கர்நாடகா எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் : சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!

கர்நாடகா எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் : சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!

கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், சபாநாயகர் உடடினயாக முடிவு எடுக்க மறுத்து விட்டதால், தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும் என உத்தரவிட கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் ராஜினாமாவை ஏற்க கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிடமுடியாது. ஆனால் அதே சமயம் முதலமைச்சரின் நம்பிக்கை கோரும் தீர்மானம் பரிசீலிக்கப்படும் போது சட்டமன்றக் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என எம்எல்ஏக்கள் 15 பேரை யாரும் நிர்பந்தம் செய்யக்கூடாது என இன்று தெரிவித்துள்ளது.

களேபரத்துக்கு பேர் போன கர்நாடகத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதசார் பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களது முறை யீட்டை கடந்த 12ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்து, எம்எல்ஏக் களின் ராஜினாமா கடிதங்கள் மீது ஜூலை 16ம் தேதி (நேற்று) வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

அதே சமயம் கே.சுதாகர், என். நாகராஜ், முனிரத்தினா, ரோஷன் பெய்க், ஆனந்த் சிங் ஆகிய மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்கள் ராஜினாமா கடிதங்களையும் ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தர விட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை அடுத்து 15 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் நேற்று நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள், இந்த வழக்கு மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக தெரிவித்தனர். அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளித்தனர்.

அதன்படி ”கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிடமுடியாது. ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு கால அவகாசம் எதையும் நிர்ணயிக்கவும் முடியாது. அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாக்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் தன் விருப்பப்படி சபாநாயகர் முடிவு எடுக்கலாம். சபாநாயகரின் முடிவை சுப்ரீம் கோர்ட்டில் அவர் தெரிவிக்கவேண்டும்” என்று நீதிபதிகள் இன்று தெரிவித்தனர்.

மேலும்,”வாக்கெடுப்பில் பங்கேற்க அந்த அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது. கர்நாடக சட்டசபையில் நாளை நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்துகொள்வது, கலந்து கொள்ளாதது எம்எல்ஏக்களின் விருப்பம். ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகரின் முடிவு அறிவித்த பிறகே, அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடத்த வேண்டும். ” என்றும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!