April 11, 2021

குஷ்பு நீக்கம் – காங்கிரஸ் + நான் விலகறேன் – குஷ்பு = மண்டே ஃபன் ரிப்போர்ட்!

பிரபல நடிகை குஷ்பு திடீரென காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று அறிவித்துள்ளது. அதை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ள குஷ்பு தாம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 முதல் திமுகவில் இருந்த நடிகை குஷ்பு , 2014 ல் இருந்து காங்கிரசில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இவர் சமீப காலமாக காங்கிரசில் சில நிர்வாகிகளுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் கட்சி மீதும், கட்சி தொண்டர்கள் அவர் மீதும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் அவர் பா.ஜ.,வில் சேரவுள்ளதாக செய்தி பரவியது. இதனால் இவர் இன்று டில்லி சென்றுள்ளார். இதனையடுத்து குஷ்புவை காங்., செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் மூத்த செயலர் பிரனவ்ஜா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் குஷ்பு ஒரு அறிக்கை வெளியிட்டார்

சோனியாவுக்கு எழுதி இருக்கும் அந்தக் கடிதத்தில் குஷ்பு, `காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. கடினமான சூழல்களில் பல்வேறு தளங்களில் நமது கட்சியின் பிரதிநிதியாக செயல்படுவதை நான் எப்போதுமே பெருமையாகக் கருதியிருக்கிறேன்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கடினமான சூழலில் நான் கட்சியில் இணைந்தேன். பணத்துக்காகவோ புகழுக்காகவே நான் கட்சியில் இணையவில்லை. களத்தில் இருக்கும் மக்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத, மக்கள் அங்கீகாரம் இல்லாத சிலர் கட்சியின் உயர் பதவியில் அமர்ந்துகொண்டு கட்டளை பிறப்பிக்கிறார்கள். கட்சியின் நலனுக்காக உண்மையில் உழைக்கும் என்னைப்போன்றவர்களை அவர்கள் புறந்தள்ளுவதோடு, ஒடுக்கவும் செய்கிறார்கள். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன்.

இந்த சமயத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்’’ என்று குஷ்பு குறிப்பிட்டிருக்கிறார்.