ஆண்களைப்போல உடை அணியும் பெண்களுக்கு திருநங்கை குழந்தை! – கேரளா சர்ச்சை!

சர்வதே அளவில் அவ்வளவு ஏன் நம் இந்தியாவிலேயே பல்வேறு இடங்களில் பல்வேறு உடை கலாச்சாரங்கள் இருக்கின்றன. அவை யாவும் அந்தந்த பகுதியின் வெட்பதட்ப நிலை மற்றும் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்தே இருந்துள்ளன. இன்றும் மேற்கத்திய நாடுகளில் கோட்ஷூட் அணிந்து இறுக்கமாக டை கட்டிக்கொள்ள காரணம் அங்கே வருடத்தில் பெரும்பாலான நாட்கள் மிகுந்த குளிராக இருக்கும். ஆனால், நாம் கொதிக்கும் சட்டியில் இருப்பதுபோன்ற வெயிலில் ஏன் அதே உடையை பின்பற்றுகிறோம். உடையில் இது தான் நாகரீகம் என்று எதுவும் இல்லை. எல்லாம் அவரவர் கலாச்சாரத்தை சார்ந்தது. அதிலும் நம் இந்தியச் சூழலில் பெரும்பாலான பெண்கள் சேலையே உடுத்துகிறார்கள். அது கண்ணியமான உடை என்றும் நம்ப வைக்கப்படுகின்றனர் . ஆனால் அதில் இடுப்பு , மார்பகம் தெரிவதில் பிரச்சனை இல்லை . ஆனால் ஒரு பெண் இந்தியச் சூழலில் நீண்ட கால்சட்டை அணிந்து , மேலை சட்டை அணிந்து , அப்போது கையை மேலே தூக்கும்போது தெரியும் இடுப்பு பலருக்கு காமத்தை ஏற்படுத்துகிறது சிலருக்கு அருவருப்பாக இருக்கிறதாம் .

ஏன் என்றால் இந்திய மக்களைப் பொருத்தவரை சேலை கண்ணியமான , நம் பண்பாட்டை பறைசாற்றுகின்ற உடை , ஆனால் ஜீன்ஸ், டி- சர்ட் அப்படி இல்லை என்கின்ற முன் பதிந்த எண்ணங்கள். மேற்கத்திய நாடுகளில் நீண்ட பிராக்(கவுன்) மட்டுமே பெண்கள் அணிவது கண்ணியமாக பார்க்கப்பட்ட சூழல் இருந்தது. ஆனாலும் இன்றைக்கு அவர்கள் அணியும் நீண்ட கால்சட்டை உடுத்த பெருமளவில் போராட்டங்கள் நடத்தியே இன்று இயல்பாக அணியும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர் என்பதே வரலாறு. 1919 ஆம் ஆண்டு Puerto Rico வைச் சேர்ந்த லுய்சா காபிடிலோ (Luisa Capetillo) என்பவர்தான் பொது இடத்தில் முதன் முதலாக நீண்ட கால்சட்டை அணிந்தவர், அதன் காரணத்தால் மிகப் பெரிய குற்றம் இழைத்ததாக கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார் என்பதெல்லாம் வரலாறு.

இச்சூழ்நிலையில் ஆண்களைப்போல உடை அணியும் பெண்களுக்கு திருநங்கைகள்தான் குழந்தைகளாக பிறப்பார்கள் என கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ரஜித் குமார் என்னும் பேராசிரியர் நுண்ணுயிரியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு மற்றும் தனியார் சார்பில் மாணவர் களுக்காக நடத்தப்படும் பல்வேறு முகாம்கள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் உரையாற்றிவருகிறார். இதுவரை இவர் 1700 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இப்பேர் பட்டவர் சமீபத்தில் பங்கொண்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண்களைப்போலவும், ஆண்களின் உடைகளையும் அணியும் பெண்களுக்கு திருநங்கைகள்தான் பிள்ளைகளாக பிறப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கெனவே கேரளாவில் 6 லட்சம் பேர் திருநங்கைகளாக பிறந்துள்ளதாகவும் தெரிவித்தார். பெண்மையை இழிவுப்படுத்தும் பெண்களுக்கும், ஆண்மையை இழிவுப்படுத்தும் ஆண்களுக்கும் அதுபோலதான் பிள்ளைகள் பிறப்பார்கள் என தெரிவித்தார். மேலும் இவர்களுக்கு ஊனமுற்ற குழந்தைகளும், ஆடிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பிறப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ரஜித் குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, ரஜித் குமார் பேசியது குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், அவரை இனிமேல் அரசு சார்பில் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ரஜித் குமார் ஆணாதிக்க கருத்துக்களையும், மூட நம்பிக்கை வளர்க்கும் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவருவதாகவும் தெரிவித்த நிலையில் இது குறித்த சர்ச்சை அதிகரித்துள்ளது.