காட்டேரி – விமர்சனம்!

காட்டேரி – விமர்சனம்!

ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் வைபவ், சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காட்டேரி. யாமிருக்கே பயமேன்’ என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநரான இவர் படமா இது என்ற சந்தேகத்தைக் கொடுக்கிறது படத்தின் மேக்கிங். இந்தக் ‘காட்டேரி’யில் கதை, திரைக்கதை, சஸ்பென்ஸ், திரில்லர், நகைச்சுவை என்று எதுவுமே கணக்கில் இல்லை..! ஏற்கனவே பல முறை பார்த்துப் பார்த்து சலித்துப் போன ஒரு கதைக் களமென்றால், புதுமையான திரைக்கதையும், நடிகர்களின் அதகளமான நடிப்பும் இருந்திருக்க வேண்டும். ஆனால் பேய்களுக்கே பேய் பிடித்து ஓடியதைப் போல மொத்தப் பேய்களும் படத்தில் ஓடியிருப்பதால் படமும் அதே ஓட்டமாக ஓடி விட்டது போலும்..!

 

கதை என்னவென்றால் தங்கப்புதையலைத் தேடி சென்னையிலிருந்து வைபவ் கருணாகரன் குழுவினர் குக்கிராமம் ஒன்றுக்குச் செல்கின்றனர். அந்தக் கிராமத்தில் அவர்கள் சந்திக்கும் அனைவருமே பேய்கள்.அது தெரிந்ததும் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தப்பினார்களா? இல்லையா? என்பதைப் பயத்துடன் சொல்ல முயன்றிருக்கும் படம்தான் காட்டேரி.

வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் வைபவ். சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகிய இருவரும் நம்மையும் பயமுறுத்த முயல்கிறார்கள். கண்களினாலேயே பல ரியாக்‌ஷன்களை ரிலீஸ் செய்யும் கருணாகரன், சோனம் பஜ்வாவை பார்க்கும் போதெல்லாம் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மேலும் கருணாகரனின் இயல்பான வசன உச்சரிப்பும், டைமிங் ஜோக்கும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

மாத்தம்மா எனும் பாத்திரத்தில் வருகிற வரலட்சுமிசரத்குமார், சற்றே பயப்பட வைக்கிறார். பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவு ஓரளவு படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. 1960-ல் நடக்கும் கதைக்குப் பின்னணியில் ஒளிப்பதிவும் அழகாக நின்றுள்ளது.

பின்னணி இசையில் பயத்தைக் கூட்ட எத்தனித்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.என். பிரசாத். ஆனால் முடியவில்லை போலும். படத் தொகுப்பாளர் பிரவீன் இன்னும் கொஞ்சம் நறுக்கியிருக்கலாம். இது போன்ற பேய் படங்களில் படத் தொகுப்புதானே முக்கியம்.. இங்கே அது எங்கே என்று கேட்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் இந்த காட்டேரி பொம்மை நரி.

மார்க் 2.5/5

error: Content is protected !!