மே 12-ல் நடக்கப் போகும் கர்நாடகா தேர்தல் ;யாருக்கு?, ஏன்? எப்படி வாய்ப்பு? – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

மே 12-ல் நடக்கப் போகும் கர்நாடகா தேர்தல் ;யாருக்கு?, ஏன்? எப்படி வாய்ப்பு? – கம்ப்ளீட் ரிப்போர்ட்!
கர்நாடகா  மாநிலத்தில்  சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவிக்காலம் மே 28 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடக்கும் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது.  இது குறித்து  தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நிருபர்களை சந்தித்த போது, ”கர்நாடகாவில் இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. ஓட்டுப்பதிவு நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைவாக செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்படும். தேர்தலில் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை அறியும் விவிபிடி எந்திரம் பயன்படுத்தப்படும். வேட்பாளர்களின் செலவீனத்தை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் செலவாக ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். கன்னட மொழியிலும் வாக்குச்சீட்டு விவரங்கள் அளிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும். மத்திய மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்” என்று தெரிவித்தார்.

அதே சமயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை எனவும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றலாம் எனவும் தேர்தல் ஆணையர் கூறினார். அதாவது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான நடவடிக்கை, தேர்தல் நடத்தை விதிமுறையில் வராது. காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறுக்கிட மாட்டோம் என கூறினார்.

வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள்: ஏப்ரல் 17

கடைசி நாள்: ஏப்ரல் 24
வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 25
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 27
ஓட்டுப்பதிவு: மே 12
ஓட்டு எண்ணிக்கை: மே 15

இதனிடையே தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு முன்னதாகவே, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை அதிகாரி அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் மே 12-ம் தேதி கர்நாடக மாநில தேர்தல் நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மே 18-ம் தேதி நடைபெறும் எனவும் பதிவிட்டிருந்தார். தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கட்டுக்குள் வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை அதிகாரியின் ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் தேதி முன்னதாகவே கசிந்தது குறித்து விசாரித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தென்னகத்தில் நடக்கும் இந்தத் தேர்தலை ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு கவுரவ பிரச்சினையாக பார்க்க தொடங்கி உள்ளன. எனவே தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றுவதில் அரசியல் கட்சிகள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி இந்தமுறை மாநிலம் முழுவதும் 4.96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் ஒரு லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர மொத்த வாக்காளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் 40 வயதிற்கு உட்பட்ட இளம்வாக்காளர்கள் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது. எனவே அரசியல் கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இந்த இளைய தலைமுறையினர் உருவெடுத்து உள்ளனர். இதனால் கொஞ்சம் உஷார் அடைந்து உள்ள அரசியல் கட்சிகள் இளம் வாக்காளர்களை கவர முகநூல் (பேஸ்புக்), ட்விட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்து வருகின்றன.கடந்த சில வாரங்களாகவே இந்த பிரசாரங்களில் கட்சிகளை சேர்ந்தவர்கள் இடையேயான சூடான விவாதங்கள், அரசியல் களம், களைக்கட்ட தொடங்கிவிட்டன. குறிப்பாக இந்த கர்நாடகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 3.5 கோடி பேர் ‘ஸ்மார்ட் போனை‘ பயன்படுத்து வதாகவும், அதில் 3 கோடி பேர் இணையதளத்தை பயன்படுத்துவதாகவும் தனியார் நிறுவனத்தின் சர்வே தெரிவிக்கிறது. இதனால் தான் அரசியல் கட்சிகள் இதுபோன்ற பிரசாரத்தை முன்னெடுக்க காரணம் என கூறப்படுகிறது. மாநிலத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த பிரசாரத்தை முதன்முதலில் பா.ஜனதா கட்சி தொடங்கியது. இதற்காக பெங்களூரு கன்னிகாம்ரோடு பகுதியில் தனி அலுவலகத்தை அமைத்த பா.ஜனதா கட்சி வாட்ஸ்-அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற பிரசாரங்களுக்கு இளைஞர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் முறையே பெங்களூரு மல்லேசுவரம், சேஷாத்திரிபுரம் ஆகிய பகுதிகளில் வலைத்தள பிரசாரத்திற்காக தனி அலுவலகத்தை அமைத்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சமூக வலைத்தள பிரசாரத்தை முதன் முதலில் தொடங்கிய பா.ஜனதா கட்சி சார்பில் இதுவரை சுமார் 23 ஆயிரம் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி உள்ளது தெரியவந்து உள்ளது. இதே போல் ஜனதாதளம்(எஸ்) சார்பில் 3,000 வாட்ஸ்-அப் குழுக்களையும், காங்கிரஸ் கட்சியினர் தொடங்கி உள்ள வாட்ஸ்-அப் பிரசார குழுவில் இதுவரை 12 லட்சம் பேர் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமூகவலைத்தள தேர்தல் பிரசாரம் குறித்து ஜனதாதளம்(எஸ்) கட்சியின் சமூக வலைத்தள பிரிவுக்கான செயல் தலைவர் சோமசேகர் கூறும்போது, கட்சியின் கொள்கைகள், முந்தைய சாதனைகள் குறித்து இளைஞர் மத்தியில் சுலபமாக கொண்டு செல்ல முடிகிறது. ஆனால் வெற்றியை குறிக்கோளாக வைத்து செய்து வரும் சில தவறான வலைத்தள பிரசாரங்களால் சில இடங்களில் இரு கட்சிகளில் உள்ள தொண்டர்கள் மத்தியில் மோதல்களும் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இது வரை சுவர் விளம்பரம், துண்டு பிரசுரங்கள் மற்றும் பேப்பர்கள் மூலம் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்த காலங்கள் மாறி தற்போது சமூக வலைத்தளங்களை தங்களது பிரசார களமாக அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் காலம் உருவாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அங்குள்ள அரசியல் நிலவரம் குறித்து நம் சிறப்பு நிருபர் கட்டிங் கண்ணையா, “நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தாலும், தற்போது தென் மாநிலங்களில் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதனால் மீண்டும் எடியூரப்பாவை முதல்வராக்கும் திட்டத்தை பாஜக தலைமை தவிர்த்து வருகிறது. இதனால் கடந்த மூன்று மாதம் எடியூரப்பாவை முன்னிலை படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு பாஜக தலைமை மோடியை முன்னிறுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு எடியூரப்பாவால் பாஜக எதிர்ப்பார்க்கும் வாக்கு வங்கியை பெற முடியாது என்று தலைமை கருதுவதே காரணம்.

11 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலையெழுத்தையும் இந்த தேர்தல் முடிவு செய்யும் என்பதால் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரங்கள் வழக்கத்தை விட உத்வேகத்துடன் நடைபெறும் என்று கருதப்படுகிறது. 2008ம் ஆண்டு ஜனதாதளத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்ததன் விளைவாக ஆட்சியை பிடித்த பாஜக, பெரும் ஊழல் குற்றச்சாட்டினால் காங்கிரஸிடம் 2013ம் ஆண்டு ஆட்சியை இழந்தது.

தனது ஆட்சி காலத்தில் முன்னெடுத்து செயல்படுத்திய நலத்திட்டங்களை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சித்தராமைய்யா, சிறுபான்மையினரிடமும் செல்வாக்கையும் பெற்றுள்ளதால் அவர் பெருமளவு வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக லிங்காயத் சமூகத்தினருக்கு தனிமத அந்தஸ்தை சித்தராமைய்யா அரசு பெற்று தந்ததால், அவர்களின் முழு ஆதரவும் காங்கிரஸுக்கு இருக்கும் என்றும் கருதப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பிலும், காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்ட தனிப்பட்ட கருத்து கணிப்பிலும் காங்கிரஸுக்கு எதிராக மக்களின் கோபம் பெருமளவு இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சித்தராமைய்யாவிற்கு தலித், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாக்குகள் அதிகளவு கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டாலும், அவற்றை சித்தராமைய்யாவுடன் தொடர்பு படுத்த பாஜக தவறி விட்டது. இது சித்தராமைய்யாவுக்கு சாதகமாக கருதப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவினத்தை சேர்ந்த தலைவராக பார்க்கப்பட்டு வந்த சித்தராமைய்யா, தற்போது கோயில்கள் மற்றும் ஆசரமங்களுக்கு சென்று உயர்தர வகுப்பினரையும் கவர்ந்து வருகிறார்.

எடியூரப்பா – சித்தராமைய்யா இடையேயான போட்டியை முன்னெடுத்து செல்ல தவிர்க்கும் பாஜக தலைமை, தற்போது மோடி – சித்தராமைய்யா இடையேயான போட்டியாக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிறுத்தி வருகிறது. கடந்த 2 மாதமாக ராகுல் காந்தி தொடர்ந்து கர்நாடக முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனால் காங்கிரஸுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளதாகவும ்கருதப்படுகிறது. இந்நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கர்நாடகத்தில் மோடி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

மதசார்பற்ற ஜனதாதளத்தை பாஜகவின் “பி” அணி என்று பகிரங்கமாக அழைத்து வரும் காங்கிரஸ், விரைவில் இரு கட்சியினரும் கூட்டணி அமைப்பார்கள் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது. இதே அலை தொடர்ந்தால் கண்டிப்பாக முப்பது ஆண்டுகால வரலாற்றை சித்தராமைய்யா மாற்றி எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார்.

அடிசினல் ரிப்போர்ட்:

இந்த நிலையில் சி-ஃபோர் அமைப்பு, இம்மாதம் 1ம் தேதி முதல், 25ம் தேதிவரை 154 தொகுதிகளில் ஒரு சர்வே நடத்தியுள்ளது. இந்த சர்வேயில், 22,357 வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விடவும் கூடுதலாக 9 சதவீத வாக்குகளை ஈர்த்து மொத்தம் 46 சதவீத வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பாஜக 31 சதவீத வாக்குகளைத்தான் பெற முடியும் என்றும், ம.ஜ.த 16 சதவீத வாக்குகளை பெறும் என்றும் அந்த கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், காங்கிரஸ் 126 தொகுதிகளை வென்று அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்றும், பாஜக தற்போதுள்ள 43 எம்எல்ஏக்கள் என்ற நிலையில் இருந்து சற்று முன்னேறி 70 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ம.ஜ.த 27 தொகுதிகளை வெல்லும் எனவும் அந்த சர்வே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!