“கழகம்” – திரைப்படம் விமர்சனம்:

“கழகம்”  – திரைப்படம் விமர்சனம்:

கதை தொடங்கும்போது ஒரு பெரியவரின் நிழலில் ஒதுங்கிய ஒருவர் அவரை விட்டு, தன் சகாக்களுடன் பிரிவதிலிருந்து தொடங்குகிறது. பிரிந்தவர்கள் மக்களை எப்படியாவது கவர்ந்து அரசு அமைக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் சாதிக்கவே முடியாத பல வாக்குறுதி களைத் தந்து ஆட்சியைப் பிடிக்கிறார்கள். குறுகிய காலமே வாழும் முதல் தலைமுறைத் தலைவருக்குப் பின் வரும் அடுத்த தலைவரால்தான் முழுக்கதையும் நகர்கிறது.

புதிய தலைவரின் கொள்கைகளை ஏற்கமுடியாத ஒரு துடிப்பான பன்முகம் கொண்ட ஒருவர், அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய அமைப்பைத் தொடங்குகிறார். அந்த அமைப்பு மக்களிடம் மிகப் பிரபலமாகி அந்தத் தலைவர் உயிரோடு இருக்கும் வரை அவரே ஆட்சியைத் தொடர்கிறார்…! இடையில் அடுத்த ஊரைச் சேர்ந்த வில்லன், தலைவரின் இன மக்களைத் துன்புறுத்த, புதிய தலைவர் அவர்களுக்கு ஆதரவளிக்க, பழைய தலைவர் அரசியல் வாழ்க்கை ஏறத்தாழ அஸ்தமிக்கும்போது, பன்முகத் தலைவர் இறக்க, பழைய தலைவருக்கு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது.

இந்தமுறை பழைய தலைவர் புது வடிவம் எடுத்து தன் அரசியல் வாழ்க்கையை புதுப்பிக்க நினைக்கும்போது, பன்முகத் தலைவரின் வாரிசாக ஒரு பெண்மணி அவரின் அரசியல் வாழ்க்கைக்கு சவாலாக வருகிறார். சில பல நிகழ்வுகளால் மக்கள் அவரையும் தேர்ந்தெடுக்க, அவரோ, மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கிறார்…

கதை இப்படியாக பீரியட் லெவலில் செல்ல, பழைய தலைவர்களை அவர்களும், அடுத்த தலைமுறையினரும் மறந்து போக, கதை தற்காலத்திற்கு நகர்கிறது.

தற்காலக் கதை பல விதங்களில் சுவாரஸ்யமாக அமைகிறது.

நிகழ்கதையில் நடக்கும் ஒரு தேர்தலைப் பற்றியே கதை நகர்கிறது.

திடீரென்று ஒரு வடமாநில ஆரியனின் உதவியை நாடுகிறார் கதாநாயகன். சாணக்கியன் போல அந்த ஆரியனின் திட்டங்களை மெல்லப் புகுத்துகிறார். வெற்றி ஒன்றே நோக்கம் என்ற எண்ணத்தில் கூட இருக்கும் ஏனைய கூட்டாளிகளின் வெறுப்பை சம்பாதிக்கிறார். இதனிடையில் பெண்மணி வழி வந்த தலைவர்கள் வேறொரு பலம் பொருந்திய வட இந்தியத் தலைவரோடு நட்பு வைத்து அவர் சொல்கிறபடி எல்லாம் செய்கிறார்கள்…. இந்த நிலையில் தேர்தல் வருகிறது… அதன் முடிவு எப்படி என்பதே கதை.

கதாபாத்திரங்கள் உணர்வு பூர்வமாகத் தங்கள் பங்கை அளிக்கின்றனர்.

உதாரணமாக, கண்ணீருடன் ஒரு கதாபாத்திரம் ‘எங்களை அவமதிக்கிறார்கள்’ என்று பார்ப்பவர்களை அழ வைக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்கள் தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ‘வடநாட்டானை உள்ளே விட மாட்டோம்’ என்று உணர்வு பூர்வமாக ஓங்கி ஒலிக்கச் சொல்லப் பட்டு, தங்கள் கதாபாத்திரங்களில் திறம்பட நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்… குறிப்பாக ஒரு சிங்கமும் ஒரு சிறுத்தையும் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் கதாநாயகன்.

இடையே காமெடிக்கும் பஞ்சமில்லை. துருணா என்கிற கதாபாத்திரம் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஓடி அலைவதை மக்கள் இரசிக்கிறார்கள்…

இடையே வேறொரு குடும்பம், தனக்கும், மனைவிக்கும், மச்சானுக்கும், மகனுக்குமான அமைப்பை உருவாக்கி, தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்று கோபத்துடன் வெளியேறுகிறார்கள். இந்தக் காட்சியையும் மக்கள் சிரிப்போடு பார்த்து இரசிப்பது போல அமைத்துள்ளது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது.

இந்தப் படத்தில் பல கதாபாத்திரங்கள் வட இந்திய ஆரியன் சொல்படி நடக்க மாட்டோம் என சூளுரைத்து விட்டு முடிவில் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வரும் காட்சிகளை கேமிரா பிரமாதமாக படம் பிடித்துள்ளது.

இடையே ஆளும் அரசின் கூட்டாளி ஒருவருக்கு 10.5 கோடி ஜாக்பாட் அடிக்க, அவரது மகிழ்ச்சியையும் காமிரா படம் பிடிக்கத் தவறவில்லை. மொத்தத்தில் இது போன்ற ஒரு படம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெளியாகும் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் படம் பார்க்கிறார்கள்….கூடவே படம் பார்க்கும் அனைவருக்கும் ₹1000, ₹1500, இலவச கேஸ் போன்ற பல பரிசுப் பொருட்களையும் தயாரிப்பாளர் தருவதாக விளம்பரம் செய்திருப்பது மக்களை உற்சாகமாக படம் பார்க்க வைக்கிறது.

படத்தின் முடிவை சஸ்பென்சாக வைத்து மே மாதம் மட்டுமே சொல்லப் படுமாம்….

மொத்தத்தில் படத்திற்கான மதிப்பெண் 120/100.

எக்ஸ்ட்ரா 20 மார்க் எதற்காக என்றால் இதையெல்லாம் பார்த்து, பரிசுகள், வாக்குறுதிகள் எல்லாம் நடக்கும் என நம்பும் முட்டாள் ஜனங்களுக்காக!

மொத்தத்தில் ‘கழகம்’ திரைப்படம் ‘கலகலகம்’

error: Content is protected !!