October 16, 2021

தமிழக மக்கள் எப்போதுமே உரத்துப் பேசுகிற ஒரு தலைவர் கருணாநிதி!

எதிர்ப்பு அரசியலில் புடம் போடப்பட்ட போர்க்குணமிக்க ஒரு தலைவன் காலப்போக்கில் மிதமான அணுகுமுறைக்கு மாறும் போது கிடைக்கும் தோற்றம்தான் தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதியின் சித்திரம். எதற்காக வெல்லாம் அவர் ஆவேசப்பட்டு போராட்டத்தில் குதித்தாரோ, அதற்கெல்லாம் இப்போது அமைதி காக்கிறார்.  தன் கூடவே பிறந்த போர்க்குணத்தை நிகழ்கால அரசியல் யதார்த்தங்கள் மென்று விழுங்குவதைக் கண்டு புழுங்குகிறார் என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள். அவரது அரசியல் வரலாற்றில் அவர் பெற்றதைவிட இழந்தது அதிகம். விடாப்பிடியாக மத்திய அரசால் அவரது ஆட்சி இரண்டுமுறை கலைக்கப்பட்டிருக்கிறது. 1976 மிசா காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு அவருடைய இயக்கத்தின் தோழர்கள் பலர் சித்திரவதைக்குள்ளானார்கள்.

இடையில் 12 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பில் அவர் இல்லாமல், அரசியல் வனவாசம் இருந்தார். 1984, 1987, 1991 முறையே தலைவர்கள் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், ராஜீவ்காந்தி மறைவின் போதெல்லாம் அவர் பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்பட்டார். அவருடைய தோழர்களான உடன்பிறப்புகள் தாக்கப்பட்டனர். இவ்வளவு நெருக்கடியான தருணங்களை கடந்து அவர் தன்னையும் தான் தலைமையேற்று நடத்தும் கட்சியையும் உயிர்ப்போடு வைத்திருப்பதுதான் அவருடைய வெற்றியின் அடையாளம். பக்தவத்சலம், ராஜாஜி, காமராஜர் போன்ற ஆளுமைகளோடு துணிந்து எதிர்த்து நின்று அரசியல் செய்தவர்.

அவரது எதிர்ப்பு அரசியலால்தான் தமிழ்நாட்டிற்கு நிறைய பயன்கள் கிடைத்திருக்கின்றன. மாறாக ஆட்சி அரசியல் என்று வரும்போது கடுமையான வசைகளையும் விமர்சனங்களையுமே சந்தித்திருக்கிறார். பிற தலைவர்களோடு ஒப்பிடுகையில் அவருடையது நீண்ட அரசியல் பயணம் என்பதால் நேர்மறையாக சொல்வதற்கும் எதிர்மறையாக அணுகுவதற்கும் நிறைய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சங்கட முரண்களும் அதிகம் தென்படுகின்றன.

விவசாயிகளின் தோழனாக அறியப்பட்ட கருணநிதியின் ஆட்சிக் காலத்தில்தான் (1971-72) மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகளின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தலித்துகளின் கனவு நாயகனாக அறியப்பட்ட கருணாநிதியின் ஆட்சி காலத்தில்தான் (1991) மாஞ்சோலை தோட்டத் தொழிலாளிகளின் போராட்டத்தின்போது தாமிரபரணிப் படுகொலைகள் நடந்தன. இதுபோல பல முரண்கள் போராளியான கருணாநிதிக்கும் ஆட்சியாளரான கருணாநிதிக்கும் இடையே சங்கடமாக இடம்பெறுகின்றன. ஆனால் மொத்தத்தில் அவர் பல நேரங்களில் தமிழக மக்களின் குரலாக ஓங்கி ஒலித்திருக்கிறார். தமிழக மக்கள் எப்போதுமே உரத்துப் பேசுகிற தலைவரை தயக்கமில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தலைவர் கருணாநிதி.

கருணாநிதியின் அரசியல் வாழ்வை 1940லிருந்து 1949 வரை, 1949லிருந்து 1957 வரை, 1957லிருந்து 1967 வரை, 1967லிருந்து 1977 வரை, 1977லிருந்து 1989 வரை, 1989லிருந்து 2007 வரை என்று ஆறு கட்டங்களாகப் பிரித்தால் அரசியல் பயணத்தில் உள்ள அத்தனை வகை பரிணாம வளர்ச்சிகளையும் முகங்களையும் அவர் தொட்டு வந்திருப்பது தெரியும். மாணவப் பருவத்திலிருந்தே அவர் தலைவனாவதற்கான எத்தனங்களுடனேயே இருந்திருக்கிறார்.

அதனால்தான் கோலி விளையாடும் வயதில் நீதிக் கட்சித் தலைவர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டார். அமைப்பை உருவாக்குவது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கக்கூடிய அற்புதக் கலை. அது கருணாநிதிக்கும் வாய்த்தது. அதனால்தான் அவரால் 1940இல் தமிழ்நாடு தமிழ் மன்றத்தை ஆரம்பிக்க முடிந்தது. பிற்பாடு 1969இல் அண்ணாவின் மறைவையடுத்து இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருந்த வி.ஆர்.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு அவரால் வர முடிந்தது. இதுகுறித்த விமர்சனங்கள் பலரால் முன்வைக்கப்படலாம். ஆனால் தலைமைப் பதவியை எட்டுவது மட்டும்தான் தலைவனுக்குரிய நீதி என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவப் பருவத்தில் கிடைத்த அரசியல் விழிப்புணர்வையும் தொடர்புகளையும் மிகச் சரியாகவே தனது அரசியல் இலக்கை அடைவதற்கு கருணாநிதி பயன்படுத்திக்கொண்டார். பெரியார், அண்ணா உடனான தொடர்புகளை ஒவ்வொரு படிக்கட்டாக மேலேறுவதற்கும் பயன்படுத்திக்கொண்டார். இரண்டாம் கட்டத்தில் அவர் அக்காலத்திய இளைஞர்களுக்கு கனவு நாயகனாகத் திகழ்ந்தார்.

போர்க்குணமிக்க ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதியாக கடமையாற்றினார். அண்ணா மிகச் சிறந்த சக்தியாக பரிமளிப்பார் என்பதை முன்னமே அவர் அறிந்துகொண்டார். அண்ணா எடுத்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவைத் தந்தார் கருணாநிதி. இந்திய சுதந்திரத்தை துக்கநாள் என்று வர்ணித்த பெரியாருக்கு மறுப்பு தெரிவித்தார் அண்ணா. அப்போது கருணாநிதியும் அண்ணாவையே ஆதரித்தார். தனது சொந்த உழைப்பில் உருவாகி கட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முரசொலி பத்திரிகையிலும் அண்ணாவை ஆதரித்து எழுதினார்.

மூன்றாம் கட்டத்தில் சட்டமன்ற அரசியல் வாழ்வைத் துவங்கிய கருணாநிதி, சட்டமன்றத்தில் பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், காமராஜர் போன்ற பெரிய ஆளுமைகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். தோழர்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார். 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோது பொதுப்பணித் துறை அமைச்சராகவும் ஆனார். அரசியல் பயணத்தில் நேரடியாகக் களமிறங்கிய கருணாநிதி, அதற்கான பகடைக் காய்களையும் சரியாக உருட்டினார்.

அதனால்தான் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக 1969இல் வர முடிந்தது. இதற்கடுத்து 1972 வரை அவரது பயணம் மேலேறியே இருந்தது. 1972இல் கருணாநிதி ஒரு மிகப் பெரிய தவறைச் செய்தார். ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என வர்ணிக்கப்படும் ரசிகர் மன்றங்கள் எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய பலமாக இருக்கும் என்பதை கவனிக்கத் தவறினார்.
அப்படி கவனிக்கத் தவறியதற்காக அவர் 12 ஆண்டுகள் அரசியல் வனவாசம் இருக்க நேர்ந்தது. எம்.ஜி.ஆருக்கு எதிராக தனது மு.க.முத்துவை சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் கருணாநிதி. இதுதான் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையில் பிளவு ஏற்படுவதற்கான முதல் படி என்கின்றனர். அந்தப் படத் துவக்க விழாவிற்கு எம்.ஜி.ஆரும் வந்திருந்து வாழ்த்தினார் என்பது வேறு விஷயம் (1970களில் தி.மு.க பிளவுக்கு மு.க.முத்து காரணமாக இருந்தார் என்றால், 1993இல் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் இன்னொரு பிளவுக்கு காரணமாக இருந்தார். மு.க.ஸ்டாலினை முன்னிறுத்துவதாகக் கூறித்தான் வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்).

எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவை துவக்கி 1977இல் ஆட்சியைப் பிடிக்கிறார். அதற்கடுத்து 1987இல் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு 1989இல்தான் மீண்டும் கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளில் அவர் ஆட்சியை இழக்கவும் வேண்டியிருந்தது. இடையே அவரைவிட 24 வயது இளையவரான செல்வி. ஜெ.ஜெயலலிதாவிடம் 1991இல் ஆட்சியைப் பறிகொடுத்தார். 1996இல் த.மா.கா கூட்டணியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தவர், 2001இல் தோல்வியைச் சந்திக்கிறார். 2004 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றினார். 2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலம் இல்லாத (91 இடங்கள்) சூழலிலும் தமிழகத்தின் முதலமைச்சராக தொடர்ந்துவருகிறார்.

1969 தொடங்கி 2006 முடிய இடைப்பட்ட 37 வருடங்களில் அவர் அரசியல் ரீதியாக மிகச் சரியான முடிவுகளையும் மிகத் தவறான முடிவுகளையும் கலந்தே எடுத்திருக்கிறார். கருணாநிதி என்கிற அரசியல் தலைவரை எடைபோடும் தராசில் எந்தப் பக்கம் முள் அதிகம் என்கிற விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு சூழல்களை ஏற்படுத்தித் தந்தார். அவருடைய மிகச் சரியான முடிவு என்பது 1971 மற்றும் 1996 தேர்தல்களின் போது வெளிப்பட்டது. காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் எனவும், காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் எனவும் பிளவுபட்டிருந்த நேரம். அந்த நேரத்தில் அவர் இந்திரா காங்கிரஸ் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 184 இடங்களில் தி.மு.கவை வெற்றி பெறச் செய்தார். மறுபடியும் காங்கிரஸ் தமிழகத்தில் 1996இல் பிளவுபட்டிருந்தது. இந்த முறை மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் எனப் பிரிந்திருந்தார்.

சந்தேகமேயில்லாமல் மூப்பனாருடன் கூட்டணி சேர்ந்து 166 இடங்களில் வெற்றி பெற்று 1996இல் ஆட்சியைப் பிடித்தார் கருணநிதி. இவையெல்லாம் அவர் தேர்ந்த ஒரு அரசியல் கணக்கர் என்பதை வெளிக்காட்டின. அதேபோல்தான் அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தரப் பகைவர்களும் இல்லை என்பதை மற்றவர்களைக் காட்டிலும் கருணாநிதிதான் அரசியல் வரலாற்றுப் புத்தகத்தில் அதிகம் பதிவு செய்தார்.

அதனால்தான் 1976இல் மிசா கொடுமைகளை சந்தித்த அவர், 1979இல் “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என இந்திரா காந்தியை வரவேற்க முடிந்தது. இன்றளவும் கூட்டணி மாறும் கட்சிகள் தங்களை நியாயப்படுத்தி சொல்லிக்கொள்ள இந்த உதாரணத்தைத்தான் பயன்ப்டுத்துகின்றனர். 1999இல் தான் வளர்ந்து வந்த பகுத்தறிவுப் பாதைக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத, இப்போது அவரால் ‘காந்தியைக் கொன்றவர்கள்’ என்று வர்ணிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தார்.

மத்திய அமைச்சரவையிலும், முழு ஐந்தாண்டு காலம் அவர் இடம்பெற்றார். தி.மு.க கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சி என்பதால் இன்றளவும் கருணாநிதி மீதான விமர்சனப் பட்டியலில் அவரின் இந்த முடிவு முதன்மையான இடத்தைப் பெறுகிறது. அரசியலில் வெற்றி மட்டும்தான் நோக்கம் என்கிற விதி, பழைய பகுத்தறிவுக் கொள்கைகளை தூக்கி எறிந்தது. 2001 தேர்தலில் சரியாக கூட்டணி வைக்காததால் தோல்வியைத் தழுவினார். வெற்றிக்குக் கூட்டணி அவசியம் என்பதை இந்த தோல்வியே அவருக்கு எடுத்துக்காட்டியது.

கருணாநிதியின் அரசியல் வாழ்வில் அதிகமான சர்ச்சைக்குள்ளான விஷயங்களில் அவரின் விடுதலைப் புலிகள் ஆதரவு என்பது முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அவர் இந்த விஷயத்தில் ஏற்ற-இறக்கங்களோடு செயல்பட்டிருக்கிறார். 1983இல் ஈழத்தில் நடைபெற்ற ‘கருப்பு ஜூலை’ பயங்கரத்தை எதிர்த்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி, 2000ஆம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது மே 12ஆம் தேதி விடுதலைப் புலிகள் குறித்து இப்படிச் சொன்னார்: “தி.மு.க தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறது. அது பேச்சுவார்த்தை மூலம் நடந்தாலும் சரிதான்” என்றார். மே 13ஆம் தேதி “தனி ஈழத்தை ஆதரிப்பதாகச் சொல்லவில்லை. இலங்கை இனப் பிரச்சனையில் தீர்வு ஏற்படவேண்டும் என்று சொன்னேன்” என்றார். மே 15இல் “ஒரு காலத்தில் தி.மு.க விடுதலைப் புலிகளை ஆதரித்தது. அதற்காக அவர்களது எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிப்பதாக அர்த்தமில்லை” என்றார்.

இந்தக் காலகட்டத்தில் மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இது ஒரு உதாரணம்தான். விடுதலைப் புலிகள் விஷயத்தில் தி.மு.க தலைவருக்கு இன்னமும் தயக்கங்கள் பல இருக்கின்றன. ‘தமிழினத் தலைவர்’ என்கிற அழிக்க முடியாத அடையாளம் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் அவர் தயங்குவதற்கு மறைமுகக் காரணம் என்கின்றனர் அவரை விமர்சிப்பவர்கள்.கருணாநிதியின் அரசியல் பயணத்தை விமர்சிப்பவர்கள் நான்கு விஷயங்களை முன்னிறுத்துகிறார்கள். காவிரிப் பிரச்சனை, கச்சத் தீவு, மாநில சுயாட்சி, மத்தியில் தமிழ் ஆட்சி மொழி என்பதுவே அவை. இப்போது கூட அந்த நான்கு விஷயங்களின் மீதான விமர்சனத்தை அவரால் எளிதில் எதிர்கொண்டுவிட முடியும். அதற்கான அரசியல் சூழலும் சக்தியும் இப்போது அவருக்கு இருக்கிறது.

1971இல் மாநில சுயாட்சி குறித்து ராஜ மன்னார் குழு அமைத்து, சட்ட சபையில் அதை விவாதித்து அந்தக் குழுவின் அறிக்கையை இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்தார். அதன்பிறகு அதை அவர் வலியுறுத்தவேயில்லை (மத்தியில் கூட்டாட்சி என்பதற்கு பதிலாக கூட்டணி ஆட்சி என்கிற இலக்கை எட்டிவிட்டது தி.மு.க. ஆனால் அதற்குக் கொடுத்த விலை மாநில சுயாட்சி என்கிற கோஷமா?). 1972இல் காவிரிப் பிரச்சனை சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றார்.

1974இல் தி.மு.க எதிர்த்தபோதும் கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தபோதும் தி.மு.க தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது என்பதால் விமர்சனங்கள் இந்த விசயத்தில் எழுகின்றன (இன்றளவும் தொடரும் தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலுக்காக தமிழக மீனவர்கள் சார்பாக எம்.ஜி.ஆர் காலத்தில் மத்திய அரசு இலங்கையை நிர்பந்தித்தது என்கின்றனர் கருணாநிதியை விமர்சிப்பவர்கள்). இப்போது அவர் கையில் வானளாவிய அதிகாரங்கள் இருக்கின்றன. அவர் நினைத்தால் தமிழகத்தின் சாபக்கேடுகளாகத் தொடரும் இந்தப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும்.
தமிழை மத்திய ஆட்சி மொழியாக கொண்டுவர அவரால் நிர்பந்திக்கவும் முடியும். ஏற்கனவே தமிழ் செம்மொழி என்கிற மத்திய அரசின் அறிவிப்பிலும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.பயன்பாட்டிலேயே இல்லாத சமஸ்கிருதத்தை கல்விப் பட்டியலிலும் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிற தமிழ் மொழியை கலாச்சாரப் பிரிவிலும் சேர்த்து மத்திய அரசு பகடைக்காய் உருட்டியிருக்கிறது. இதில் தமிழுக்கு உரிய மரியாதையை கருணாநிதி பெற்றுத் தரவேண்டும் என்பதுவே தமிழ் ஆர்வலர்களின் கருத்து. மக்கள் ஊழல்மயப்பட்ட அரசியலுக்கு கிளர்ந்தெழுவதை விடுத்து அரசியலையே புறக்கணிக்கத் துவங்கியிருக்கின்றனர். கருணாநிதி என்னும் சமூகப் போராளி இந்த விஷயத்தில் தன்னுடைய கவனத்தை குவித்தே ஆக வேண்டியிருக்கிறது.
ஏனெனில் எதிர்காலத் தலைமுறைக்கு அவர் நிறைய விஷயங்களைத் தந்திருப்பதைப் போல ஒரு நல்ல அரசியல் களத்தையும் உருவாக்கித் தர வேண்டும்.

கருணாநிதி என்கிற போராளி செய்யவேண்டிய வேலைகள் இன்னும் நிறைய மிச்சம் இருக்கத்தான் செய்கின்றன. 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோது, “கூத்தாடிகள் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்” என்றார் முன்னால் முதல்வர் பக்தவத்சலம். அப்போது ஒரு பிரிவு மக்களிடையே அப்படியான தவறான மனநிலை இருக்கவும் செய்தது. ஆனால் இந்த இடைப்பட்ட வருடங்களில் தி.மு.க.வை எல்லோருக்குமான கட்சியாக வளர்த்த பெருமை மற்ற தி.மு.க தலைவர்களுடன் ஒப்பிடுகையில் கருணாநிதியை மட்டுமே சாரும்.

இப்படியான மாற்றத்தை மக்கள் மத்தியில் கொண்டுவந்த அவரால் அவர் மீதான விமர்சனங்களையும் மிக எளிதாகவே சரிசெய்துவிட முடியும். தமிழகத்தின் நீண்ட கால பிரச்சனைகளான காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு போன்றவற்றை சரிசெய்யக்கூடிய சக்தியும் அக்கறையும் அவருக்கு அதிகம் இருக்கிறது என்பதை மக்கள் அறியாமல் இல்லை. அவர் அதைத் தீர்க்க களமிறங்குவதைத்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவேதான் தமிழர்கள் ‘தமிழினத் தலைவர்’ என்ற அடையாளத்தை அவருக்கு தந்திருக்கின்றனர்.

சரவணன் சந்திரன் (கலைஞரின் பொன் விழா கொண்டாட்டத்தின் போது எழுதிய கட்டுரை)