October 22, 2021

மெட்ரோ ரயில் எங்குது.. அந்தத் திட்டம் எங்குது! – கருணாநிதி

”மெட்ரோ ரெயில் திட்டத்தை செயலுக்குக் கொண்டு வந்தது யார் என்று இங்கேயுள்ள சிறு பிள்ளைகளைக் கேட்டால் கூட, மெட்ரோ என்றால் தி.மு.க. ஆட்சி என்றும், மோனோ என்றால் அ.தி.மு.க. ஆட்சி என்றும் கூறுவார்கள்” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

metro rail jy 24

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி இன்று எழுதியுள்ள கடிதத்தில், “நேற்றையதினம் நம்முடைய முதல்வர் ஜெயலலிதா, வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவிலே பேசும் போதுதான், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வித்திட்டது அ.தி.மு.க. அரசுதான் என்று அங்கே மீண்டும் கூறியுள்ளார். மெட்ரோ ரெயில் திட்டத்தை செயலுக்குக் கொண்டு வந்தது யார் என்று இங்கேயுள்ள சிறு பிள்ளைகளைக் கேட்டால் கூட, மெட்ரோ என்றால் தி.மு.க. ஆட்சி என்றும், மோனோ என்றால் அ.தி.மு.க. ஆட்சி என்றும் கூறுவார்கள்

சென்னையில் “மெட்ரோ ரெயில்” திட்டத்தைச் செயல்படுத்த தி.மு. கழகம் 2006ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தமிழக அமைச்சரவையில் அப்போதுதான் முடிவெடுக்கப்பட்டது. விரைவான, நம்பத்தக்க, வசதியான, திறன்மிக்க, நவீன மற்றும் சிக்கனமான பொதுப்போக்குவரத்து அமைப்பாகவும், பெருகிவரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஒரு நீண்ட காலத் தீர்வாகவும் அமைந்த இத்திட்டம் குறித்து, ஒரு விரிவான திட்ட அறிக்கையினைத் தயாரிக்கக் கழக அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து, இந்தப் பணி டெல்லி மெட்ரோ இரயில் கழகத்திடம் அளிக்கப்பட்டது

இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.14,600 கோடி. திட்டச் செலவில் 59 சதவிகிதம் ஜப்பான் அரசின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவி மூலம் மேற்கொள்ளப்படும். கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே 21-11-2008 அன்று டோக்கியோ நகரில் கையெழுத்தானது. அதுவும் தி.மு. கழக ஆட்சியிலேதான். மத்திய அரசு திட்டச் செலவில் 15 சதவீதத்தை பங்குத் தொகையாகவும், 5 சதவீதத்தைக் கடனாகவும் வழங்கும். மாநில அரசின் பங்கு 15 சதவிகிதம் மற்றும் 5.78 சதவிகித சார்நிலைக் கடனாகவும் வழங்கும். பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 28-1-2009 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

2011ஆம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று படித்த ஆளுநர் அறிக்கையிலேயே, “சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ இரயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவு படுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க “மோனோ ரெயில்” திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்களே தவிர, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்கப்போவதாகக் கூறவில்லை.

16-6-2012 தேதிய “தினமணி”யில் 34 இடங்களில் மோனோ ரயில் நிலையங்கள் என்றும், அமைச்சர் தலைமையில் 2 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை என்றும் செய்தி வந்தது. மொத்தத்தில் “மோனோ” ரெயில் திட்டமே, தி.மு. கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட “மெட்ரோ” ரெயில் திட்டத்தினை ஏற்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் வழக்கமான காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிவிக்கப்பட்ட போட்டித் திட்டம்.

முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டம் கூடாது என்றும், மோனோ ரெயில் திட்டத்தைத் தான் நடைமுறைப்படுத்தப் போவதாகவும் கூறியது உண்மைதான். ஆனால் பின்னர் நிலைமையை உணர்ந்து கொண்டு, ஆளுநர் உரையிலேயே, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்கள். “மெட்ரோ” திட்டத்தைத் தொடக்கத்தில் வரவேற்காத ஜெயலலிதா பின்னர் பிரதமரைச் சந்தித்த நேரத்தில், மெட்ரோ ரெயிலின் 76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரண்டாம் பாகப் பணிகளை நிறைவேற்ற 36 ஆயிரத்து 100 கோடி தேவைப்படும் நிலையில், மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்று தெரிவித்தது உண்மைதான்” என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.