September 27, 2021

பாவம்.. இந்த ஜெகத்ரட்சகன்! அந்த பச்சக் குழந்தையை பாடாபடுத்தாதீங்கப்பூ! – கருணாநிதி

இதுவரை வரி செலுத்தாத வருவாய் ஏதேனும் இருந்தால், வரும் 30.9.2016-க்குள் வருமான வரி செலுத்தி நேர் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தினை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனை 3 நாட்களாக வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது முறைதானா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

raid jy 16

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெகத்ரட்சகன் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகக் கூறி மூன்று நாட்களாக அவரை சிறைக்கைதி போல வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

வருமான வரித்துறையினர் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதையோ, அல்லது விசாரணை நடத்துவதையோ தவறு என்று கூறவில்லை. ஆனால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஏறத்தாழ 40 இடங்களில் சோதனை மேற்கொள்வதாகக் கூறி அனைத்து இடங்களிலும் அதிகாரிகளை அனுப்பிய பிறகும் கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகனை, அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பான வகையில், ஒருவருடைய அன்றாடச் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதாகும்.

வருமான வரித்துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகளை அனுப்பி சோதனையை விரைவுபடுத்தாமல், ஜெகத்ரட்சகனை கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் வீட்டில் கைதிபோல் அடைத்து வைத்திருக்கும் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், யாரிடமாவது இதுவரை வரி செலுத்தாத வருவாய் ஏதேனும் இருந்தால், வரும் 30.9.2016-க்குள் வருமான வரி செலுத்தி நேர் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தினை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.இந்த சூழ்நிலையில், தற்போது ஜெகத்ரட்சகன் வீட்டில் மேற்கொள்ளப்படும் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை வியப்பு அளிக்கிறது”என்று கருணாநிதி கூறி உள்ளார்.