September 27, 2021

கேணி – திரை விமர்சனம் = கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்!

கலை, காப்பியம், பேய், பழிவாங்கல், காதல், கல்யாணம், காலேஜ்பாய், மசாலா என்று விதவிதமாய் தயாராகி, வெளியாகி காணாமல் போகும் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற் போல் உருவாகி தனிக் கவனம் பெற்ற படம்தான் கேணி. ஆமாமுங்கோ.. வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட இந்த இந்திய திருநாட்டில் இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக்   கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போக்கும் அதனால் முழு பாதிப்படையும் தமிழருக்காக அவ்வப்போது ஆறுதல் வார்த்தையுடன் ஆவேச குரல் கொடுத்து அடுத்த ஓரிரு நாளில் அதை நீர் குமிழியாக்கும் பிரச்னை சகலருக்கும் தெரிந்ததுதான். அப்படியான ஒரு நதி நீர் பங்கீடு தாவா-வை முன்னிலைப்படுத்தி மனிதனுக்கு அத்தியாவசியத் தேவையாக விளங்கும் தண்ணீரையும், அந்த தண்ணீர் பங்கீட்டில் விளையாடும் அரசியலையும் அப்பட்டமாக சொல்லியிருக்கும் திரைப்படமே “கேணி”.

இத்தனைக்கும் இந்த படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத் ஒரு மலையாளி. படத்தைத் தயாரித்திருக்கும் சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இருவருமே மலையாளிகள். இந்த மலையாளிகளால் கூட்டுச் சேர்ந்து படைத்திருக்கும் இந்த கேணி முழுக்க உண்மையின் பக்கம்- அதாவது – நம் தமிழர்களுக்கு ஆதரவாகவே குரல் கொடுக்கிறது என்பதுதான் ஸ்பெஷல் பிரமிப்பு .அதிலும்

தமிழகத்திற்கும், கேரளாவிற்குமான முல்லை பெரியாறு என்னும் மிக பிரமாண்டமான ஒரு அணை பிரச்னையை ஜஸ்ட் ஒரு கிணற்றை மையமாகக் கொண்டு அந்த கிணற்றுக்கும் ரெண்டு ஸ்டேட் போலீஸ் பந்தோபஸ்தெல்லாம் போட்டு கிணறுதான் அணை என்று சகலரையும் நினைக்க வைத்ததில் டபுள் புரொமோசன் வாங்கி விட்டார் இயக்குநர். குறிப்பாக வணிக ரீதியாக கல்லா பார்க்க வேண்டுமென்ற நோக்கில் இரட்டை அர்த்த வசனங்களோ, குத்துப்பாட்டோ இல்லாமல் பார்க்கத் தக்க வகையில் வழங்கி இருப்பதும் சிறப்பு.

படத்தில் கதை என்னவென்றால் தண்ணீருக்காக போராடிய இந்திரா என்ற கேரக்டர்தான் மெயின். கேரளாவில் ஹானஸ்டான அரசு அதிகாரியின் மனைவியான இந்த இந்திரா என்ற பெயரிலான ஜெயப்பிரதா,தன் கணவர் ஹார்ட் அட்டாக் வந்து காலமாகி விட்ட நிலையில் அவரின் கடைசி ஆசையான தமிழகத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞன் ஒருவனின் இளம் மனைவியும் வருகிறார். வந்து தங்கிய கிராமத்தில் தனக்கான இடத்தில் இருந்த ஒரு கேணியும் அதற்கு பின்னால் வியாபித்திருக்கும் எல்லைப் பிரச்சினையுடன் கூடிய அரசியல் சூழ்ச்சியும் தெரிய வருகிறது. அதே சமயம் அந்தக் கிராம மக்கள் சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் நொந்து போயிருக்கும் சூழலில் தனக்கு சொந்தமான கேணியிலுள்ள வற்றாத நீர்வளத்தை ஊர் மக்களுக்காக வழங்க முடிவெடுத்து போராடுவதே கதை.

ஆனால் ரொம்ப சிம்பிளான அதே சமயம் ஸ்பெஷலான இந்த இந்திராவைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சிக்கும் மூன்று ரிப்போர்ட்டர்கள், அவர்களுக்கு இந்திராவின் கதையை சொல்ல மூன்று கேரக்டர்கள், அவர்களுக்கு துணை, இணையாக சில பலர் என்று அதிகப்படியான ஆட்களால் சொல்ல வந்த மெயினான திரைக்கதை அமுங்கி போனதுடன் படத்தின் நீளமும் அதிகரித்து ஆயாசம் ஏற்படுத்துகிறது..

இத்தனைக்கும் நம்மால் இன்னும் மறக்க இயலாத கோமல் & பாலசந்தர் கூட்டணியில் வந்த ‘தண்ணீர் .. தண்ணீர்’ தொடங்கி அண்மையில் நயன்தாரா & கோபி வழங்கிய ‘அறம்’ வரையிலான பல படங்களில் சொன்ன, அலசிய சமாச்சாரம்தான். ஆனால் இன்றளவும் சர்ச்சைக்குரிய – அதிலும் இரண்டு மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையை சொல்வதால்தான் இந்த கேணி எக்ஸ்ட்ரா மார்க் வாங்குகிறது. அதிலும் நடப்பு அரசியலை அலசும் தாஸ் ராம் பாலாவின் வசனங்கள் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது.

“ராக்கெட் விடுறோம், ஏவுகணை தயாரிக்கிறோம்.. ஆனா இன்னும் மனுஷன் பேண்டதை மனுஷன் தானே அள்ளிட்ருக்கான்.. அதை என்னைக்காவது பேசியிருக்கோமோ?”

“நடிகை குழந்தை பெத்துகிட்டா அவ புருஷன் சந்தோஷப் படாம பக்கத்து வீட்டுக் காரனாடா சந்தோஷப்படுவான்.. அதையெல்லாம் செய்தியாக்குறீங்க?”

“10 நடிகன், 20 அரசியல்வாதி, 30 விளையாட்டு வீரன் இவனுங்க 50 பேர் மட்டுமா இந்தியா?, 125 கோடி பேர் இருக்கான்.. அவனுங்களையும் பாருங்க”

”கேரளா தண்ணியிலே தமிழ்நாட்டு பருப்பு வேகாது..”

என்பது போன்ற வசனங்களுக்கு கை தட்டாத ரசிகன் கிடையாது. அதற்காக ஆரம்பத்தில் பல சீன்களில் முழு வசனத்தையும் மலையாளத்தில் பேச வைத்து கடுப்பேற்றி விடுகிரார்கள்

அது மட்டுமின்றி ஊர் எல்லையில் டீ கடையில் வெட்டியாக இருக்கும் சாம் கேரக்டர், அங்கு டீ குடிக்க வரும் லாரி டிரைவர் எல்லாம் நக்கல்தனமாகவும், அதிகபிரசங்கிதனமாகவும் பேசும் வசனம் சலிப்பை தருகிறது. அத்துடன் ஊர் பெரிசாக வரும் பார்த்திபன் ரோல் வேஸ்ட். ஆ..ஊ-ன்னா கூட்டத்தில் வந்து தமிழனுக்கு ஆதரவாக டயலாக் மட்டும் பேசி போகிறார். அப்புறம்.. ஜெயபிரதா -வுடன் கிராமத்திற்கு அழைத்து வரும் பார்வதி நம்பியார் ரோல் எதற்கு என்றே புரிபடவில்லை.

நௌஷாத் ஷெரிப்,ஒளிப்பதிவு. படத்திற்கு பெரும்பலம். ஜெயச்சந்திரன் இசை இனிமை. “அய்யா சாமி” பாடலும், “கலையும் மேகமே”பாடலும் படத்தோடு பார்க்கும் போது நன்றாகவே இருந்தது..விக்ரம் வேதா” சாம்.சி.எஸ் பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார். ஆனால் எடிட்டர் ராஜா முகமது-தான் தயவு தாட்சண்யம் இல்லாமல் தன் பணியை செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. இந்தப் படத்திற்கு தேவையானதை மட்டும் அனுமத்தித்து இருந்தால் ஷார்ட் & ஷார்ப்-பாக இருந்திருக்கும்.

ஆனாலும் கையில் எடுத்த இரு முனை ஆயுதத்தை மிக நேர்த்தியாக கையாண்ட கேணி டீமுக்கு ஸ்பெஷல் பொக்கே..

மொத்தத்தில் கேணி – கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்

மார்க் 5 / 3.25