நாட்டின் ஒற்றுமையைக் காக்க நடத்தப்படுகிறது காசி தமிழ் சங்கமம்- மோடி!

நாட்டின் ஒற்றுமையைக் காக்க நடத்தப்படுகிறது காசி தமிழ் சங்கமம்- மோடி!

.பி.யில் இயங்கும் பனாரஸ் பல்கலையில் மத்திய அரசின் கலாசாரத்துறை சார்பில் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னிலைப் படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முறைப்படி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இணையமைச்சர் எல்.முருகன், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இளையராஜா பேசிய போது “விழாவில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் தமிழ் பெருமக்களே.. காசிவாசிகளே, உலகம் வியக்க நடந்து கொண்டிருக்கும் இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுகளை காண வந்திருக்கும் திரளான பெருமக்களே உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கே விளக்கிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாரதியார் இங்கே இரண்டு வருடம் தங்கிப் படித்திருக்கிறார். இங்கு படித்து அவர் கற்றுக்கொண்ட விசயங்களை, இங்குள்ள புலவர் பெருமக்களின் விவாதங்களை நேரில் கண்டு, கேட்டு தெரிந்து கொண்ட பாரதியார், இந்தியாவில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நேரத்தில், காசி நகர் புலவர்களின் விவாதங்களை கேட்க ஒரு கருவி செய்வோம் என்று பாடியிருக்கிறார். “கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்” என்று நதி நீர் இணைப்பு என்ற ஒன்று வரும் முன்பாகவே தனது 22 வயதில் அதைப்பற்றிப் பாடிவிட்டார்.

அப்படியான பாரதியார் தனது ஒன்பது வயது முதல் பதினொருவயது வரை இரண்டு ஆண்டுகள் இங்கே இருந்து பயின்று அறிவு பெற்றிருக்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அரிய விஷயமாகும். அதே போல் நீங்கள் அறியாத இதுவரை குறிப்பிடப்படாத விசயத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். கபீர் “தோஹா”பாடினார் இரண்டு அடிகளில் பாடுவது அது. அங்கே தமிழில் திருவள்ளுவர் இரண்டே அடிகளில் திருக்குறள் என்ற நூலை இயற்றினார். “தோஹா”வில் எட்டு சீர்கள் அமைந்திருக்கின்றன. திருக்குறளில் ஏழு சீர்கள்தான். முதல் அடி நான்கு சீர், இரண்டாவது அடி மூன்று சீர். இதனையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கபீர்தாஸ் ஆன்மிகத்தைப் பற்றி பாட, திருவள்ளுவர் உலகப் பொதுமறையாக, அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பால்களாக 1330 பாடல்களாக அதனை எழுதினார்.

https://twitter.com/aanthaireporter/status/1593913131948208128

இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்கிறேன். முத்துசாமி தீட்சிதர் கர்நாடக சங்கீதத்தின் மாமேதை என்று போற்றப்படும் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இங்கே வந்து கங்கை நதியில் மூழ்கி எழும்போது சரஸ்வதி தேவி அவர் கையில் வீணை ஒன்றை பரிசளித்திருக்கிறார் அந்த வீணை இன்னமும் இருக்கிறது. அருங்காட்சியகத்திலே வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிபட்ட பெருமை மிகுந்த இந்த காசி நகரிலே தமிழ்ச் சங்கமத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமர் அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்பதை எண்ணி மிகவும் வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். (இப்போது மோடி ஜி என அழைக்கும் இளையராஜா அவரிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்.) மோடி ஜி என்னால் என்னுடைய உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இந்த தமிழ்ச் சங்கமத்தை இந்த புண்ணிய பூமியான காசியிலே நடந்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்பதை எண்ணி நான் வியந்து மகிழ்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த புகழும் வழங்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். வணக்கம்.” என்று இளையராஜா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் காசி என நிகழ்ச்சியில் பேச்சை தொடங்கினார். காசி நகரம் பழைமை வாய்ந்தது சிறப்பு வாய்ந்தது, அதேபோல் தமிழ்நாடும் பழைமை வாய்ந்தது கலச்சார பெருமை வாய்ந்தது என்றும் காசி மக்களுக்கும் தமிழ்நாட்டும் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்

இதோ பிரதமர் மோடியின் முழு உரை:

“உலகின் பழமையான நகரம் காசி. காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் இருந்து காசிக்கு வந்திருக்கும் எனது விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நமது நாட்டில் பல்வேறு சங்கம பெருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நதிகளின் சங்கமம், கொள்கைகளின் சங்கமம், ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் சங்கமம், கலாச்சாரத்தின் சங்கமம் என அனைத்து சங்கமங்களும் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது நமது நாடு. அதைக் கொண்டாடவே காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி. காசியைப் போலவே தமிழ்நாடும் பழமை வாய்ந்தது. பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டது. இவை இரண்டின் சங்கமமும், காசி தமிழ்ச் சங்கமம் எனும் ஒரு மாத கால நிகழ்ச்சியின் மூலம் கொண்டாடப்பட இருக்கிறது.

ஒரே உண்மை பல ரூபங்களில் வெளிப்படுகிறது என்பது நமது நாட்டின் கொள்கை. அப்படித்தான் காசியும் தமிழ்நாடும் இருக்கின்றன என்பது எனது எண்ணம். காசி, தமிழ்நாடு இரண்டுமே கலாச்சாரத்தில் சிறந்து விளங்குபவை. இரண்டுமே தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் சிறந்து விளங்குபவை. காசிக்கு விஸ்வநாதர் பெருமை சேர்க்கிறார். தமிழகத்திற்கு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி பெருமை சேர்க்கிறார். இரண்டுமே சிவ மயமானது, சக்தி மயமானது. நமது நாட்டின் ஏழு புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று காசி; மற்றொன்று காஞ்சி. காசியும், தமிழ்நாடும் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவை. காசியில் பட்டு சிறந்து விளங்குவதைப் போலவே, தமிழ்நாட்டில் காஞ்சிப் பட்டு சிறந்து விளங்குகிறது. காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழ்நாட்டிற்கு திருவள்ளுவர்.

தமிழக திருமண விழாக்களில் காசி யாத்திரை எனும் ஒரு சடங்கு இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் வைபவத்தில் இந்த காசி யாத்திரை சடங்கு முக்கியமானதாக இருக்கிறது. இப்படி இரண்டுக்கும் இடையே நீண்ட நெடிய பந்தம் இருக்கிறது. காசியை நிர்மானித்ததில், வளர்த்ததில் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ராஜேஷ்வரி சாஸ்திரி என்பவர் காசியில் வேதம் வளர பாடுபட்டிருக்கிறார். பட்டாராம் சாஸ்திரி என்பவர் காசியில் ஆலயம் அமைத்திருக்கிறார்.

காசியில் அரிச்சந்திர காட் என்ற படித்துறைக்கு அருகே காசி காமகோடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டுக் கோயில். கேதார்காட் பகுதியில் 200 ஆண்டு பழமை வாய்ந்த குமாரசாமி மடம் உள்ளது; மார்க்கண்டேய ஆசிரமம் உள்ளது. அனுமான் காட் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாகவி சுப்ரமணிய பாரதி காசியில் பல ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கிறார்; இங்கே படித்திருக்கிறார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பாரதியார் பெயரில் ஓர் இருக்கையை ஏற்படுத்த இருக்கிறது.

நாம் காலையில் எழுந்ததும் சொல்லும் ஒரு ஸ்லோகத்தில் நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களின் பெயர்கள் இருக்கின்றன. இதேபோல், பூஜை செய்யும்போதும், குளிக்கும்போதும் நாம் ஒரு மந்திரம் சொல்கிறோம். ‘கங்கேச யமுனே சைவா கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னிதிங் குரு’ என்ற அந்த மந்திரத்தின் பொருள் என்னவென்றால், இந்தப் புனித நதிகள் அனைத்தின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கட்டும் என்பதுதான். இது நமது நாட்டின் ஒற்றுமையையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தேச ஒற்றுமைக்கான பணிகளை செய்து நாட்டை வளப்படுத்தி இருக்க வேண்டும். தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கிலேயே இப்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு புராணத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது. வடக்கே இமாலயத்தில் இருந்து தெற்கே குமரி வரை உள்ள நிலப்பகுதி ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுடன் பலமாக இருக்கிறது என்கிறது அந்த ஸ்லோகம். தமிழ் இலக்கியத்தில் காசி நகர் பற்றி இருக்கிறது. கலித்தொகையிலும், திருப்புகழிலும் காசி குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தென்காசி எனும் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த குமர குருபர ஸ்வாமிகள், காசியை கர்ம பூமியாகக் கொண்டு இங்கே வாழ்ந்துள்ளார். பிறகு, தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் சென்று அங்கு காசி விஸ்வநாதர் ஆலயத்தை நிறுவி இருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் மனோண்மணியம் சுந்தரனார். இவரது குருநாதர் கோடகநல்லூர் சுந்தரஸ்வாமிகள். இவர், காசியின் மணிகர்ணிகா காட் பகுதியில் வாழ்ந்து, இங்கே கோயில் அமைத்திருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மகான்கள் ராமானுஜரும், ஆதிசங்கரரும் நாட்டில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி இருக்கிறாரகள். அவற்றை நாம் பாதுகாத்து வளர்க்க வேண்டும். உலக நாடுகள் பலவும் தங்களிடம் உள்ள பழமை வாய்ந்தவற்றை பேணிப் பாதுகாத்து, உலகிற்கு அவற்றை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

எகிப்தின் பிரமிடுகள், இத்தாலியின் கொலோசியம் போன்றவற்றை உலகம் அறிந்திருக்கிறது. இப்படி இந்தியாவிலும் பழைமையான ஒரு விஷயம் இருக்கிறது. அது தமிழ் மொழி. இதன் பழம்பெருமையை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தியாவில் இப்படி ஒரு பழைமையான மொழி இருக்கிறது என்ற ஆச்சரியத்தை உலக மக்கள் கேட்க வேண்டும். தமிழ் நமது பெருமை. தமிழ் மொழியை காக்க வேண்டியது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கடமை. தமிழ் மொழியை நாம் காக்கத் தவறினால் அது நாட்டிற்கே பேரிழப்பாகிவிடும். மொழி பேதங்களை கைவிட்டுவிட்டு நாம் தமிழ் மொழியை காத்திட வேண்டும்.

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் அனுபவமாக இருக்கும். இந்த அனுபவத்தை காசி மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அனுபவத்துடன் நீங்கள் தமிழ்நாடு செல்வீர்கள். காசி தமிழ்ச் சங்கமம் போல் நாட்டின் பல மாநிலங்களிலும் சங்கமங்கள் நடைபெற வேண்டும். தெற்கே இருக்கும் மக்கள் வடக்கே சென்றுவர வேண்டும். வடக்கே இருக்கும் மக்கள் தெற்கே சென்றுவர வேண்டும். நாட்டின் ஒற்றுமையைக் காக்க இத்தகைய சங்கமங்களால்தான் முடியும். எனவே இவற்றை நாம் முன்னெடுத்துச் செல்வோம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

error: Content is protected !!