August 11, 2022

ஜீவா- நிக்கி நடிப்பில் தயாரான கீ திரைப்பட விமர்சனம்!

இதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமலே மண்ணுளி பாம்பைக் கடத்துவதில் துவங்கி, நாக மாணிக்க கல், ரைஸ் புல்லிங், லக்கி பிரைஸ் போன்ற மோசடிகள் ஒரு பக்கம் அன்றாடம் நடந்தாலும் ஆன்லைன் மோசடிகளின் வளர்ச்சிதான் சர்வதேச அளவில் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. அதிலும் இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலான வேலைகள் அனைத்தையுமே Mobile Phone வழியாகவே செய்து முடித்துவிடுகிறோம் . நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவது முதல் பல்வேறு பில் செலுத்துவது , வங்கி பண பரிமாற்றங்களை மேற்கொள்ளுவது , பொருள்களை ஆன்லைனில் வாங்குவது என எல்லா வேலைகளையும் மொபைல் மூலமாகவே செய்து விடுகின்றோம். அத்துடன் பலர் இந்த மொபைல் மெசெஞ்சர் மூலம் மூஞ்சு புத்தகம் எனப்படும் ஃபேஸ்புக்கை ஆப்பரேட் செய்வதால் நம்மைப்பற்றிய சொந்த தகவல்கள் (போட்டோ , வீடியோ , மெசேஜ் முதலியன ) , வங்கி தகவல்கள் என அனைத்துமே நமது மொபைலுக்குள் அடக்கமாகி விடுகிறது என்பது தெரிந்த விஷயமே. இதை குறி வைத்து ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மொபைல் போன்கள் ஹேக்கிங் செய்யப்படுகின்றனவாம் . ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் அவ்வளவாக இல்லை என்ற அது குறித்தான் எச்சரிக்கை யூட்டும் படம் என்ற கோஷம் போட்டப்படி நீண்ட நாள் கிடப்பில் கிடந்து ரிலீஸான படம்தான் கீ.

ஜீவா காலேஜ் ஸ்டூடண்டாம். படிப்பதை விட கம்ப்யூட்டர் & ஸ்மார்ட் போன்கள் ஹேக்கிங் செய்வதில் எக்ஸ்பர்ட்டாகவும் இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி அவரின் கிளாஸ்மேட். பாட்ஷா என்ற வைரஸ் ஒன்றை கண்டுபிடித்த ஜீவா காலேஜில் எக்ஸாம் நடக்கும் முன்னாடியே கேள்வித்தாளை திருடுவது, பெண்கள் பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் போனை ஹேக் செய்து  விளையாட்டாக  பெண்களுடன் பழக முயற்சிக்கிறார். அந்த ரூட்டில் போகும் போது ரிப்போர்ட்டர் அனைகாவுடன் நட்பாகி அவருடன் சுற்றி வருகிறார்.

இதற்கிடையே, ப்ளூவேல் பாணியில் சிலரது போனுக்கு மர்ம கால் ஒன்று வர, அதில் பேசுபவர், யாரையாவது கொலை செய்ய சொல்ல, அவர்களும் அந்த போன் குரலுக்கு அடிபணிந்து கொலை செய்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அனைகா அந்த சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் குறித்து பல தகவல்களை சேகரிப்ப தோடு, அந்த போன்கால்களை செய்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ஜீவாவிடம் உதவி கேட்க, அவரும் தனது ஹேக்கிங் தொழில்நுட்பம் மூலம் அந்த மர்ம போன்கால்கள் வரும் இடத்தை கண்டுபிடித்துவிடுகிறார். ஆனால், அங்கு அனைகா சென்று பார்க்கும் போது அவர்கள் இடத்தை காலி செய்துவிடுகிறார்கள்.

இதற்கிடையே, நிக்கி கல்ராணியை பார்த்ததும் காதல் கொள்ளும் ஜீவா, அவர் பின்னாடி சுற்ற ஆசைப்பட்டு அனைகாவுக்கு உதவ மறுப்பதோடு, ஹேக்கிங் செய்வதையே விட்டு விடுகிறார். இந்த நிலையில், மர்ம கும்பல் தங்களது தொழில்நுட்பம் மூலம் அனைகாவை கொலை செய்து விடுவ தோடு, ஜீவாவையும் கொலை செய்ய முயற்சிக்க, அப்போது தான் அவருக்கு பொறி தட்டுகிறது. உடனே அனைகாவை சந்திக்க செல்லும் ஜீவாவுக்கு அவர் இறந்த செய்தி அதிர்ச்சியை கொடுக் கிறது. உடனே, அனைகா பற்றியும், அவர் சொன்ன அந்த மர்ம போன் கால் பற்றியும் தெரிந்துக் கொள்ள களத்தில் இறங்கும் ஜீவாவுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவர, அந்த மர்ம கும்பலை களை எடுக்க களத்தில் இறங்கும் ஜீவா, அதை எப்படி செய்து முடிக்கிறார், அவர்கள் எதற்காக பலரை மிரட்டி கொலை செய்கிறார்கள், என்பது தான் ‘கீ’ படத்தின் கதை.

கடந்த 2018ல் ஒரு மணி நேரத்திற்கு 1.4 லட்சம் அக்கவுன்ட்கள் ஹேக்கிங் செய்யப்படுவதாக அண்மையில் சைபர் செக்யூரிட்டி வெளியிட்டுள்ளது. அதே சமயம் உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வந்து விட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் இண்டர்நெட் தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு வசதிகள் இருக்கிறதோ அதை விட பல மடங்கு ஆபத்தும் இருக்கிறது என்பதை சொல்ல முயன்ற டைரக்டர் காளீஸ் அதை பாமர ரசிகனும் புரியும் விதத்தில் சொல்ல தவறி விட்டார்.. அதிலும் இதயத்துடிப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் பேஸ் மேக்கரில் இருந்து ரோட்டில் செல்லும் கார் வரை அனைத்தையும் அசால்ட்டாக ஹேக் செய்வதெல்லாம் காமெடி பட ஃபீலிங்கைக் கொடுத்து விட்டது.

ஜீவா வழக்கம் போல தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்திருந்தாலும் திரைக்கதையில் ஒட்டுதல் இல்லாததால் தனிக் கவனம் பெறவில்லை .நிக்கி கல்ராணி, அனைகா ஆகியோர் இப்படத்தில் வருகிறார்கள், அம்புட்டுத்தான். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை. அதே சமயம் பின்னணி இசை படத்தை கொஞ்சம் தூக்கிக் காட்டுகிறது. ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு மோசமில்லை.

திடீரென்று ஒரு போன் கால் வர, அதை எடுத்து பேசுபவர்கள் மர்ம குரலுக்கு பயந்து, உடனே அவர்கள் சொல்பவர்களை விபத்து ஏற்படுத்தி கொலை செய்கிறார்கள். ஆனால், அவர்கள் கொலை யால் அந்த மர்ம கும்பலுக்கு என்ன லாபம், அவர்களுக்கு பயப்படுபவர்களை எதை வைத்து மிரட்டு கிறார்கள், என்பதை ஒரே ஒரு காட்சியின் மூலம் இயக்குநர் சொல்லியிருந்தாலும், அதை அழுத்தமாகவோ அல்லது புரியும்படியும் சொல்லாதது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

ஆக, ’கீ’ என்ற ஒற்றை எழுத்தின் மூலம் மிகப் பெரிய எச்சரிக்கைய சொல்ல முயற்சித்த டீம், அதை சொல்ல கொஞ்சம் கூட மெனக்கெடாததால் மனசை திறக்கவில்லை

மார்க் 2.75 / 5