June 25, 2022

பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் – 1948ல் நடந்ததன் குறிப்புகள்! பாகம் 2

திப்பிற்குரிய துணைத் தலைவர் அவர்களே, எனும் கம்பீரமான குரல் கேட்டவுடன் அந்த மாபெரும் அவை அமைதியானது.. அனைவரின் கவனமும் அந்த குரலினால் ஈர்க்கப்பட்டது

பெரியவர் கே. எம் முன்ஷியின் குரல் அது..

நாமும் அவர் என்ன பேசுகிறார் எனக் கேட்போம்..

நான் இந்த அவையின் முன்பு சில கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன்.. இந்திய அரசியல சாசனத்தின் மிக முக்கிய அம்சமான அடிப்படை உரிமைகள் குறித்து ஷரத்துகளை நாம் விவாதிக்கும் மிக முக்கிய தருணம் இது.. நாம் ஏற்கனவே சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் எனும் ஷரத்தினை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.. இதே அவையில் .. நாம் எல்லோரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டோம்..

இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதினால், என்ன இடர் என்பதைக் குறித்து இங்கே சக உறுப்பினர்கள் கருத்துகள் சொன்னார்கள்..

அப்படியாக ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு வரும் நிலையிலும், சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாக்க அரசுக்கு உரிமை இருக்கிறது அதனால் அதற்கென சில சலுகைகளை செய்வதில் தடையில்லை எனவும் அரசியல் சாசனத்தின் ஒரு ஷரத்தில் உப பிரிவு ஒன்றினை நாமே இங்கே இதே அவையில் அங்கீகரித்திருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் நலனை முடக்குவதாக அமைந்துவிடும் என்பதாகவும் சில உறுப்பினர்கள் சொன்னார்கள்.. உலகில் எந்த இஸ்லாமிய தேசத்தில் அங்கே சிறுபான்மையினராக இருக்கும் மதத்தினரின் உரிமைகள் மதிக்கப்பட்டு, இந்தியாவில் நடத்தப்படுவது போல் நடத்தப்படுகின்றார்கள் என கவனிக்க வேண்டும்

உதாரணத்திற்கு நாம் எகிப்தையும் துருக்கியையும் எடுத்துக் கொள்ளலாம்.. அங்கே இஸ்லாமி யரல்லாத சிறுபான்மையினருக்கு இப்படியெல்லாம் அவரவர் மதம் சார்ந்த பெர்சனல் சட்டங் களைக் கை கொள்ள உரிமை இருக்கிறதா? நான் இன்னமும் ஒன்று சொல்ல விழைகின்றேன்.. மத்திய சட்ட சபையிலே ஷரியத் சட்டங்களும் இன்ன பிற சட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டு அமுலுக்கு வந்த போது ஷியா பிரிவின் உப பிரிவான கோஜா பிரிவினரும் Cutchi Memons பிரிவினரும் அதனால் மிகவும் அதிருப்தியும் வருத்தமும் கொண்டார்கள்..

அப்போது முகமதியர்கள் அவர்களுக்கு மட்டுமல்ல எல்லாப் பிரிவினருக்கும் ஷரியத் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என வாதாடினர்.. அதனை இந்த இரண்டு பிரிவைச் சார்ந்த இஸ்லாமியர் களாலேயே ஏற்க இயலவில்லை.. மறுத்தனர்.. அவர்களுக்குள்ளே இருக்கும் இப்படியான வேறுபாட்டை வைத்துக் கொண்டு எப்படி சிறுபான்மையினர் நலனுக்காக ஒவ்வொரு தனி சட்டங்களை வைத்துக் கொள்ளலாம் என சொல்வது

நான் இஸ்லாமியர்களை மட்டும் சொல்வதாக நினைக்க வேண்டாம்..

ஹிந்துக்களுக்காக மனு, யாஞ்யவல்யர் போன்றோரின் கருத்துகளை வைத்துக் கொண்டு ஹிந்து சட்டங்களை வைத்தீர்களேயானால் அதனை மறுத்து சொல்ல, பல பிரிவுகள் ஹிந்து மதத்திலேயும் இருக்கிறது

மயூக்கர்களுக்கு, மிதாக்சரர்களுக்கு, பெங்கால் பகுதியின் தயாபாகர்களுக்கு என இப்படி வட்டாரக் கணக்கில் ஹிந்துக்களுக்கென பெர்சனல் சட்டங்கள் இருக்கிறது.. இதையெல்லாம் அங்கீகரித்து.. ஒவ்வொரு மதம் அதன் பல உட்பிரிவுகள்.. அந்த உட்பிரிவுகளுக்குள்ளே இருக்கும் ஏனைய பிரிவுகள் அந்தந்த பிரிவுகளுக்கெல்லாம் தனித்தனியாக பெர்சனல் சட்டங்கள் என வைத்துக் கொள்ளப் போகின்றோமோ நாம் ????

வெளியிலிருந்து வந்து இத்தனை நாட்கள் இங்கே அரசு செலுத்திய ப்ரிட்டிஷாருக்கு இப்படி ஒவ்வொரு பெர்சனல் சட்டங்களும் மதத்தின் அங்கமாகத் தெரிந்திருக்கலாம்.. ஆனால் தேசிய ஒருமைப்பாடு என்பது நமக்கு எத்தனை முக்கியம் என்பது நாம் தான் உணர்ந்து கொள்ள வேணும்..

இப்படி பிரிவுக்கு ஒன்றாக பெர்சனல் சட்டம் வைத்துக் கொள்வது செக்யூலரும் ஆகாது.. நல்லதுமல்ல

நாமெல்லாம் இந்த தேசத்தின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்கள்..

அலாவுதீன் கில்ஜி.. பாரத தேசத்தில் முதல் சுல்தானிய சர்க்காரை அமைத்தவர்.. அவர் ஷரியத்தின் ஷரத்துகளில் திருத்தம் செய்து அதனை அமுல்படுத்திய போது, டெல்லியின் காஜியார் அதனை எதிர்த்தார்.. அப்போது அலாவுதீன் கில்ஜி சொன்ன பதில்

‍‍… நான் அறிவில்லாதவன்.. ஆனால் இந்த நாட்டின் மீதும் இதன் வளர்ச்சியின் மீதும் கொண்ட நல்லெண்ணம் அக்கறையினை மட்டும் வைத்துக் கொண்டு அரசாட்சி செய்கிறேன் .. என்னுடைய அறியாமையினையும், நல்லெண்ணத்தினையும் ஒருங்கே நோக்கும், கடவுள் , நான் ஷரியத்தின் படி நடக்கவில்லை என்பதை கருதி கோபமுறமாட்டார்.. எனது நல்லெண்ணத்தினை கருதி என்னை மன்னித்து அருள் செய்வார்

உறுப்பினர்கள் நன்றாக கவனிக்க வேண்டும்..

பண்டை மன்னனுக்கே இப்படி எண்ணமும் அதனை செயல்படுத்தும் துணிவும், முதிர்ச்சியும் இருந்திருக்குமேயானால், நம்மைப் போன்றவர்களுக்கு , இப்படியான மதம், அதன் பிரிவுகள் அதன் உப பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெர்சனல் சட்டம் என்பதெல்லாம், அப்படியான மதத்தின் அங்கம் எனும் கருத்து பிழையாக நமக்கு பயிற்றுவிக்கப்பட்ட கருத்து என்பதைக் உணரத் தெரிந்திருக்க வேணூம்

அவை மீண்டும் அமைதியானது.. பெரியவர் முன்ஷி தனது உரையினை நிறைவு செய்து அமர்ந்து விட்டார்..

சுமார் ஒரு நிமிஷம் ஆனது

அவையின் கவனத்தைக் கவர்ந்த குரலுடன் அல்லாடி க்ருஷ்ணசாமி அய்யர் பேசலானார்

நான் பெரியவர் முன்ஷி அவர்களுக்கு மிகவும் நன்றியுடையவனானேன்.. நான் பேச நினைத்திருந் ததில் பெரும்பான்மையை அவரே சொல்லிவிட்டார்.. ஆயினும் அவரது கருத்துகளை வலியுறுத்து வதுமாகவும் இன்னமும் சில கருத்துகளை சொல்லவும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்கிறேன்

ப்ரிட்டிஷ் சர்க்காரில் தங்கள் மதங்களுக்கான தனி தனித் பெர்சனல் சட்டங்கள் இருந்தன என்பதை யும் அந்த ஆயிரம் வருஷ அந்நியர் அரசாங்கத்தினை மெச்சியவர்கள் இன்டியன் பீனல் கோட் கொண்டு வரும் போது ஏன் எங்கள் மதத்தின் படி எங்களுக்கு தனியே கிரிமினல் சட்டங்கள் இருக்கிறது .. அதனை நாங்கள் கை கொள்ளுகிறோம் என சொல்லவில்லை.. ஏன் ஐ பி சிக்கு ஆட்சேபணையே தெரிவிக்கவில்லை

இன்னுமொரு வருத்தம் என்னவெனில்,, அம்பேத்கார் தலைமையில் இயங்கும் அரசியல் சாசன வடிவமைப்பு குழு தனது வேலையினை சரிவர செய்யவில்லை என்பதாகக் கூட இங்கே ஓர் உறுப்பினர் சொன்னார்

அவர்களுக்கு அந்நிய ஆட்சியிலே சந்தோஷமிருந்தது நமக்கு நாமே அமைத்துக் கொள்ளவிருக்கும் குடியரசில் அவருக்கு சந்தோஷமில்லை போலும்

நம் முன்னே இருப்பது இரண்டு சங்கதிகள்

முதலாவது

“The State shall endeavour to secure for citizens a uniform civil code throughout the territory of India.”

என்பதாக முன் மொழியப்பட்ட பொது சிவில் சட்ட தேவை அவசியம் ஆகவே அதை உறுதி செய்யும் ஷரத்து

இரண்டாவது..

‘Provided that the personal law of any community which has been guaranteed by the statue shall not be changed except with the previous approval of the community ascertained in such manner as the Union Legislature may determine by law’.”

“Provided that nothing in this article shall affect the personal law of the citizen.”

“Provide that any group, section or community of people shall not be obliged to give up its own personal law in case it has such a law.”

என்பதாக பலவித வடிவங்களில் உறுப்பினர்களால்,, அந்தந்த மதத்தின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராத வகையில் ஒரு பொது சிவில் சட்டம் என முன் மொழியப்பட்ட திருத்தங்கள்

பெர்சனல் சட்டங்களைக் கருத்தில் கொள்ளாது அனைவருக்கும் பொதுவானதொரு சிவில் சட்டம் தேவையெனும் ஷரத்தினை நாமெல்லோரும் ஏற்க வேணும் என்பதே என் கருத்து

அல்லாடி க்ருஷ்ணசாமி அய்யர் தனது உரையினை முடித்து உட்கார்ந்தார்

தன் முன்னே இருந்த குறிப்புதவிக் காகிதங்களை ஒருதரம் பார்த்துவிட்டு, தனது கருத்துகளை சொல்ல விழைந்து அம்பேத்கார் எழுந்து நின்று பேசலானார்

(தொடரும்)

சந்திரமெளலீஸ்வரன் விஸ்வநாதன்

 

முந்தைய பாகம் படிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் 

பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் – 1948ல் நடந்ததன் குறிப்புகள்! பாகம் 1