September 18, 2021

ஏமாற்றுகிறவர்களுக்குத் தான் இது காலம்! – கருணாநிதி காட்டம்!

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில், “மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு ஆட்சி செய்வதால் தான் தொடர்ந்து மக்கள் என்னை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்கியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? ஜெயலலிதா எந்தச் சக்தியை மூலதனமாகக் கொண்டு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். மக்கள் சக்திதான் மூலதனம் என்று ஜெயலலிதா கூறுவது அப்பட்டமான பொய் என்பதை மக்களே உணர்வார்கள். மக்கள் சக்திதான் மூலதனம் என்றால், 98 இடங்களில் அதிமுக தோற்றிருக்கிறதே, அங்கெல்லாம் மக்கள் சக்தி அவர்கள் பக்கம் இல்லை என்பது உண்மை தானே?.

karuna june 27

அதிமுக அரசில் தொடங்கப்படும் திட்டங்களுக்கெல்லாம் “அம்மா” பெயரை வைப்பது பற்றி?

இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தமிழகச் சட்டப் பேரவையில் 11-1-2010 அன்று பேசும்போது, “ஒரு முதல் அமைச்சரின் பெயர் ஒரு திட்டத்திற்கு சூட்டப்படுவது முறையற்ற செயலாகும்”” என்று குறிப்பிட்டார். ஒரு திட்டத்திற்கு சூட்டப்படுவது தானே முறையற்ற செயல் என்பதற்காகத்தான் தற்போது அம்மா 5 ரூபாய் மதிய உணவு, அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், ‘’அம்மா’’ உணவகம், ‘’அம்மா’’ குடிநீர், ‘’ ‘’அம்மா’’ அமுதம் பல்பொருள் அங்காடிகள், அம்மா விதைகள், அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம் என்று பல திட்டங்களுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள் போலும்.

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது என்று பேசியிருக்கிறாரே?

முதல்வர் ஜெயலலிதாவின் உரை வெளிவந்த அதே நாள் நாளேடுகளில் வந்துள்ள சில செய்திகளைக் கூற வேண்டுமானால், சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை; தளி அருகே வீட்டில் 4 பேரைக் கட்டிப் போட்டு 25 பவுன் நகை, 26 ஆயிரம் ரூபாய் கொள்ளை; ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் தாய், 3 மகள்கள் கொடூரக் கொலை; சென்னை நுங்கம்பாக்கம், புகைவண்டி நிலையத்தில் அதிகாலையில் பெண் என்ஜினியர் சுவாதி கொலை; கேளம்பாக்கம் அருகே வாலிபர் ராஜா கழுத்து அறுக்கப்பட்டு கொலை; அம்பத் தூரில் கிணற்றில் தள்ளி தாய் கொலை என்று 9 கொலைகள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில், திருத்தங்கலில் உள்ள பெருமாள் கோவில் திருவிழா பத்திரிகையில் அமைச்சர் பெயர் இடம் பெறவில்லை என்ப தற்காக அந்த கோவில் செயல் அலுவலரை அதிமுகவினர் தாக்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு இவைதான் அடையாளமா?

2015ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் அறிவித்த முதலீடுகள் பற்றியெல்லாம் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கியிருக்கிறாரே?

2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அந்த மாநாட்டில் அறிவித்தார். கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஓடி விட்டன. ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு தற்போது பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா 23 ஆயிரத்து 258 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு பலர் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர் என்று கூறியிருக்கிறார். அதாவது முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததில் 9.60 சதவித முதலீடுகள் தான் செய்யப்பட்டுள்ளன. மீதி 90 சதவித முதலீடுகள் இன்னும் வரவில்லை. எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றார்கள் என்று அறுதியாகச் சொல்லவில்லை.

மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காகச் சென்ற முதல்வர், மத்திய நிதி அமைச்சரைச் சந்திக்கவே இல்லையே?

மத்திய நிதியமைச்சர் அப்போது டெல்லியிலேயே இல்லையாம். ஆனால் நிதி கேட்பதற்காக டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய தமிழக நிதி அமைச்சரையே அழைத்துச் செல்லவில்லையே. நிதிச் செயலாளர் கூடச் சென்றதாக தெரியவில்லை. ஆளுநர் உரையில், “அடுத்த ஐந்தாண்டுகளில் 13,000 மெகாவாட் அனல் மின் திறனும், 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின் திறனும் கொண்ட அலகுகள் கூடுதலாக நிறுவப்பட்டு, தமிழ்நாட்டின் மின் உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கப்படும்” என்று சொல்லி யிருக்கிறார்களே? மொத்தம் 17,340 மெகாவாட் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். எப்படி அறிவிப்பு? எப்படி செயலாக்கம்? சொல்லுக்கும், செயலுக்கும் வெகு தூரம்! அதுதான் அதிமுக ஆட்சி.

மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல் ஆகியவை குறித்து ஆளுநர் உரையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லையே?

2010ம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவையில் ஆற்றப்பட்ட ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, “மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல் ஆகியவை குறித்து ஆளுநர் உரையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அப்படியென்றால், அதைக் கட்டுப்படுத்தும் எண்ணமே இந்த அரசுக்கு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேள்வி கேட்டார். ஜெயலலிதா அப்போது பேசியதையே, இந்தக்கேள்விக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.

அதிமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகளை மூடி விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?

மதுவிலக்கை “படிப்படியாக” கொண்டு வருகிறார்கள். இந்தச் செய்தியை இன்று வெளியிட்டுள்ள ஒரு நாளேடு, “ மக்கள் போராட்டம் நடத்திய பகுதிகளில், 81 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. கப்பம் கிடைக்காமல் போய்விடும் என்பதால், விற்பனை குறைந்த கடைகளை மூடும் நாடகத்தை நடத்தி, டாஸ்மாக் அதிகாரிகள், முதல்வரை ஏமாற்றி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்” என்று அந்த செய்தி தொடருகிறது. இப்படி ஏமாற்றுகிறவர்களுக்குத் தான் இது காலம்”. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.