திமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு தக்க தண்டனை உண்டு! – கருணாநிதி பேச்சு

திமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு தக்க தண்டனை உண்டு! – கருணாநிதி பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன பொதுக் கூட்டம் நேற்று தங்கசாலையில் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அபுபக்கர் ஆகியோர் பேசினர்.

dmk aug 23

கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக தலைவர் கருணாநிதி பேசிய போது, “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் இந்த கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. ஜனநாயகம் எப்பாடும் படட்டும் அது பற்றி கவலை இல்லை என்று கருதினால், இந்த கூட்டத்திற்கு அவசியம் இல்லை. நாங்கள் வந்து பேச வேண்டிய தேவையும் இல்லை. இங்கு கூறிய கருத்துக்களை நீங்கள் சிந்தையில் பதித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி தமிழக சட்டமன்றம் ஒழுங்காக செயல்படுகிறதா என்பதை மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் தேர்தலில் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுபவன் அல்ல. நடந்து முடிந்த தேர்தலில் நாம் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலைக்கு ஆளானோம். அதற்கு காரணம் நாங்கள் அல்ல. நீங்கள் தான். இதைப் பயன்படுத்தி திமுகவை வீழ்த்தலாம் என்று சிலர் கருதுகிறார்கள். இனப்பற்று, இன உணர்வை அழிக்கப் பார்க்கிறார்கள். அதை நாம் சவாலாக ஏற்று செயல்பட வேண்டும், எத்தனையோ தேர்தல்களில் திமுக தோற்று இருக்கிறது. தேர்தலில் அண்ணா வெற்றி பெற முடியாமல் போனது என்பதற்காக அண்ணாவை உலகம் மறக்கவில்லை.

எந்த காலத்திலும் சலசலப்புக்கு அஞ்சிய இயக்கம் இது அல்ல. காவல் துறையின் அடக்குமுறைக்கு, ஆளும் கட்சியின் அறைகூவலுக்கு திமுக என்றும் பயந்தது இல்லை. அதை மீறித் தான் இந்த இயக்கம் வளர்ந்து இருக்கிறது. இன்னும் வளர இருக்கிறது. யாரும் சந்தேகப்படத் தேவை இல்லை. அஞ்சத் தேவையில்லை. இந்த கழகம் வெற்றிகளை குவிக்கச் செய்ய இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள் இயக்கத்தை வழி நடத்திச் செல்கிறார்கள். இதை விட பெரிய தியாகத்திற்கு தங்களை அவர்கள் தயார் செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தமிழகத்தை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை நீக்கிவிட்டு நல்ல மாநிலமாக ஆக்க பாடுபடுவோம். இடையில் ஏற்பட்டுள்ள தடையை கடந்து வந்து நமது கருத்துகளை எடுத்துக்கூறும் காலம் வரும். அதை எதிர்பார்த்துள்ளோம். எப்படியோ நாம் கவிழ்க்கப்பட்டோம், கவிழ்ந்துவிட்டோம், அதற்கு காரணம், நடந்த தேர்தலின்போது வாக்கு எண்ணும் போதே, ‘நாம்தான் ஜெயிக்கப்போகிறோம், உங்கள் நடவடிக்கையை செய்யுங்கள்’, என்று செய்தி வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தகவல் போகிறது, திமுகவை வீழ்த்தும் சூழ்ச்சி அங்கு நடத்தப்படுகிறது. திமுக தான் வெற்றி பெறும் என்று தமிழகமே எதிர்பார்த்துள்ள நிலையில், ஏன் இந்தியாவே எதிர்பார்த்துள்ள நிலையில் எப்படி நாம் புறந்தள்ளப்பட்டடோம்? உண்மையில் நாம் தோற்கடிக்கப்பட்டோம். இதற்கு யார் யார் எல்லாம் துணையாக இருந்தார்கள் என்பதை நான் அறிவேன். எதிர்காலத்தில் அதற்கு பதில் சொல்லும் நேரம் வரும். திமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு எதிர்காலத்தில் தக்க தண்டனை உண்டு. அதற்கு தீர்வாக, தமிழகத்தில் மறு மலர்ச்சி ஏற்பட்டு தமிழகத்தை தமிழன் ஆளுவான் என்ற நம்பிக்கையோடு நாம் வெற்றி பெறுவோம். தொடர்ந்து நாம் அண்ணா, பெரியார் வழியில் நடந்து இந்த மாபெரும் இயக்கத்தை வளர்ப்போம்” என்று பேசினார்.

error: Content is protected !!