ஆற்றுக்கால் பொங்கல் வழிபாடு : கொரோனா எச்சரிக்கையையும் மீறிய கூட்டம் – வீடியோ!
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பகவதி அம்மன் கோயில் வாசலில் பொங்கல் வைத்து வழிபடும் ஆற்றுக்கால் பொங்கல் வழிபாடு இன்று நடைபெற்றது. இதையொட்டி பொங்கல் வைத்தவர்கள் கொரோனா வைரஸூக்கு பயந்து மாஸ்க் அணிந்து வழிபட்டனர்.
மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் பரசுராமர், ‘இறைவனின் இருப்பிடம்’ என்று அழைக்கப்படும் கேரளாவை உருவாக்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. கேரள தேசத்தை உண்டாக்கிய பரசுராமன், அங்கு 108 சிவாலயங்களையும், 108 அம்மன் ஆலயங்களையும் அமைத்தார். கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனித்தனி பெயர்கள் எதுவும் கிடையாது. அனைத்து அம்மன்களும், அந்தந்த ஊரின் பெயரைச் சேர்த்து ‘பகவதி அம்மன்’ என்றே அழைக்கப்படுகிறார்கள்.
கேரளாவில் ஏராளமான பகவதி அம்மன் ஆலயங்கள் இருந்தாலும், எந்த ஆலயத்திற்கும் இல்லாத, அல்லது எல்லா ஆலயங்களையும் விட உயர்ந்த சிறப்பு ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்திற்கு உண்டு. அதற்கு இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கூடி, பொங்கல் வைத்து வழிபாடு முக்கியமான நிகழ்வு நடைபெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 9 ஆம் நாளான இன்று பிரசித்திப்பெற்ற பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. இன்று காலை 10.20 மணிக்கு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது. அதன்பிறகு கோயிலில் சுமார் 20 கிமீ சுற்றளவில் திரண்டுள்ள லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடும் சிறப்பு நிகழ்வு நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2.10 மணியளவில் பொங்கல் நிவேத்தியம் நடக்கிறது.
பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக திருவனந்தபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் திரண்டுள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் கோவைட்-19 (கரோனா வைரஸ்) தாக்குதலில் 5 பேர் பாதிக்கப்பட்டிருந்த போதும் பொங்கல் விழாவை தவிர்க்க முடியாது என மாநில மக்கள் தெரிவித்துள்ளனர். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷை லஜா கூறுகையில் சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக பொங்கலை வைத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து மக்கள் அதிக அளவில் கூடுவர் என்பதால் சுகாதாரத்துறையினர் அப்பகுதிகளில் மேற்பார்வையிட்டு வருகின்றனர். விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் வீடியோ எடுக்கப்படும். அவர்களுக்கு எந்த ஒரு பிரச்னை என்ற போதிலும் அவர்களின் குடும்பத்தினரை எளிதாக தொடர்பு வசதியாக இருக்கும் என கூறி உள்ளார். அத்துடன் பொது வெளியில் பொங்கல் வைத்தவர்கள் மாஸ்க் அணிந்திருந்தார்கள்.