கோடியில் ஒருவன் விமர்சனம்!

கோடியில் ஒருவன் விமர்சனம்!

சினிமா என்றால்.. அதுவும் தமிழ் சினிமா என்றால் என்னவெல்லாம் இருக்கும்? தாய் பாசம், லட்சியம், காதல், வழிக்காட்டும் போக்கு, நாட்டு நடப்பு, செண்டிமெண்ட், அரசியல் களேபரம், ஹீரோயிசம்…. இத்யாதிகளில் ஏதாவது ஒன்று அல்லது ஓரிரண்டு இருக்கும் இல்லையா? ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடப்பட்ட அத்தனை சமாச்சாரங்களையும் தேவையான அளவு எடுத்து வந்த படங்கள் பட்டியலில் சேர்ந்து விட்டது கோடியில் ஒருவன்..!

ஆனால்…தலைவாழை போட்டு சாம்பார், ரசம், காரக்குழம்பு, அப்பளம், பொரியல், கூட்டு, மோர் இத்யாதிகளை சுவை மற்றும் சூட்டுடன் பரிமாறி விட்டு சாதத்துக்கு பதில் பரோட்டாவை வைத்தது போலொரு உணர்வு ஏற்பட்டதை ஏனோ தவிர்க்க இயலவில்லை.

ரொம்ப ரொம்ப நல்லவராக வாழ ஆசைப்பட்ட ஒரு அம்மாவுக்கு அதை விட நல்லவராக வளரும் மகன் – விஜய் ஆண்டனி.. தன் தாயின் கனவை நிறைவேற்றும் நோக்கில் ஐ.ஏ.எஸ் எக்ஸாம் எழுதி கலெக்டர் ஆகும் நோக்கில் சென்னை வருகிறார்.. வந்து சேர்ந்த சிங்காரச்  சென்னை வாழ்க்கையில் குறுக்கிடும் சில்லறைகளால் ஐ.ஏ. எஸ். அம்புட்டு பேர்களையும் கட்டி மேய்க்கும் வாய்ப்பையே பெறும் ஜகதால கில்லாடிவதுதான் கோடியில் ஒருவன் கதை.

ஆரம்ப பேராவின் கடைசி வரியில் சொன்ன சாதத்துக்குப் பதிலாக வைக்கப்பட்ட பரோட்டோவாக ஹீரோ ரோலில் விஜய் ஆண்டனி.. ஓபனிங்-ங்கில் இருந்தே ஏழைப் பங்காளியாக பாட்டிகளிடம் இருந்து முத்தம் வாங்குபவராக வருபவர் அடுத்தடுத்தக் காட்சிகளின் வீரியத்துகேற்ப தன் உடல் & முக பாவத்தைக் காட்ட இயலாமல் தவிக்கிறார். குறிப்பாக கார்ப்பரேசன் மீட்டிங்கில் பேசும் வசனமெல்லாம் சிரிப்பை வர வைத்து விட்டது. ஹீரோயின் ஆத்மீகா – சொன்ன வேலையை செய்து விட்டு போயிருக்கிறார்

விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபா-வுக்கு இது முதல் படமாம்.. அடடே சொல்ல வைத்திருக்கிறார். சீஃப் வில்லனாக கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜு,சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு, பிரபாகர் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள் நிவாஸ் கே பிரசன்னாவால் உருவான பாடல் ஓகே. .பின்னணி இசை படத்துக்கு பலம். கூடவே கேமராமேன் என்.எஸ்.உதயகுமார் சபாஷ் சொல்ல வைக்கிறார்.

கொஞ்சம் பழையக் காலக் கதையானாலும் நடப்பு அரசியலோடு முன்னரே சொன்னது போல் சினிமாவுக்கு தேவையான அத்தனை மசாலாக்களையும் சரியான விகிதத்தில் கலந்து விருந்து படைத்துள்ளார் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்.. ஆனாலும் ஹீரோதான் ஏனோ ஒட்டாமல் பயணிக்கிறார்.

மொத்தத்தில் பக்கா எண்டெர்டெயினர் மூவி

மார்க் 3.5/ 5

error: Content is protected !!