கென்னடி கிளப் – விமர்சனம்!

கபடி அல்லது சடுகுடு ஆட்டம் அல்லது பலிஞ் சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு குறித்து இப்போதைய பதின்மர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது சோகமான, உண்மை யான செய்தியாக்கும். இத்தனைக்கும் கபடி விளையாட்டில் இந்தியா யாராலும் வெல்லவே முடியாத சாம்பியானாக தொடர்ந்து இருந்து வருகிறது. அத்துடன் இந்த  கபடி விளையாட்டு தமிழர்களின் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. வீரத்தோடு தொடர்புடையது. நம் கலாச் சாரத்தின் உயிர் செல்கள் ஒவ் வொன்றாய் உதிர்ந்து காணாமல் போய் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில், கபடி என்னும் விளையாட்டும் அப்படிப்பட்ட கோமா ஸ்டேஜில்தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்கள்… அல்லது அடுத்தத் தலைமுறையில் கபடி நம் பாடப்புத்தகத்தோடு கபடி வரலாற்றை முடித்துக் கொள்ளும் என்பதென்னவோ நிஜம், இப்படி யாப்பட்ட சூழலில் கபடி விளையாட்டையும்,  அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கையும் ஒரே நேர் கோட்டில் போட்டு கென்னடி கிளப் என்றொரு வழக்கமான சினிமா ஒன்றை சுசீந்தரன் வழங்கி இருக்கிறார்.

எக்ஸ் மிலிட்ரி மேன் பாரதிராஜா. ஒட்டன்சத்திரம் கிராமத்தில் ‘கென்னடி கிளப்’ என்கிற கபடி குழு ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இதில் பயிற்சி பெற்றதன் மூலம் கிடைத்த ரயில்வேயின் பணியாற்றி வருகிறார் சசிகுமார். இந்த கென்னடி கிளப் குழுவில் பெண்கள் அணியை உருவாக்கி அதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களாக தேர்ந்தெடுக்கிறார் பாரதிராஜா. பலவித இக்கட்டுகள், சோதனைகளைத் தாண்டி மாநில அளவிலான போட்டியில் ‘கென்னடி கிளப்’ வெற்றி அடைகிறது. அதே போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரங்கனை இந்தியன் அணிக்கு தேர்வாகிறார். ஆனால் அங்கு நடக்கும் ஊழல் பேரம் காரணமாக அவர் அந்த அணியில் விளையாட முடியாமல் விரக்தி அடைந்த அந்த வீராங்கனை மருந்து குடித்து தற்கொலைக்கு முயல்கிறார். இதை அடுத்து என்ன ? எப்படி என்பதுதான் கதை.

முக்கிய கேரக்டர்களாக பாரதிராஜாவும், சசிகுமாரும் தோன்றுகிறார்கள். இவ்விருவர் இனைந்த டீ எப்படியும் ஜெயித்து விடும் என்று லாலிபாப் ரசிகன் கூட புரிந்து கொள்வதால் இவர்களின் நடிப்பு ஒட்டவே இல்லை. பாரதிராஜா பேசும் பொதெல்லாம் தொண்டை நரம்புகள் புடைப்பது ஏனென்று தெரியவில்லை..சசிகுமாரும் சம்பளம் வாங்காத மன நிலையை பிரதி பலிப்பது போல் ஏனோ தானோவென்று கடந்து போகிறார். மேலும் 7,8 பெண்கள் கபடி வீராங்கனைகளாக நடித்திருக் கின்றனர். ஸாரி விளையாடி இருக்கிறார்கள்.. அவர்களின் வறுமைக் கதை எதுவும் வலுவாகச் சொல்லபடவில்லை என்பதுதான் சோகம். டி. மான் தன்னால் முடிந்த அளவு பின்னணி இசையை வழங்கி பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

விளையாட்டு கதை என்றாலே சில குறிப்பிட்ட காட்சிகளைத் தாண்டி யாருமே புதுசாக யோசிப்ப தில்லை. அந்த லிஸ்டில் சுசீந்தரனும் சேர்ந்து விட்டார் என்பது வருத்தமாக இருக்கிறது. இது பெண்கள் ஆடும் கபடி ஆட்டக் கதை என்பதை மட்டும் முடிவெடுத்து விட்டு ’கபடியின் விதி முறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை’ என்று சொல்வது போல் வழக்கமான விளையாட்டுக் கதைகளுக்குரிய சீன்களை வைத்து ஒப்பேற்றி ஏமாற்றம் தந்து விட்டார் சுசீந்தரன். அதிலும் சசிகுமார் தன் டீமுக்கு துரோகம் செய்ய முற்படுகிறார் என்று பாரதி ராஜா நம்பி டீம் பிளேயர்ஸ்களை குழப்புவதெல்லாம் ஓவர். அத்துடன் கிளைமாக்ஸ் காட்சி சபா நாடகத்தனமாக இருக்கிறது.

மொத்தத்தில் கென்னடி கிளப் என்ற பெயரில் கிடைத்த வாய்ப்பில் முழுமையாகக்  கபடி விளையாடாமல்  ஏதோ ஷோ காண்பித்து அனுப்பி விட்டார் சுசீந்தரன்.

மார்க் 2.5 / 5