October 16, 2021

கோலமாவு கோகிலா ரிலீஸ் ஆகஸ்ட் 17ம் தேதிக்கு தள்ளி போனது ஏன்?

கோலிவுட்டில் சமீபத்திய பரபரப்பு ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோ கோ’. தனிப் பெரும் நாயகியான நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தின் பெயர் இப்படி வித்தியாசமாக இருக்கிறதே என பட அறிவிப்பு வந்த போதே பேச வைத்த படம். சிம்பு நடிப்பில் உருவான ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கி நெல்சன் தான் இந்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குனர். ‘வேட்டை மன்னன்’ டிராப் ஆகவில்லை, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உருவாகலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் இயக்குனர்.

நயன்தாராவிடம் கதையைப் பற்றிச் சொன்னதுமே ரசித்தவர், டைட்டிலைக் கேட்டதும் சிரித்திருக்கிறார். வித்தியாசமாக நன்றாகத்தானே இருக்கிறது எனவும் பாராட்டியிருக்கிறார்.ஒரு வித்தியாசமான ஆக்ஷன் படமாம். கடத்தல் ஆட்களுடன் நயன்தாராவுக்கு திடீரென பழக்கம் ஏற்பட்டு அவர்கள் வட்டத்துக்குள் சிக்கி விடுகிறார். அதிலிருந்து எப்படி அவர் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.கோலமாவுக்கும் படத்தின் கதைக்கும் மிக முக்கிய சம்பந்தம் இருக்கிறதாம், அதற்காகத்தான் அப்படி ஒரு தலைப்பாம்.

இதனிடையெ ஒரு நடிகைக்கான மிகப்பெரிய சாதனை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுவதோ, ‘பாக்ஸ் ஆபீஸ் குயின்’ ஆக இருப்பதோ இல்லை. ‘நாயகி மையப்படுத்திய படங்கள்’ என்ற வரையறையை அழிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாகவே ஒரு படத்தில் ஆண் நாயகன் இல்லாத போது, எளிதாக அதை நாயகி படம் என்ற வரையறைக்குள் கொண்டு வந்து விடுகிறோம். அந்த தடைகளை உடைத்து, உலகளாவிய பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வரும் வழிமுறை கடினமானதாக இருக்கிறது. நிச்சயமாக, நயன்தாரா இந்த சூழ்நிலையை உருவாக்க ஒரு மகத்தான முயற்சியை மேற்கொண்டார். அவருக்கு இருப்பது வெறும் சாதாரண ரசிகர்கள் மட்டுமல்ல, வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் தமிழ் சினிமாவில் ‘கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டை வர்த்தகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படம் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் ஆகஸ்ட் 10 தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, தனது முடிவில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. இயக்குனர் நெல்சன் கூறும்போது, “தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நம்ப முடியாதவை. மேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றி பெறும் ரகசியம் ‘சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது’. லைக்காவிற்கு இவை மிகவும் பொருத்தமானவை. லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ், கோலமாவு கோகிலாவை தங்களது சிறப்பான விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது” என்றார்.

அனிருத் ரவிச்சந்தரின் மாயாஜால இசை படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி விட்டிருக்கிறது. குறிப்பாக, ‘கபிஸ்கபா’ என்ற விளம்பர ஜிப்பரிஷ் பாடல், படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பது அடிசினல் ரிப்போர்ட்.