கேரளாவில் மாயமான இளைஞர்கள் ஐ எஸ்- சில் இணைஞ்சிட்டாங்களா?

கேரளாவில் இருந்து சுமார் 16 இளைஞர்கள் மாயமாகி உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற இவர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு இருக்கிறார்.

kerala isis

கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 16 இளைஞர்கள் திடீரென்று மாயமாய் மறைந்தனர். அவர்களைப் பற்றி கடந்த ஒரு மாதமாக எந்த தகவலும் இல்லை. எனவே இவர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்று பெற்றோர் உள்பட உறவினர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இது பற்றி காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வி.பி.பி. முஸ்தபா கூறும்போது, ரம்ஜான் பண்டிகையின்போது காணாமல் போன இளைஞர்களின் பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் தகவல்கள் வந்துள்ளது.அதில் ‘நாங்கள் திரும்பி வரமாட்டோம். இங்கு புனிதமான ஆட்சி நடக்கிறது. நீங்களும் எங்களுடன் இணையவேண்டும்’ என்று கூறப்பட்டு இருக்கிறது.

இன்னொரு செய்தியில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவுடன் போரிட நாங்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார். இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே  காணாமல் போன வாலிபர்களின் பெற்றோர் காசர்கோடு எம்.பி. கருணாகரன், திரிகரிப்பூர் எம்.எல்.ஏ. ராஜகோபாலன் மற்றும் முஸ்தபா ஆகியோரிடம் முறையிட்டு இதுபற்றி முதல்வரிடம் தெரிவிக்குமாறு கூறினார்கள்.

இது பற்றி கருணாகரன் எம்.பி, “இந்தப் பிரச்னை பற்றி உடனடியாக விசாரணை நடத்துமாறு கேரள போலீசாருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு இருக்கிறார். காணாமல் போன வாலிபர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள். நன்கு படித்தவர்கள். காணாமல் போன இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்னை சந்தித்து இது பற்றி தெரிவித்தார்கள். ஒரு மாதத்துக்கு முன் மத சம்பந்தமான படிப்புக்காக மத்திய கிழக்கு நாட்டுக்கு இவர்கள் சென்றதாக கூறினார்கள். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் பெற்றோர்களுக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது” என அவர் கூறினார்.

காணாமல் போன வாலிபர்களில் ஒருவர் பெயர் ஹபெசுத்தின். இவர் காசர்கோடுவை சேர்ந்தவர். அவரின் தந்தை ஹகிம், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “எனது மகன் ஒரு மாதத்திற்கு முன் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றான்.  ஆனால் அவனைப்பற்றிய தகவல் இதுவரை இல்லை. அவன் நல்லவனாக திரும்பி வந்தால் நான் அவனை வரவேற்பேன். இல்லை என்றால் அவனது பிணத்தைகூட பார்க்க விரும்பமாட்டேன் என்றார்.

காணாமல் போனவர்களில் 11 பேர் காசர்கோடு மாவட்டம் பட்னா மற்றும் திரிகரிபூரை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இது பற்றி முஸ்தபா, “காணாமல் போனவர்களில் டாக்டர் இஜியாசும் அவரது மனைவியும் அடங்குவர். டாக்டர் இஜியாசின் மனைவி பல் டாக்டருக்கு படித்திருக்கிறார். 8 மாத கைக்குழந்தையும் டாக்டர் தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார் அதே போன்று அப்துல் ரஷீத் என்ற என்ஜினீயர் தனது மனைவி மற்றும் 2 வயது மகளையும் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். மும்பையில் வேலை தேடுவதாக கூறிவிட்டு சென்று இருக்கிறார். இவர்கள் அனைவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கடந்த 2 ஆண்டுகளாக மத பிரச்னைகளில் ஆர்வமாக இருந்துள்ளனர் என்றார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இயக்கத்தி்ல கேரள இளைஞர்கள் இணைந்துள்ளதை அடுத்து அந்த மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி மாநில நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்குமாறு கூறப்பட்டு இருக்கிறது.