September 18, 2021

லிங்காயத் சமூகத்தினருக்கு தனி மத அடையாளம்! – கர்நாடகா அரசு அனுமதி!

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. திரிபுராவில் வெற்றி பெற்றதும் எங்களின் அடுத்த இலக்கு கர்நாடகாவும், கேரளாவும்தான் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பகிரங்கமாக அறிவித்து இருப்பதால் நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸூம், மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் பொருட்டு, கர்நாடகாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, மக்களை கவரும் விதமாகவும், உணர்வுப்பூர்மாகவும் சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி அறிவிக்கப்பட்டு, மத்திய அரசிடமும் ஒப்புதல் கோரி உள்ளது.

இந்நிலையில், கர்நாடக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் லிங்காயத் விவகாரத்தில் முக்கிய முடிவை காங்கிரஸ் எடுத்து உள்ளது. லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அடையாளம் வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. புத்த, சீக்கிய மதங்களை போல் லிங்காயத் சமூகம் உலக அளவில் ஒரு மதமாக அங்கீகரிக்கப் பட்டு அறிவிக்கப்பட வேண்டும் எனவும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் யாரும் இதில் தலையிடக்கூடாது எனவும் அவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஆனால் அவர்களின் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அவர்களின் கோரிக்கை அண்மை காலமாக வலுப்பெற தொடங்கியது. அதனையடுத்து, லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்து மத்திய அரசுக்குm பரிந்துரை செய்துள்ளது. உடனே இது கர்நாடகாவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுவரை பாஜகவிற்கு ஆதரவாக இருந்து வந்த லிங்காயத் சமூகத்தினரின் ஓட்டு வங்கியை கவரும் வகையில் அவர்களின் தனி மத கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றியாக அறுவடை செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதே சமயம் தற்போது லிங்காயத் விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் காங்கிரஸை சமாளிக்கும் விதமாக பாஜக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கை வைக்கலாம் என்ற கருத்தும் பரவலாக எழுந்து வருகிறது.