அப்பாவி தமிழர்களுக்கு ஆந்திரா நாயுடு ஹெல்ப் பண்ணுவார்.. பண்ணனும் ! – கருணாநிதி

அப்பாவி தமிழர்களுக்கு ஆந்திரா நாயுடு ஹெல்ப் பண்ணுவார்.. பண்ணனும் ! – கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “”கொண்டவன் கோபியானால், கண்டவனுக்கும் இளக்காரம்” என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அது போலத் தான் தமிழர்களின் நிலை இன்று இருக்கிறது. தமிழர்களுக்குத் தாய் நாட்டில் பிழைக்க வழியில்லை என்று வாழ்வாதாரம் தேடி வெளியே சென்றாலும், அங்கேயும் அடித்து நசுக்கப்படுகின்ற கொடுமை தான் நிலவிவருகிறது. உதாரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து திருப்பதிக்குச் சென்ற 32 தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன், தமிழகச் சட்டப் பேரவையில் கழகத்தின் சார்பில் தம்பி எ.வ. வேலு, கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொடுத்த போதிலும், அதற்கு முதலமைச்சர் தான் பதில் கூற வேண்டுமென்று தெரிவித்து, அது விவாதத்திற்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை. வியாழக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், சனிக்கிழமை சப்தகிரி ரெயிலில் இவர்களைக் கைது செய்ததாக ரேணிகுண்டா காவல் துறையினர் தவறானத் தகவலை தெரிவித்திருக்கிறார்கள்.

naidu aug 7

ஆந்திரப் போலீசார் இவ்வாறு தமிழர்களைக் கைது செய்வது என்பது முதல் முறையல்ல. பொதுவாக தமிழக – ஆந்திர எல்லையில் அமைந்துள்ள சித்துhர், புத்துhர், நகரி, ரேணிகுண்டா ஆகிய பகுதிகளிலே, பேருந்துகளிலும், புகை வண்டிகளிலும் பயணம் செய்யும் தமிழர்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரால் அழைத்துச் சென்று உண்மைக்கு மாறான வழக்குகளைத் தொடுத்து, பிரச்சினை வளையத்திற்குள் சிக்க வைத்து, சித்ரவதைக்கு ஆளாக்குவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

சேஷாசலம் வனப் பகுதியிலே இரண்டு வனத் துறை அதிகாரிகள் கொல்லப் பட்ட பிறகு, இது தொடர்பாக நானுhறுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்து சிறையிலே அடைத்து, அவர்கள் எந்தத் தவறும் செய்யாத போதிலும் சுமார் இரண்டாண்டுகள் சிறையிலே வாடினர். இறுதியில் திருப்பதி நீதிமன்றம் இவர்களை நிரபராதிகள் என்று தெரிவித்து விடுதலை செய்தது. இந்த நிலையில் தான் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பதிக்குப் பயணம் செய்த 32 தமிழர்களைப் பின் தொடர்ந்து சென்ற ரேணிகுண்டா காவல் துறையினர் கரகம்பாடி சாலையில் உள்ள வெங்கடாபுரம் என்ற இடத்திலே கைது செய்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலக் காவல் துறை அதிகாரிகள் இவர்களைச் செய்தியாளர்கள் கூட்டத்தில் வைத்து, அவர்கள் எல்லாம் செம்மரம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னையிலிருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பயணம் செய்த அவர்களைக் கைது செய்திருப்பதாகவும், அவர்களில் 29 பேர், திருவண்ணா மலை மாவட்டத்தையும், 2 பேர் வேலூர் மாவட்டத்தையும், ஒருவர் சென்னையை யும் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்ததோடு, அவர்களிடமிருந்து கோடரிகள், கத்திகள், கடப்பாரைகள் போன்றஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் உண்மைக்கு மாறாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து, ஆந்திர மாநில முதல்வருக்கு, தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகவும் இன்று செய்தியில் வெளிவந்த போதிலும், கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களின் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகியிருக்கின்றனர். ஆந்திர மாநில முதல் அமைச்சர், நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்கள், ஆந்திர மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே நல்லுறவு நின்று நிலைத்திட வேண்டும் என்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்ற முறையில் உடனடியாக இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஆவன செய்ய வேண்டுமென்றும்; ஆந்திர மாநிலக் காவல் துறையினரும் எதிர்காலத்தில் இவ்வாறு தமிழர்களைக் குறி வைத்துத் கைது செய்யும் போக்கினைக் கை விட வேண்டுமென்றும்; மிகுந்த நட்புணர்வோடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அப்பாவித் தமிழர்களுக்கு மனித நேய அடிப்படையில் உதவிட முன்வருவார் என்று பெரிதும் நம்புகின்றேன்!” என்று  தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!