சபரிமலை கோயிலை வைத்து சர்ச்சையை கிளப்பிய ரஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை

சபரிமலை கோயிலை வைத்து சர்ச்சையை கிளப்பிய ரஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை

சர்ச்சைப் பூமியாகி விட்ட  சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரஹானா பாத்திமாவுக்கு தற்போது நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பரில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி, கேரளாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா(29) அதிரடிப்படை சீருடை, ஹெல்மெட் அணிந்து பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்தார். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவரால் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.

கோயிலுக்கு செல்வதற்கு முன்னதாக மாலை அணிந்து, சபரிமலைக்கு கோவிலுக்கு செல்லும் போது உடுக்கும் ஆடையை அணிந்துக்கொண்டு அவர் வெளியிட்ட புகைப்படம் முகம் சுழிக்கச் செய்தது.எனவே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப் பட்டது. இதனடிப்படையில், ஐபிசி 295 ஏ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் முன்ஜாமின் கேட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், முன்ஜாமின் வழங்க மறுத்ததுடன், நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரஹானா பாத்திமா பத்தனம்திட்டா போலீசாரால் கடந்த நவம்பர் 27ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைதான ரஹானா பாத்திமா பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ரஹானா கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை இன்று விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ரஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதே நேரம் அவர் பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!