எடுத்து ரிலீஸ் செய்திருப்பதற்கு ஒரு தனி பொக்கே.

அம்புட்டுதான்

மார்க் 5 / 2.5