March 26, 2023

தீரன் அதிகாரம் ஒன்று – பட அனுபவம் குறித்து கார்த்தி டீடெய்ல் பேட்டி!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. வினோத் இயக்கியுள்ள இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இணைந்துளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழிலும் கூடவே தெலுங்கில் ‘காக்கி’ என்ற பெயரில் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு பரபரப்பாகி இயங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி-யிடம் இந்த படம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது “மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக்கொள்ள ஃபிட்னஸையும், நான் பார்த்த போலீஸ் அதிகாரிகளின் குணாதிசயங்கள் மற்றும் உடல்மொழி யையும் பயன்படுத்தியுள்ளேன். இப்போதுள்ள இளம் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல் தான் இருக்கிறார்கள். விட்டால் அவர்கள் எல்லாம் சினிமாவில் டூயட்டே பாடலாம். நிஜமாக இன்றைய போலீஸ் அதிகாரிகளின் தோற்றம் எப்படி இருக்குமோ, அப்படி தான் என்னுடைய தோற்றமும் இந்த படத்தில் இருக்கும்.

இந்த படத்துக்காக ஆரம்பத்தில் எங்க எல்லாருக்குமே சல்யூட் முதற் கொண்டு பயிற்சி கொடுத்தாங்க. என்கிட்ட எப்படி பேசணும், நான் எப்படி நடந்துக்கணும்னு நிறைய பயிற்சி. காவல்துறை அதிகாரிகளிடமே நேரடியா கத்துக்கிட்டோம். அங்க உண்மையிலேயே டி.எஸ்.பியா பயிற்சியில் இருந்தவங்க, ‘சார் நீங்க இவ்ளோ ஈசியா யூனிஃபார்ம் போட்டுட்டீங்க’னு கிண்டல் செஞ்சாங்க. ‘ஏங்க… நான் போட்டுட்டு திருப்பிக் கொடுத்துவேன். உங்களுக்கு அப்படி இல்லையே’னு சொன்னேன். அந்த அனுபவம் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது. அங்க ஒருத்தர், ’சூர்யா அண்ணாவோட ‘காக்க காக்க’ அன்புச்செல்வன் பார்த்துதான் நான் போலீஸ் ஆகவே நினைச்சேன்’னு சொன்னார். இப்படி எவ்வளவோ நிகழ்வுகள் அந்த ட்ரெய்னிங் ப்ரீயட்ல கிடைச்சது.

இதுக்கிடையிலே நம்ம எல்லாரும் போலீஸை சூப்பர் மேன் போன்றும், வேற்று கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ, தம்பியோ அல்லது நண்பர்களோ போலீஸாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போலீஸ் அதிகாரிகள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது. போலீஸ் டிரெயினிங்கில் அவர்கள் போலீஸாக மாற மட்டும் தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது. அவர்கள் எப்படிபட்ட போலீஸாக இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது.

நான் ‘தீரன்’ படத்துக்காக சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்று தான் முயற்சி செய்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால், அவர்கள் சூழ்நிலையின் காரணமாக போலீஸ் அதிகாரியாக பணியாற்ற துவங்கியுள்ளார். முதலில் குற்றத்தை கண்டால் அவருக்கு கோபம் தான் வருமாம். பதவியேற்றதும் அவர் கண் முன் நடக்கும் குற்றங்களை தட்டி கேட்கவும் முடிந்துள்ளது. இதனாலையே போலீஸ் வேலையை அதிகமாக நேசித்து குற்றங்கள் நடப்பதை கட்டுபடுத்தியுள்ளார். ‘தீரன்’-யில் முற்றிலும் உண்மையான ஒரு போலீஸ் அதிகாரியை நீங்கள் பார்க்கலாம். சாதாரணமாக போலீஸ் அதிகாரி ஒருவர் கேஸ் ஃபைலை படிக்கும் போது எப்படி ரியாக்ட் செய்வாரோ, அதே அளவு தான் தீரனும் இந்த படத்தில் ரியாக்ட் செய்வார். இதை நான் ‘சிறுத்தை’ படத்திற்காக ஒரு போலீஸ் அதிகாரியை சந்தித்தபோது, சாதாரணமாக எதையும் எதிர்க்கொள்ளும் அவருடைய தன்மை எனக்கு பிடித்திருந்தது. அதை தான் பல காட்சிகளில் ‘தீரன்’-யில் நான் கடைபிடித்துள்ளேன். இயக்குநருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

‘தீரன்’-யில் நீங்கள் வேறு ஒரு கோணத்தில் போலீஸ் அதிகாரிகளை பார்ப்பீர்கள். போலீஸ் அதிகாரிகளுக்கு தடங்கல் என்பது கிரிமினல் பக்கத்தில் இருந்து மட்டும் வராது. அதிகாரிகளிடமிருந்து, சமூகத்திடமிருந்து கூட வரும். இதையெல்லாம் தாண்டி தான் ஒவ்வொரு கேஸையும் அதிகாரிகள் கையாள வேண்டியுள்ளது. இதை சொல்லும் போது சாதாரணமாக இருக்கும் திரையில் பார்க்கும் போது உங்களை வியக்க வைக்கும். இது 1995 – 2005 வரைக்கும் நடந்த உண்மை சம்பவத்தை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கதையாகும். அதை ஒரு போலீஸ் அதிகாரியின் வழ்க்கையின் மூலம் கூறியுள்ளோம்.

இதன் கதை என்னான்னு கேட்டீங்கணாரொம்ப வருஷமா யாரு குற்றம் பண்றாங்க என்பதே தெரியாம இருந்த கேஸ்ஸை எப்படிக் கண்டுபிடிச்சு முடிக்கறாங்க என்பதுதான் படம். பீரியட் ஃப்லிம்தான். இந்த செல்போன்லாமே 2000க்கு மேலதான் வந்துச்சு. அப்படிப்பட்ட நிலையில் டேட்டா கனெக்‌ஷன் இல்லாம ஒருத்தரைத் தொடர்பு கொள்றதில் இருக்கற சிக்கல்கள், சவால்கள் எல்லாம் தாண்டி எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க என்பது உண்மைக்கு நெருக்கமா சொல்லப்பட்டுருக்கு. இன்னொரு விஷயம்.. ராஜஸ்தான் மாதிரியான ஒரு FLAT LAND-யில் நாம் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்ணுக்குள் மறைந்து தான் பிடிக்க முடியும், அதனால் தான் படத்தில் அப்படி ஒரு காட்சி வைத்துள்ளோம். அது கிராஃபிக்ஸ் அல்ல நிஜம் தான்” என்றார்