September 21, 2021

தனிக் கொடி அறிமுகப்படுத்திய கர்நாடக அரசு! – மத்திய அரசு மெளனம்!

கர்நாடக மாநிலத்திற்கு என சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலான கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகப்படுத்தினார். இதற்கு ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மாநிலத்திற்கு என தனிக்கொடி ஒன்றை ஏற்படுத்த கடந்த 2017 ல் 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு ஆலோசனை நடத்தி கொடியை வடிவமைத்து மாநில அரசிடம் கடந்த பிப்ரவரியில் ஒப்படைத்தது. அந்த கொடியை பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சித்தராமையா அறிமுகபடுத்தினார்.

மேலே மஞ்சள் நிறம், நடுவில் வெள்ளை நிறம், கீழே சிவப்பு நிறத்தில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடுவில் கர்நாடக அரசின் சின்னமும் இடம்பெற்றுள்ளது. தற்போது, இந்த கொடிக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒப்பக்கொள்ளுமா

மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்து தனிக்கொடி பெற்ற 2வது மாநிலம் கர்நாடகா. ஒரு மாநிலம் இப்படி தனிக்கொடி கொண்டு வருவதை மத்திய அரசு ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலமும் இப்படி கொடியைக் கொண்டு வந்தால், அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்தாகும் என மத்திய அரசு கருதுகிறது