இதுக்குதான் அசெம்பிளி நடவடிக்கைகளை ‘லைவ் ரிலே’ பண்ணுங்கங்கறோம்! – கருணாநிதி

“தற்போது, சட்டப்பேரவையைச் சபாநாயகர் சர்வாதிகார ரீதியாக நடத்திச்செல்லும் விதம்-அ.தி.மு.க.வினர் பேரவையே தமது தனி உடைமை என்ற எண்ணத்தில் எதையும் செய்வது, என்ன வேண்டுமானாலும் பேசுவது என்று நடந்து கொள்ளும் முறை-ஆகியவற்றின் காரணமாக, சட்டசபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்கிறார்கள், என்ன பிரச்சினைகளை பேசுகிறார்கள் என்பதை முழுவதுமாக தெரிந்துகொள்ளும் உரிமை வாக்காளப் பெருமக்களுக்கு உண்டு”என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

tn aug 21

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஆளுங்கட்சி உறுப்பினர்களோ, அமைச்சர்களோ ஜனநாயகத்துக்கு விரோதமாகவும், உண்மைக்கு மாறாகவும் பேசி, அதுபற்றி எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் நேரத்தில், சபாநாயகர் நடவடிக்கை குறிப்பை படித்து பார்த்து விட்டு தீர்ப்பு வழங்குவதாக கூறுகிறாரே தவிர, எந்த தீர்ப்பும் கூறுவதில்லை. “நாடாளுமன்றம் மற்றும் பல மாநில சட்டமன்ற கூட்டங்களின் கூட்ட நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல் தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்” என்று 2016 தமிழக சட்டப்பேரவைக் கான தேர்தலையொட்டி தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது. தற்போது, சட்டப்பேரவையைச் சபாநாயகர் சர்வாதிகார ரீதியாக நடத்திச்செல்லும் விதம்-அ.தி.மு.க.வினர் பேரவையே தமது தனி உடைமை என்ற எண்ணத்தில் எதையும் செய்வது, என்ன வேண்டுமானாலும் பேசுவது என்று நடந்து கொள்ளும் முறை-ஆகியவற்றின் காரணமாக, சட்டசபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்கிறார்கள், என்ன பிரச்சினைகளை பேசுகிறார்கள் என்பதை முழுவதுமாக தெரிந்துகொள்ளும் உரிமை வாக்காளப் பெருமக்களுக்கு உண்டு. எனவே எந்த சாக்குபோக்கும் சொல்லி இனியும் காலம் கடத்தாமல் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து மக்களுக்கு இருக்கும் உரிமையைப் பாதுகாத்திட தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும். 17-8-2016 அன்று பேரவையிலே அவசர அவசரமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றியிருக்கிறார்கள். ஒரு வார காலம் இடைநீக்கம் செய்து உடனடியாக தீர்மானம் படிக்கப்படுகிறது என்றால், இவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளா என்று நினைக்கத்தோன்றுகிறது. அதுவும் ஒரு வார காலம் இடைநீக்கம் எதற்காக என்று நினைக்கும்போது, காவல்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது, அதைச் சந்திக்க இயலாது என்பதற்காகத்தானா என்றும் எண்ணிடத்தோன்றுகிறது.

இதையெல்லாம் மக்கள் மன்றத்தின் முன் எடுத்துக் கூறுவதற்காகத்தான் வருகின்ற 22-ந் தேதியன்று (நாளை) “தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த கூட்டத்தில் நானும், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் உரையாற்றவிருக்கிறோம். 25-ந் தேதியன்று மதுரையிலும், 26-ந் தேதியன்று திருச்சியிலும் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் பேசவிருக்கிறார்கள். மேலும் விரிவாக பேரவை நிகழ்ச்சிகள் குறித்து தி.மு.க. உறுப்பினர்கள் ஆங்காங்கு நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு விளக்கமளிப்பார்கள். அந்த கூட்டங்களை சிறப்பாக நடத்தித்தர வேண்டுமென்றும், தமிழக சட்டமன்றத்தில் என்னதான் நடைபெறுகிறது என்பதை பொதுமக்களுக்கு விளக்கிட வேண்டுமென்றும் கட்சி தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க சலிப்பின்றி போராடுவோம்” என கருணாநிதி தெரிவித்துள்ளார்.