September 25, 2021

கதாநாயகன் – திரை விமர்சனம்!

ஆதி கால மனிதன் மொழியைகண்டு பிடிப்பதற்கு முன்பே கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் என்று சொல்லப் போனால் அது சிரிப்பு-தான்! ஒட்டு மொத்த உலகத்துக்கும் பொதுவான மொழியான அது. அதனால்தான் மனிதர்கள் குறிப்பாக நம் தமிழர்கள் அறுசுவை உணவுகளுக்கு அடுத்தபடியாக நகைச் ‘சுவை’ இன்றியமையாதது என்று சொல்லி வந்தார்கள். இதனை உணர்ந்தே நமது தமிழ் சினிமாவிலும் நகைச்சுவைக்கு என்றே பிரத்யேகமான சினிமாக்களை தயாரித்து வழங்கினார்கள். பின்னர் காமெடிக்கு என தனி ட்ராக் அமைத்து சிரிக்க வைத்தார்கள். அதன் பின்னர் நாயகன் அல்லது நாயகியே சிரிப்பு மூட்ட முயன்றார்கள். இப்படியாக சிரிப்புக் காட்ட சினிமாவே இல்லாமல் போன நிலையில் வந்திருப்பதுதான் ‘கதாநாயகன்’. படம் பார்க்க போது கோயிலுக்கு போகும் போது செருப்பை கழட்டி விட்டு போவது போல் டிக்கெட் வாங்கும் போதேமூளையை கழட்டி விட்டு போய் தியேட்ட்ருக்குள் போய் உட்கார்ந்தால் இரண்டரை மணி நேர படத்தில் மினிமம் ஒரு மணி நேரம் வாய் விட்டு சிரித்து விட்டு வரலாம்.

கதை என்ன என்பதைப் பற்றி இயக்குநர் யோசிக்கவே இல்லை. அதைப்பற்ரி தயாரிப்பாளரும் கேட்கவில்லை. ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு அது பற்றி அக்கறை இல்லை என்பது படம் முழுக்க வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது விஷ்ணு ரொம்ப பொறுப்பான பையன், அதாவது சண்டை, வம்பு தும்பு என எதற்கும் போகாமல் தான் உண்டு தன் தாசில்தார் ஆபீஸ் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு வழியில் பார்க்கும் கேத்ரினை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகின்றது. உடனே தன் பால்ய நண்பனும் சக ஸ்டாபுமான அண்ணாதுரை (சூரி) உதவியோடு, தன் காதலியின் மனதில் இடம் பிடிக்க நாயகி வீட்டு வாசலில் பாய் போட்டு படுத்து இம்ப்ரஸ் செய்ய முயல்கிறார்.

இதனிடையே ஒரு நாள் மார்க்கெட்டில் ஒரு சில ரவுடி கும்பல் அப்பாவி ஒருவரை போட்டு அடிக்க, அதை கேத்ரின் அப்பா தட்டி கேட்கின்றார். அந்த இடத்தில் இருக்கும் விஷ்ணு அவரை காப்பாற்றாமல் பயந்து ஓடுகின்றார்.அடுத்த நாள் கேத்ரினை விஷ்ணுவிற்கு பெண் கேட்டு கேட்டு சரண்யா& கோ செல்ல, அங்கு கேத்ரின் அப்பா உன் பையன் ஒரு கோழை என்றும் ஒரு ஆம்பளைக்குத்தான் என் பொண்ணை கொடுப்பேன் என்றும் சொல்லி அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். இதில் நொந்து போன
விஷ்ணு நம்ம கவர்மெண்ட் டானிக்கை (அதாங்க ..டாஸ்மாக்) குடித்ததும் வீரனாகி விடுகிறார். அதையடுத்து தொடரும் காமெடியின் ஒரு பார்ட்டாக விஷ்ணு உயிருக்கே ஆபத்து வந்து, அது நீங்கி கேத்ரினை கைப்பிடித்தாரா? என்பதை முழுக்க காமெடி ட்ராக்கில் கூற முயன்றுள்ளார் முருகானந்தம். சிரிப்பை சொல்லும் போது சிரித்து கொண்டே சொன்னால் சிரிப்பாகி விடும் என்று யாரோ சொன்னதை நம்பி ஸ்பாட்டில் சிரித்து கொண்டே சீன்களை வைத்து சிதைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம். நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட கதை, திரைக்கதையில் கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் படு மோசமான போக்கில் போகும் இடைவெளி படம் முழுக்க தெரிகிறது. ஒரு காட்சி கூட மனதில் நிற்கவில்லை.

அதிலும் சூரி இண்டர்வெல்லுக்கு முன் வரை முகத்தை அஷ்டகோணாலாக்கி பேசும் டயலாக்குகளை சிரிப்பு என்று சொன்னால் சிரிப்புக்கே கேவலம். ஆனாலும் கிளைமாக்ஸில் சூரியும், ஆனந்த ராஜூம் இணைந்து நடத்தும் கிட்னி ட்ராம்வும். மொட்டை ராஜேந்திரன் சிங்கராக வந்து செய்யும் கலாட்டாவும்தான் படம் முடிந்து வெளியே வரும் போது முகத்தில் கொஞ்சம் சிரிப்பை கொண்டு வருகிறது. விஜய் சேதுபதி இதுக்கெல்லாம் கூட செட் ஆகி விட்டார் என்பது ஆறுதல்.

கேத்ரின் கவர்ச்சி பதுமையாக வந்து, ஆடி, பாடிப் போகிறார். ரவுடியாக வரும் அருள்தாஸின் நடிப்பு நன்று. . ஷால் ரால்டனின் இசை, ஜே.லட்சுமணின் ஒளிப்பதிவு போன்றவையும் படத்துக்கு பெரிதாக பலம் சேர்க்கவில்லை. ஒரு டிடெக்ட் ஸ்டோரியை விட மூளையை கசக்கி செய்ய வேண்டியது காமெடி படத்துக்கான திரைக்கதை. அதை செய்ய தவறி விட்டார்கள்.

மார்க் 5/ 2.5