October 27, 2021

பாப் இசை மன்னன் ‘மைக்கேல் ஜாக்சன்’

உலக அளவில் பெரும்பாலானோரால் விரும்பப்படுகிற சிலரில் மைக்கேல் ஜாக்சனும் ஒருவர். ‘பாப் இசை மன்னர்’ என பட்டித் தொட்டி எல்லாம் பாராட்டை பெற்ற ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்…!

மைக் பிடிச்சு ஆடிட்டா, மைக்கேல் ஜாக்சன் ஆக முடியுமா?” ஆர்வக்கோளாறில் ஆடுபவர்களைப் பார்த்து இப்படிக் கிண்டல் செய்வதுண்டு. பாடல் எழுதுவார். இசையமைப்பார். அதற்கு ஏற்றபடி நடனம் ஆடுவார். இடையிடையே நடிக்கவும் செய்வார். இப்படி, இசைக் கலவையாகிய ‘பாப்’ நடனத்தைப் படைத்து இதயங்களைக் கரைத்த கலைஞன் ஜாக்சன்! முன்நெற்றியில் விழும் நூடுல்ஸ் முடியோடு ஜாக்சன் மேடையில் தோன்றும்போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவார முழக்கம், விண்ணைப் பிளக்கும்!

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் ஜோசப் வால்டர் – கேத்ரின் தம்பதிக்கு ஏழாவது பிள்ளையாகப் பிறந்தார். பென்சில்போல ஒல்லியாக இருந்ததால் பாடுவது, ஆடுவது என வீட்டிலேயே தனது கச்சேரியைத் தொடங்கினார். மைக்கின் சகோதரர்களும் இவருடன் சேர்ந்து கும்மாளம் போட, 5 சகோதரர்களுடன் இணைந்து 1969ல் ‘தி ஜாக்சன் 5’ என்ற இசை நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினர். ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்…சுகம்’ என உலகமும் ஜாக்சனைக் கொண்டாட ஆரம்பித்தது. ஜாக்சனும், திரில்லர், பேட், டேஞ்சரஸ், ஹிஸ்டரி என வரிசையாக ஆல்பங்களை வெளியிட்டு ரசிகர்களின் கால்களை இசையால் கட்டிப்போட்டார்.

ரோபோ டான்ஸ், மூன் வாக் என இவருடைய பிரபல ஸ்டெப்புகள் இன்றைக்கும் சுண்டி இழுக்கும். புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக, கால்களை நகர்த்த உதவும் காலணியை உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பதிவு செய்து கொண்டார். இதை அணிந்துகொண்டுதான் ரப்பரைப்போல முன்பக்கம் அதிகமாக வளைந்து நடனம் ஆடியதாகச் சொல்வார்கள்.

அல்டிமேட் ஃபேஷன் உலகின் அடையாளமாக இருந்தார். ராணுவத்தினர் அணியும் சீருடைகளில் மாற்றம் செய்து அணிவது, கைகளில் கிளவுஸ், உடைகளில் வைரம் பதிப்பது, ஷார்ட் பேன்ட் இப்படி இவர் அணிந்த உடைகள் அனைத்தும் நாகரிக மாற்றத்தின் ஆரம்பம்.

“செல்வம் முக்கியமில்லை. உன் அன்பால் பிறரை எவ்வளவு நிறைக்கிறாய் என்பதே முக்கியம்!” என்று சொன்ன ஜாக்சனை நீள மூக்கு என்றும் குரல் மின்னி மவுஸ்போல இருக்கிறது என்றும் ஏளனம் செய்தார்கள். காயங்களைக் கண்டுகொள்ளாமல் ‘ஹீல் தி வேர்ல்ட்’ (உலகின் காயங்கள் ஆற்றுவோம்) என்று பாடினார். “நாம் தான் உலகம்!” என்று எல்லாரையும் அன்பு செய்தார். பாப் இசை உலகில் சக்கரவர்த்தியாக வலம் வந்த இவர், தனது கருத்த தேகத்தை வெண்மையாக்கும் முயற்சியில் இறங்கினார். ஆம்… உடல் முழுவதும் பிளாஸ் டிக்சர்ஜரி செய்து கொண்டார்.

பல முறை தொடர்ந்த இந்த முயற்சி ஜாக்சனுக்கு பெரும் வினையாக அமைந்தது. உடல் வலிமை இழந்தது. ஒரு புறம் சிகிச்சை, மறுபுறம் இசை என மாறி மாறி இவரது வாழ்க்கை சிக்கலை சந்தித்தது. பிரஸ்லி, டொபாரே என 2 மனைவிகளுமே இவரிடம் விவாகரத்து பெற்று விட்டனர். இளம் வயது வளர்ப்புச்சூழல், மனைவிகள் பிரிந்தது என சொந்த வாழ்க்கை இவருக்கு எமனாக விளைந்தன. போதைப் பழக்கம், சிறுவர்களுடன் தகாத உறவு என பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். கைது, வழக்கு, உடல் நிைல பாதிப்பு என வரிசையாக மைக்கேல் ஜாக்சனை போட்டு தாக்க, அதிகளவு கச்சேரிகளை நடத்தி மீண்டுவர எண்ணினார். இவரின் இசைப்பயணத் திட்டத்தில் இந்தியாவும் இணைந்திருந்தது. ஆனால், 2009, ஜூன் 25ம் தேதி இவ்வுலகில் இருந்து பாப் இசை மன்னர் விடைபெற்றார். இன்று எத்தனையோ பேர் பாப் இசையில் வலம் வந்தாலும், இவரின் இடம் மட்டும் வெற்றிடமாகவே உள்ளது. பாப் இசை இருக்கும் வரை ஜாக்சனும் இருப்பார்…! ❤

செல்லப் பெயர்கள்
கிங் ஆஃப் பாப்
வேக்கோ ஜாக்கோ
எம்.ஜே.
ஆப்பிள்ஹெட்
மைக்