100 நாள் ஆட்சியே படா ரோதனை! – கருணாநிதி கவலை

100 நாள் ஆட்சியே படா ரோதனை! – கருணாநிதி கவலை

அதிமுகவின் ஆட்சி நூறாவது நாளன்று கூட, தூத்துக்குடியில் தேவாலயத்திற்குள் பெண் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆக இந்த அரசால் வேதனைகளின் பட்டியலே அதிகமாக உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

tn sep 2

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நூறு நாள் சாதனை என்ற பெயரில் 25 சாதனைகளை பட்டியலிட்டு அதை நாளிதழ்களில் விளம்பரமாக வரச்செய்தனர். இலவச திட்டங்கள், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவை, நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ள திட்டங்கள், நிர்வாகத்தில் வழக்கமாக நடைபெற வேண்டியவை என அனைத்தும் அந்த சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அம்மா திட்ட முகாம் மூலம் 100 நாட்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 209 மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளதாம். மேலும், 100 நாளில் அமைப்பு சாரா நல வாரியங்களில் 69 ஆயிரத்து 764 பேர் பதிவு செய்து கொண்டார்களாம். அதாவது நாள் ஒன்றுக்கு 697 பேர். பதிவு செய்யப்பட்டதே 68 ஆயிரத்து 794 பேர் என்றிருக்கையில், 99 ஆயிரத்து 703 பேருக்கு நலத்திட்ட உதவிகள் 100 நாட்களில் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ஆனால், அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்த 100 நாட்களில் மக்களுக்கு ஏற்பட்ட வேதனைகளின் பட்டியலே அதிகம். புதிய தொழில் தொடங்க லஞ்சம் கேட்பதில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது என்று நந்தன் நிலக்கேணி தலைமையிலான தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழு சான்றளித்துள்ளது.

தனி நபர் கடன் சுமையில் தமிழகத்தை முதலிடத்தில் வைத்துள்ளார்கள். தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் ஐடி ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டார். பட்டினப்பாக்கத்தில் ஆசிரியை நந்தினி தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். மே மாதம் 28-ம் தேதி கடிதம் எழுதி விட்டு தலைமறைவான வேந்தர் மூவிஸ் மதனை இதுவரை கண்டுபிடிக்க வில்லை.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் மணிமாறன் சரமாரியாக வெட்டப்பட்டார். தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் மத்திய நிபுணர் குழு கூவம் திட்டத்தைக் கை விடுவதாக அறிவித்துள்ளது. வெள்ள நிவாரண நிதிக்காக மத்திய அரசு கொடுத்த ரூ.2 ஆயிரம் கோடியில் , ரூ.600 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவழித்ததாக மத்திய அமைச்சரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த ஆண்டும் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால், குறுவை சாகுபடி 5-வது ஆண்டாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, முதல் முறையாகச் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆட்சி தொடங்கிய 100 நாட்களுக்குள்ளாக, சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் போதே அமைச்சர் நீக்கமும், துறைகள் மாற்றமும் அரங்கேறுகின்றன 3 கட்சிகளை தாண்டி வந்த ஒருவர் கல்வி அமைச்சராகியுள்ளார்.

மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களில் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் மறைமுகத் தேர்தல் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி,பாலாறு, சிறுவாணிப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவில்லை. தலைமைச் செயலாளராக பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரி உட்பட பலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் 79 உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு வாரத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியினரே இல்லாமல் காவல் துறை மானியம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

100 நாட்களில் ஒரு முறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த நூறாவது நாளன்று கூட, தூத்துக்குடியில் தேவாலயத்திற்குள் பெண் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்த நூறு நாட்களுக்குள் இவ்வளவு வேதனைகள் அரங்கேறியுள்ளன. இனி வரும் நாட்களில் வரப் போகிற சோதனைகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!