March 22, 2023

இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படும் கே.பாலசந்தர்!.

தைக்குதான், நடிகர் நடிகைகள் தேவையே தவிர, நடிகர், நடிகைகளுக்காக கதை கிடையாது என்பதில் அசாத்தியமான நம்பிக்கை வைத்திருந்தவர் இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படும் கே.பாலசந்தர்.  நடிகருக்காக வேண்டி என ஒரு கதையே ஷேப்செய்துகொண்டே போனால், தன் படைப்பு நாசமாகிப்போய்விடும் என்பதில் நம்பிக்கை வைத்தவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தி தன் அடுத்தடுத்து படங்களான மூன்று முடிச்சு, அந்துலேனி கதா, அவர்கள் போன்றவற்றில் வாய்ப்பு தந்த அதே பாலசந்தர், ஒரு கட்டத்தில் ரஜினியை டைரக்ட் செய்வதை தில்லுமுல்லு படத்தோடு நிறுத்திக்கொண்டார். ஒரு மாஸ் ஹீரோவை பல சமரசங்களோடு தன் கதைக்குள் கொண்டுவருவது தனக்கும் நல்லதல்ல, ஹீரோவுக்கும் நல்லதல்ல என்பது அவரது தீர்க்கமான முடிவு. இதை டைரக்ஷன் செய்ய ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடித்துள்ளார்.

மேடை நாடகங்களில் கலக்கி வந்த கே.பி-க்கு ஆர்எம் வீரப்பன் தொடங்கிய சத்யா மூவிசின் முதல் படமான தெய்வத் தாய் (1964) படத்தில் வசனகர்த்தா வாய்ப்பு வழங்கி திரையுலகை திறந்துவிட்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். இருந்தாலும் அப்போதைய மாஸ் ஹீரோ எம்ஜிஆரையெல்லாம் தன் கதைக்குள் கொண்டுவருவது கடினம் என்று நினைத்து அந்த பக்கமே தலைவைத்து படுக்கவில்லை. இன்னொரு பக்கம் சிவாஜி படங்களில் கேபி. வசனகர்த்தாவாக பணியாற்றினாலும் அவரை வைத்து இயக்கவும் தயக்கம் காட்டினார். பின்னாளில் எதிரொலி என்ற படத்தை சிவாஜியை வைத்து இயக்கியபோது அந்த படம் மோசமான தோல்வியை கண்டது என்பது தனி சோகக்கதை

தன் கதை வசனங்கள் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டே கே.பியின் ஆரம்ப பயணம் அவ்வளவு திடமாக இருந்தது- தெய்வத்தாய் படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமான பாலசந்தரின் நிஜமான திறமை அடிபட்டுபோகாமல் கட்டாயம் ஜொலிக்கும் என்பதற்கு அடையாளம்தான் அவரின் அடுத்த படமான, சர்வம் சுந்தரம். படத்தை இயக்கியது கிருஷ்ணன்- பஞ்சு இரட்டையர் என்றாலும் நாகேஷின் நடிப்புக்கு அடுத்தபடி ஜமாய்த்தது பாலசந்தரின் வசனமே..இதற்கு பிறகு படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது, இரு பெரும் திலகங்கள் போகாமல் எந்த தொல்லையும் வேண்டாமென தனக்கென்று ஒரு பட்டாளதை உருவாக்கிக்கொண்டார். அதில் மிகவும் முக்கியமானவர்கள் நாகேஷ், ஜெமினி கணேசன், முத்துராமன் சௌகார் ஜானகி போன்றவர்கள்.

பாலசந்தர் முதன் முதலாய் இயக்கிய படம் நீர்க்குமிழி. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என பாடும் நோயாளியை மையமாகக்கொண்ட, சோகமான படம். என்றாலும், நாகேஷின் அற்புதமான நடனத்திறமையை கன்னி நதியோரம் என்ற பாடல் மூலம் வெளிவந்தது. இயக்குநர் அவதாரமெடுத்த கே.பாலசந்தருக்கு பாமா விஜயம், எதிர்நீச்சல், இருகோடுகள் வெற்றிப்பயணம் அமர்க்களமாகவே ஆரம்பமானது.

இந்த காலகட்டத்தில் இந்தியில் சத்யகம் என்ற இந்திப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருந்தது. கல்லூரி காலத்தில் சத்தியத்தைபற்றி உயர்வாக பேசும் நண்பர்கள் எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பதுதான் கதை. எந்த நிலையிலும் சத்தியத்தை கடைபிடிப்பதில் தவறாமலேயே வாழ்ந்து கடைசியில் தன்னை நம்பியவர்களை காப்பாற்ற வேறுவழியில்லாமல் நேர்மையை தவறவிட்டு அதற்காக அப்படியே உயிரைவிடுகிற ஒருவனின் கதை. இந்த பாத்திரத்தை தர்மேந்திரா ஏற்றிருந்தார். அவரின் வாழ்க்கையில் மைல்கல் என்று இன்றைக்கும் பேசப்படும் படம் அது.

டைரக்டர் ஹிரிகேஷ் முகர்ஜி. இந்தி திரையுலக ஜாம்பவான். இவரை மானசீக குருவாக கருதியிருந்த பாலசந்தருக்கு சத்யகம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆசை.. ஜெமினி, முத்துராமன் நாகேஷ் ஜெயந்தி ஆகியோர் நடித்து புன்னகை என்ற பெயரில் பாலசந்தரின் இயக்கத்தில் வெளியாகியது. படம் பிரமாதமாக இருந்தது. ஆனால் வெற்றியைத்தான் அடைய முடியவில்லை. ஆனால் ஹிரிகேஷ் முகர்ஜியின் செம காமடி படமான கோல் மால் படத்தை தமிழில் ரஜினியை வைத்து தில்லுமுல்லு என இயக்கினார் பாலசந்தர். ஆனால் அதை தேங்காய் சீனுவாசன் படம் என்றுதான் சொல்ல வேண்டும். எதையாவது பண்ணி உன் இஷ்டம் போல நடிய்யா என்று தேங்காய் சீனுவாசனை அவர் போக்கில் பாலசந்தர் விட்டதற்கான பலனை இன்றுவரை ரசித்துக்கொண்டிருக்கிறோம. மீனாட்சி துரைசாமியாக அந்த சௌகார் ஜானகி.. அழுமூஞ்சி என்று வர்ணிக்கப்பட்ட சௌகாருக்கெல்லாம் காமெடி வருமா என்று வியக்கவைத்த படமாச்சே..!

சரி விட்ட இடத்தில் தொடருவோம்.. 1970 களில் அடுத்த தலைமுறை நடிகர் நடிகைகளை தன் பட்டாளமாக மாற்றிக்கொண்டு இன்னொரு தளத்திற்கு பயணப்பட்டார் பாலசந்தர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இரண்டும் கெட்டான் வயதில் தவித்துக்கொண்டிருந்த கமலுக்கு ஹீரோ அந்தஸ்த்தில் அரங்கேற்றம் படம் மூலம் பெரிய பிரேக் கிடைக்கச்செய்தவருக்கு புதுமுக ங்களை அறிமுகப்படுத்தும் ஆர்வமும் அதிகரித்தது..பல புதுமுக நட்சத்திரங்களை தமிழ் சினிமாவில் அறிமு கப்படுத்தி சகலத்தையும் தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டார்..

அவள் ஒரு தொடர்கதை மூலம் சுஜாதா,, அபூர்வ ராகங்கள் படத்தில் துண்டுரோலால் ராஜபாட்டை கிடைக்கப்பெற்ற. இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினி, மன்மத லீலையில் அறிமுகமாகி இந்திய திரையுலகம் முழுவதும் பவனி வந்த ஜெயப்பிரதா,.,, பின்னாளில் பிரகாஷ்ராஜ் என கே.பி.யின் நட்சத்தி அறிமுக பட்டியல் சதத்தை தாண்டும் அளவுக்கு நீளமானது..

இவர் இயக்கிய ஜெமினி கணேசனின் தயாரிப்பான நான் அவனில்லை…சகல அம்சங்களையும் கொண்ட விறு விறுப்பான படம். காட்சிகளில் சுவாரஸ்யம் காட்ட விரும்புகிறவர்ளுக்கு ஒரு பாடம் அது.. இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் சிவகுமார் போன்றோர் தங்கள் பேர் சொல்லவேண்டும் என்றால் சிந்துபைரவி போன்ற படங்களைத்தான் சொல்லவேண்டியிருக்கும்..

மூன்று முடிச்சு, அவர்கள், நிழல் நிஜமாகிறது, என எம்எஸ்வி, .கண்ணதாசன் கூட்டணியோடு கறுப்பு வெள்ளைகளில் மாஜிக் பாடல்களோடு அசத்தியவர் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவும் தவறவில்லை.. கமல், ரேவதி நடிப்பில் இளையராஜா இசையில் அவர் நிகழ்த்திய பிரமிக்க தக்க படைப்பான புன்னகை மன்னன் படமே இதற்கு சாட்சி..இன்னொரு குறும்புத்தனமும் இவரிடம் உண்டு.. தன் படங்களையே மீண்டும் உட்டாலக்கடி செய்து அழகன், கல்கி என தடாலடி செய்துவிடுவார்.

நாடகத்தன்மை அதிகம் என்றாலும் பட்டிணபிரவேசம், நூல்வேலி போன்ற படங்களெல்லாம் காட்சி அமைப்புகளுக்காக, பாடல்களுக்காக அணுஅணுவாய் ரசிக்கலாம். தன் படங்களில் பல வித்தியாசங்கள் செய்து வியக்கச்செய்தவர் பாலசந்தர். சாந்தமாக பாடும் பி.சுசிலாவை வெள்ளி விழா படத்தில் ஒவராக கத்தவிட்டு பாடச்செய்தார். எப்போதுமே அலட்டலாக பாடும் எல்.ஆர். ஈஸ்வரியை காதோடுதான் நான் பேசுவேன் என படு சாந்தமாக பாடவைத்தார். கிளைமாக்சில் பலரும் சண்டையை வைப்பார்கள். ஆனா கே.பியோ, அபூர்வ ராகங்கள் படத்தில் கேள்வியின் நாயகனே என்ற பாட்டையே கிளைமாக்சாக வைத்து முடித்தார். எதிர் நீச்சல் படத்தில் கடைசிவரை ஆள் யார் என்பதை காட்டாமல் வெறும் இருமலை மட்டுமே வைத்து இருமல் தாத்தா பாத்திரத்தை நிர்மாணித்தவர்.

புன்னகை மன்னனின் டைட்டில் பாடலான எதோதோ எண்ணம் வளர்த்தேனை… வெறும் நிழற்படங்களாக மட்டுமே முழுவதுமாய் காட்டி பாலசந்தர் அசத்திய விதம் அவ்வளவு ரசனைக்குரியது. தெறி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்பார்களே அதைவும் பாலசந்தர் தொடாமல் விட்டதில்லை. தெலுங்கில் கமல் சரிதாவை வைத்து மரோசரித்ரா எடுத்தார். தெலுங்கியே சென்னையில் 700 வது நாளை நெருங்கிய படம். மரோசரித்ராவையும் கமலையும் இந்தியில் ஏக் துஜே கேலியா என கொண்டுபோனார். அநத படமோ வெள்ளி விழாக்களை தாண்டி இந்தியா முழுவதும் சக்கைபோடு போட்டது.

நினைத்தாலே இனிக்கும் படம். கேபி, டைரக்சன், சுஜாதா வசனம் அப்புறம் கண்ணதாசன் பாடல்களை அவற்றை துவம்சம் செய்த மெல்லிசை மன்னர் எம்எஸ்விஸ்வநாதனின் இசை.. எங்கேயும் எப்போது சங்கீதம் சந்தோஷம்… எழுதிக்கொண்டே போகலாம்.. அப்புறம், புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் என்று எதற்கு இந்த கட்டுரைக்கு தலைப்பு? முதன் முதலாய் இருகோடுகள் படம் பார்த்தபிறகு இந்த பாடல் இன்றுவரை நமது செம பேவரைட். கொழுகொழு ஜெயந்திவேற.. அதை சொல்ல மறந்தா நாம மனுஷனே இல்லை. மனசாட்சியும் இல்லை.

கே.பாலசந்தரின் 91 வது பிறந்த நாள் இன்று

©️✍️ ஏழுமலை வெங்கடேசன்